இளைஞர்களைத் தாக்கும் டிஜிட்டல் மறதி.. கைபேசி போதையைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுரை!!
எல்லாவற்றுக்கும் கூகுளைச் சார்ந்திருப்பதால், மூளையின் நினைவாற்றல் திறன் குறைந்து தேவையற்ற பதற்றமும் கடுமையான ஞாபகமறதியும் உண்டாகிறது. குறிப்பாக, 15 முதல் 30 நொடிகள் ஓடக்கூடிய 'ரீல்ஸ்' மற்றும் குறும் வீடியோக்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். தொடர்ந்து ரீல்ஸ் பார்க்கும்போது மூளையில் சுரக்கும் டோப்பமைன் ஹார்மோன், அடுத்தடுத்த வீடியோக்களைப் பார்க்க மூளையை உந்துகிறது. இதனால், 25 வயது வரை வளரக்கூடிய மூளையின் முன்பகுதி பாதிக்கப்பட்டு, சிந்திக்கும் திறனும் கிரகிக்கக்கூடிய ஆற்றலும் மழுங்கடிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
மேலும், இரவு நேர ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டால் 'மெலட்டோனின்' ஹார்மோன் சுரப்பு தடுக்கப்பட்டு, தூக்கமின்மை ஏற்படுகிறது. இது கவனக்குறைவு, ADHD, கடுமையான மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்த உயர்வுக்கு வழிவகுக்கிறது. பெற்றோர் தங்களின் மொபைல் பயன்பாட்டைக் குறைத்து குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நரம்பியல் மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
இந்த டிஜிட்டல் போதையில் இருந்து மீள, தேவையில்லாமல் ரீல்ஸ் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பும், காலையில் எழுந்த முதல் இரண்டு மணி நேரமும் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
