2050-ல் புற்றுநோய் பாதிப்பு 3.5 கோடியை எட்டக்கூடும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!
உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) இணைந்து வெளியிட்ட உலக புற்றுநோய் நிலை அறிக்கை- 2026இன்படி, தற்போது ஆண்டுதோறும் 2.06 கோடி புதிய புற்றுநோய் பாதிப்புகளும், சுமார் 1 கோடி உயிரிழப்புகளும் பதிவாகின்றன. தினமும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும், 2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புதிய புற்றுநோய் பாதிப்புகள் சுமார் 3.5 கோடியை எட்டக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், உலகளவில் இதய நோய்களுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக புற்றுநோய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 40% புகையிலை, மது அருந்துதல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV), ஹெபடைட்டிஸ் B, ஹெபடைட்டிஸ் C, ஹெலிகோபாக்டர் பைலோரி போன்ற தொற்றுகள் உள்ளிட்ட தடுக்கக்கூடிய காரணிகளுடன் தொடர்புடையவை என்றும், குறைந்த வருமான நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்கான அணுகலில் இன்னும் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

