வாயில் மீண்டும், மீண்டும் ஏற்படும் ஆப்தஸ் ஸ்டோமாடிட்டிஸ் என்பது வாய்ப்புண் அழற்சியாகும். இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேருக்கு இது நேரிடுகிறது. இது போன்ற வாய்ப்புண்கள் சிலருக்கு இரண்டு வாரங்கள் கழித்து குணமாகிவிடும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து வாய்ப்புண் இருந்தால் ஊட்டச்சத்துக் குறைபாடு, வைரல் தொற்றுகள், உடலின் நோய் எதிர்ப்பு திறன் பாதிப்பு ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடும். சில நேரங்களில் வாய்ப் புற்றாகவும் இருக்கக்கூடும். பெஹ்செட் எனப்படும் வலியுடன் கூடிய வாய்ப்புண், குடல் அழற்சியாகவும் இருக்கக்கூடும்.
வாயில் ஏற்படும் புண்ணை மட்டும் கருத்தில் கொண்டு அவற்றை மருத்துவர்கள் ஆய்வு செய்வதில்லை. நோயாளியின் வயது, பாலினம், சமூக-பொருளாதார நிலை, வசிப்பிடம் மற்றும் வாயில் எந்தப் பகுதியில் புண் இருக்கிறது என்பதைக் கொண்டும் வாய்ப்புண்களின் தன்மையைக் கண்டறிகின்றனர். 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டோருக்கு வாய்ப்புண்ணால் வாய்ப் புற்றுநோய் ஏற்படலாம். ஆப்தஸ் ஸ்டோமாடிக்ஸ் வாய்ப்புண் அதிக வலியுடன் கூடியதாக இருக்கும்.
அதே நேரத்தில் வாய்ப் புற்று என்பது வலியே இல்லாமல் இருந்து ஆபத்தை ஏற்படுத்தும். சில வகை மருந்துகள் காரணமாக வாய்ப்புண் ஏற்படும். வெற்றிலைப் பாக்கு போடுவதாலும், மதுப் பழக்கம் காரணமாகவும் வாய்ப்புண் ஏற்படும். இரும்பு, வைட்டமின் பி12 மற்றும் பி9 குறைபாடுகள் காரணமாகவும் ஏற்படும். வாய்ப்புண் ஏற்பட்டால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.