ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன். முகநூல்
ஹெல்த்

ஜங்க் ஃபுட்ஸ் அதிகம் சாப்பிடறீங்களா? இத கேட்டால் இப்போவே நிறுத்திடுவீங்க!

ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் தீமை என்ன என்று விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆரோக்கியமாக வீட்டில் செய்யப்படும் உணவுகளை தவிர்த்து கடைகளில் கிடைக்கும் துரித உணவுகள், சாட் வகைகள், பீட்ஸா, பர்கர், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், கார்பனேட்டட் குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதற்குதான் நம்மில் பலருக்கு ஆர்வம் அதிகம்.

உணவை மருந்தாக்கி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். உண்ணும் ஒவ்வொரு உணவும் ஆரோக்கியம் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். விதவிதமாக உணவுகளை உண்டாலும் அவர்கள் யாரும் ஆரோக்கியத்தில் எந்த ஒரு சமரசமும் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு என்னவென்றால், ஜங்க் ஃபுட்ஸ்தான். இதனால் உடலுக்கு ஏற்படும் தீமை என்ன? விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்...

தாரணி கிருஷ்ணன் உணவியல் நிபுணர்

ஜங்க் ஃபூட்ஸ்

  • ஜங்க் ஃபூட்ஸ் (Junk Food) என்பது பொதுவாக மிகவும் சுவை நிறைந்த, எளிதாக கிடைக்கக்கூடிய, குறைந்த நேரத்தில் அதிக எண்ணெய் / சர்க்கரை / உப்பு கொண்டு பதப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக தயாரிக்கப்படும் உணவுகளைக் குறிக்கின்றது.

  • இது நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுக்குப் பதிலாக அதிக கலோரி, கொழுப்பு, சர்க்கரை, மற்றும் சோடியம் ஆகியவற்றை கொண்ட உணவாகும்.

  • ஜங்க் ஃபூட்ஸ் இந்த அளவுக்கு கவனம் பெற காரணம், அதன் சுவைதான். பல்வேறு சுவை ஊட்டிகள் (flavor enhancers) அவற்றை பயன்படுத்தப்படுவதால், அது நமது சுவையும், விருப்பத்தையும் அதிகரிக்கின்றது. ஆனால், உடலில் இவை தீமையையே ஏற்படுத்தும்.

பொதுவாக, பர்கர், பீட்சா, ஃபிரெஞ்சு பிரைஸ், ரோல்ஸ் போன்றவை அதிகளவில் உண்ணப்படும் junk உணவுகளாக உள்ளன. இவற்றில் அடிப்படையில் பீட்சா என்பது இத்தாலி நாட்டை சேர்ந்த உணவு. இத்தாலி நாட்டின் முறைப்படி சமைக்கப்படும் பீட்சாவை பொறுத்தவரை சுத்தமான ஆலீவ் எண்ணெய்களை பயன்படுத்தி, ஆரோக்கியமாக சமைக்கப்படும். அதில் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கும்.

ஆனால், அமெரிக்க வடிவில் தயாரிக்கப்படும் பீட்சாவானது அதிக தடிமனாகவும், மைதா, எண்ணெய் ஆகியவற்றின் அளவும் அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. நமது இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்கா முறையில் தயாரிக்கப்படும் பீட்சாவைதான் தயாரிக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல.. அதிகளவு காரசாரமான மசாலாக்களும் இந்தியாவில் சேர்க்கப்படுகின்றன. இது உடல் எடை அதிகரிக்க காரணமாக உருவாகிறது. எனவே, இதுப்போன்ற துரித உணவுகளை உண்ணாமல் இருப்பதே ஆரோக்கியமான ஒன்று.

ஜங்க் ஃபுட்ஸ் உடல் நலத்திற்கு ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள்:

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சிக்கல்கள்:

இந்தியாவில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதிக ஜங்க் ஃபுட்ஸ் உண்பதால், உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பலருக்கும் ஏற்படுகிறது. எனவே துரித உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதே உடலுக்கு நல்லது.

என்னதா சொன்னாலும், பசி எடுக்கும்போது என்ன செய்ய என சிலர் கேட்க்கக்கூடும். உங்களுக்காகவே, சில உணவுப் பரிந்துரைகளை சொல்கிறோம். ஜங்க் உணவுகள் சாப்பிடத் தோன்றும்போது, இவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்...

இதற்கு மாற்றாக எவ்வகையான ஆரோக்கியமான வீட்டு உணவுகளை உண்ணலாம்?

1. பொறி மற்றும் கடலை பருப்பு சேர்ந்து ஸ்நாக்ஸ்:

உடலில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புடன் ஒரு சுவையான ஸ்நாக்ஸை தயாரிக்கலாம். உதாரணத்துக்கு பொறி மற்றும் கடலை பருப்பு சேர்த்து சாப்பிடலாம்

2. இனிப்பு உணவு வகைகளுக்கு:

அப்ரிகோட், உலர் திராட்சை, பேரிச்சம்பழம் போன்றவை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான இனிப்புகளை தயார் செய்யலாம்.

3. ஆரோக்கிய Rolls செய்யலாம்:

வீட்டில் சப்பாத்தி செய்து அதில் காய்கறிகள், பன்னீர் மற்றும் சட்னி சேர்த்து ஆரோக்கியமான Rolls தயாரிக்கலாம்.

4. கோதுமை சாண்ட்விச்

கோதுமை பிரெட்களில் காய்கறிகள் அல்லது பன்னீர் வைத்து சாண்ட்விச் தயாரிக்கலாம்.

5. மில்லட் பிஸ்கெட்ஸ்

சிறுதானியம் அல்லது கோதுமை மாவினை கலந்து பிஸ்கெட் செய்து சாப்பிடலாம்.

ஜங்க் உணவுகள் சுவையாகதான் இருக்கும், ஆனால்...

ஜங்க் உணவுகள் உட்கொள்வது நாக்கிற்கு நல்ல சுவையை தருவதாகதான் இருக்கும். ஆனால், அதிகமாக அவற்றை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கிவிடும்.

’ஜங்க் ஃபுட்ஸில் உடலுக்கு கெடுதல் தரும் விஷயமே அதிகம் இருக்கிறது என்பதால், அதை உண்பது எப்படி சரியாகும்?’ என்பதுதான் ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் கேள்வியாக இருக்கிறது.

எனவே, ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்போம்.. உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வோம்..