கால்சியம் இல்லாதபோது வைட்டமின்-டி மாத்திரைகள் நன்மை தருமா.. மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
எலும்புகள் வலுவாக இருக்க வைட்டமின்-டி மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு பெரிய வலையில் சிக்கியிருக்கலாம் என்கிறது சமீபத்திய மருத்துவ அறிக்கை. அதன்படி, வைட்டமின்-டி என்பது ஓர் உதவியாளர் மட்டுமே. அதன் முக்கிய வேலை, நாம் உண்ணும் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுவதுதான். உங்கள் உடலில் போதிய கால்சியம் இல்லை என்றால், நீங்கள் எவ்வளவு வைட்டமின்-டி எடுத்தாலும் அது பயனளிக்காது. இது சாவி இருந்தும், திறப்பதற்கு கதவு இல்லாத கதையாகிவிடும். கால்சியம் இல்லாமல் வைட்டமின்-டியை மட்டும் தொடர்ந்து எடுக்கும்போது, அது உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
போதிய கால்சியம் கிடைக்காதபோது, உடல் தனது தேவையை ஈடுகட்ட எலும்புகளில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சத் தொடங்கும். இதனால் காலப்போக்கில் எலும்பு அடர்த்தி குறைந்து எலும்பு நோய்கள் வரவும், மிக எளிதாக எலும்பு முறிவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். வைட்டமின்-டி மற்றும் கால்சியம் ஆகிய இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. பொதுவாக ஒரு நாளைக்கு 1,000 மில்லி கிராம் கால்சியமும், 800 ஐயூ வைட்டமின்-டியும் அவசியமாகின்றன. ஆனால், சுயமாக மாத்திரைகளை எடுக்காமல், மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்வதே உங்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் அளிக்கும்.

