Cholesterol Pt web
ஹெல்த்

கொலஸ்ட்ரால் மாத்திரைகள்.. தசைப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

புதிய ஆய்வுகள் ஸ்டேட்டின் தசை செல்களை பாதிக்கலாம் எனச் சொன்னாலும், 5–6% பேருக்கு மட்டுமே லேசான வலி ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

PT WEB

கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பயன்படும் 'ஸ்டேட்டின்' மாத்திரைகள், தசைப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்ற விவாதம் தற்போதைய புதிய ஆய்வுகளால் உலகளவில் எழுந்துள்ளது. ஸ்டேட்டின் மாத்திரைகள் தசை செல்களைப் பாதித்து தசை வலியை ஏற்படுத்தக்கூடும் என 'சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழின் ஆய்வு கூறுகிறது.

Cholesterol

இருப்பினும், இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகவும் அரிதானவை என்று இதய நோய் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வோரில் வெறும் 5 முதல் 6 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே லேசான தசை வலி ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்; 1 லட்சம் பேரில் 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே கடுமையான தசைச் சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் 1990 முதல் 2024 வரை அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட பிரம்மாண்ட 'லான்செட்' ஆய்வு, இந்த மாத்திரைகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைப் பெருமளவில் குறைப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. 190 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக கெட்ட கொழுப்பு உள்ளவர்கள் மற்றும் 40 முதல் 75 வயதுடைய நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்டேட்டின் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.

Cholesterol

மருத்துவர்களின் ஆலோசனையின்றி இந்த மாத்திரைகளை திடீரென நிறுத்தக் கூடாது என்றும், அது கொழுப்பின் அளவை மீண்டும் ஆபத்தான நிலைக்கு உயர்த்திவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.