நாட்டு சர்க்கரை உபயோகித்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமா? உண்மை என்ன? மருத்துவர் விளக்கம்!
பலரும் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக சிலர் முன்வைக்கிறார்கள். இதற்காக அதிக விலை கொடுத்து அவற்றை வாங்குவதும் உண்டு. ஏராளமாக அதை உபயோகிப்பதும் உண்டு.
உதாரணத்துக்கு, நாட்டுச் சர்க்கரையில் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் எனக்கூறி ஒரு ஸ்பூன் வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டிய இடத்தில் 2 அல்லது 3 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை போடுவார்கள் சிலர். இதெல்லாம் மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். ‘எல்லா வகை சர்க்கரையையும் அளவாகத்தான் எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கிறார்கள் அவர்கள்.
எந்த வடிவத்திலும் இனிப்பை சேர்த்துக்கொண்டாலும் தீமைதானா? விளக்குகிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா..
நாட்டு சர்க்கரை டீ வாங்கி பருகினால் சர்க்கரை ஏறாது என்று நம்புகிறார்கள் சிலர். உண்மையில் அப்படி கிடையாது... எந்த ரூபத்தில் இனிப்பு சுவையை எடுத்தாலும் உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள்
கூடும் ...
கூடும் ....
கூடும் .....
ஆக, இனிப்பு ஏதுமில்லாமல் டீ/ காபி அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
Hba1c எனும் மூன்று மாத சர்க்கரை அளவுகளை அதன் கட்டுக்குள் வைத்திருக்க இது போன்ற எளிய நடவடிக்கைகள் பெரிதும் உதவுகின்றன.
சில மாத்திரைகள் A1c அளவுகளை மூன்று மாதங்களில் 0.5 முதல் 1 கிராம் அளவு குறைக்கின்றன என்று ஆய்வு செய்யப்பட்டு சந்தைக்கு வருகின்றன. ஆனால், அதே 1 கிராம் A1c ஐ நம்மால் சில எளிய நடவடிக்கைகள் மூலம் நாம் மாற்ற முடியும். அவற்றை பார்க்கலாம்...
நீரிழிவு / ரத்த கொதிப்பு உள்ள நோயளிகள் அடிக்கடி பால் டீ / காபி அருந்துவதை தவிர்ப்பது சிறந்தது.
காரணம்?
பாலில் உள்ள லேக்டோஸ் எனும் மாவுச்சத்து நமது ஜீரண மண்டலத்தால் க்ளூகோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைக்கப்படும்
Lactose in milk = galactose + glucose
இந்த க்ளூகோஸ் ரத்தத்தில் கலந்ததும், நமது கணையம் இன்சுலினை வெளியிட்டாக வேண்டும்.
வேறுயாருக்கெல்லாம் பாதிப்பு உண்டாகும்?
இவர்கள் மட்டுமல்லாது, டைப் டூ / டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள், ரத்த கொதிப்பு நோயாளிகள் ( hypertension) மெடபாலிக் சிண்ட்ரோம் (syndrome X) இருப்பவர்கள், உடல் பருமனாக (obesity) இருப்பவர்கள், PCOD (polycystic ovarian disease) கருமுட்டை நீர்க்கட்டி நோய் என இவர்கள் அனைவருக்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பாதிப்புகள் உண்டாகக் கூடும்.
ஒன்று
க்ளூகோஸ் உள்ளே வந்தால் கணையம் சுரக்க வேண்டிய இன்சுலினை முறையாக சுரக்காமல் போவது. அல்லது தேவைக்கு மீறி சுரப்பது, தேவைக்கும் குறைவாக சுரப்பது.
இரண்டு
சுரக்கப்பட்ட இன்சுலின் நமது செல்களில், தசைகளில், கல்லீரலில் முறையாக தனது பணியை செய்யாமல் போவது. இதை Insulin resistance என்கிறோம்.
இத்தகைய பிரச்சனைகளை நமது ரத்தத்தில் க்ளூகோஸ் கலக்கும் போதெல்லாம் நமது உடல் சந்திக்கும்.
எனவே , பால் பருகுவதை மேற்சொன்ன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
நீரிழிவை, பால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது!
பாலை குடிக்காமல் இருக்க முடியவில்லை என்கிற பட்சத்தில் ஒரு நாளைய ஒட்டுமொத்த பால் கொள்முதலை 200 மில்லி என்ற அளவில் நிர்ணயம் செய்து அதையும் ஒரே வேளையில் எடுப்பது சிறந்தது. பாலில் உள்ள இயற்கையான சர்க்கரையும் (lactose) நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது.
அதிலும், அரைச்சீனி / கால் சீனி/ முக்கால் சீனி / ஒரு பிஞ்ச் சுகர் என்று போட்டு பருகினால் இன்னும் பிரச்சனைகள்தான் கூடும்.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க இரண்டு வழிகள் உள்ளன
மருந்துகளின் மூலம் குறைப்பது.
இந்த வழியில் நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ப மருந்துகள் கூடும்.
உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் குறைப்பது.
இதில் பேலியோ உணவு முறை சிறந்தது. இந்த வழியில் நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ப மருந்துகள் குறையும்.
இரக்கம் அறியா இரு நோய்கள்
உலகத்தில் நம்மீது துளி இரக்கம் காட்ட விரும்பாத எதிரி கூட ஏதோ ஒரு நொடியில் நமக்காக இரக்கம் காட்டக்கூடும். ஆனால், இரக்கம் என்பதே சிறிதும் அறியாத இரு நோய்கள் உள்ளன.
அவை நீரிழிவும், ரத்த கொதிப்பும்
இவை இரண்டையும் மருந்து மூலமாகவும் உணவுக்கட்டுப்பாட்டு மூலமாகவும் தொடர்ந்து கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.