காதலர் தினம் pt web
சிறப்புக் களம்

‘ஊனே உயிரே..!’ காதலர் தின சிறப்புப் பகுதி : சமூக ஊடகங்களும், தற்கால காதலும்.. கானலும் உண்மையும்!

”நீங்கள் ஒரு மனிதருடன் வாழ்கிறீர்கள் அல்லது காதலிக்கிறீர்கள். அவருக்கு சில விஷயங்கள் பிடிக்கும், சில விருப்புகள் இருக்கும். அதற்குள் நாம் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதுதான் அந்த உறவுக்கு நாம் கொடுக்கும் அடிப்படை மரியாதை” நேர்காணலில் இருந்து...

அங்கேஷ்வர்

காதலர் தினம் நெருங்குகிறது... கடந்த 25 ஆண்டுகளுக்குள் காதலின் பரிமாணம் வெகுவாக மாறியுள்ளது.. இன்று முதல் காதலர் தினம் வரையில் தினமும் ஒரு பேட்டியாக அல்லது கட்டுரையாக, ‘ஊனே உயிரே’ எனும் சிறப்புப் பகுதியில் படிக்கலாம். இன்று சமூக ஊடகங்களும் தற்கால காதலும்.. என்ற தலைப்பில் தற்கால காதல் குறித்து சற்றே ஆராய்ந்து பார்க்கலாம்.. இது குறித்து காதலும் சில கேள்விகளும், காதல் etc உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், எழுத்தாளர் ராஜசங்கீதன் உடனான நேர்காணல்....

தற்கால காதலை சமூக ஊடகங்கள் எப்படி தீர்மானிக்கின்றன?

சமூக ஊடகங்கள் காதலை வெவ்வேறு வகையில் தீர்மானிக்கிறது. வாட்ஸ் அப் உபயோகித்து, நீங்கள் உங்கள் காதலருக்கு மெசேஜ் அனுப்பி ப்ளூ டிக் வரவில்லை என்றால் அதற்கொரு சண்டை வரும். ஒரு காலக்கட்டத்தில் அப்படி இல்லை. காதல் கடிதங்களில் இருந்து, நேராக சந்திக்கும் காலக்கட்டத்திற்கு வந்து, தற்போது இணைய வழிக்காதல் வரை வந்துள்ளோம். தற்போது இணைய வழிக்காதல் என்பது காதலில் நிறைய விஷயங்களை மாற்றியுள்ளது.

ஆன்லைனில் பெரும்பாலும், நாம் இல்லாத வேறு ஒருவராகத்தான் நாம் நம்மை பிரதிபலிப்போம். நாம் பகிரும் புகைப்படங்களின் மூலம் நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் நபராக, பயணங்கள் சென்று இயற்கையை ரசிக்கும் நபராகவே நம்மை நாம் காட்டிக்கொள்வோம். ஆனால், எதார்த்தம் வேறு ஒன்றாக இருக்கும்.

ஆன்லைனில் பெரும்பாலும், நாம் இல்லாத வேறு ஒருவராகத்தான் நாம் நம்மை பிரதிபலிப்போம்.

மற்ற காதல்களுடன் தன் காதலை ஒப்பிட்டுக் கொள்வது இன்றைய சமூக ஊடக உலகில் அதிகமாகிவிட்டதா?

ஆன்லைன் மட்டும் இந்த பிரச்னையை உருவாக்கவில்லை. எல்லோருக்கும் வாழ்வில் அடுத்தகட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எது வளர்ச்சி என்பதை வரையறுப்பதில் இன்று சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

வார இறுதி நாட்களில் உங்கள் காதலனையோ காதலியையோ அழைத்துக்கொண்டு மால்களில் ஒரு படம் பார்த்துவிட்டு பாப்கார்ன் உடன் புகைப்படம் போடவில்லை என்றால், உங்கள் இருவருக்கும் காதல் இல்லை என்றாகிவிடுமா? ஆனால், இன்றைய உலகில் இதை நீங்கள் செய்தாக வேண்டும். நீங்கள் அதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். அப்படி இல்லையென்றால் நீங்கள் சந்தோசமான தம்பதியாக உங்கள் நட்பு வட்டாரத்தில் கவனிக்கப்பட மாட்டீர்கள்.

வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும், வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அபிப்ராயம் எப்போது உருவாகிறது என்றால், ஆன்லைனில் அதுபோல் அதிகமாக பார்ப்போம். இன்ஸ்டா இன்ஃபுளூயன்ஸர்கள் எல்லாம் தங்கள் வாழக்கை கொண்டாடப்படுவதாக வீடியோக்களை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த கருத்துக்களை எல்லாம் எடுத்துக்கொள்ளும் பெண்ணின் மனமோ ஆணின் மணமோ இப்படி எல்லாம் இருந்தால்தான் சந்தோஷம் போல என நினைப்பார்கள். ஆன்லைனில் குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை அதாவது மேல்தட்டு வாழ்க்கை நிலையை நோக்கியே எல்லாம் உருவாக்கப்படுகிறது, சித்தரிக்கப்படுகிறது. அதுமட்டும்தான் வாழ்க்கை எனும் சித்திரம் உருவாக்கப்படுகிறது. ஆனால், அதுமட்டுமே வாழ்க்கை இல்லை.

வார இறுதி நாட்களில் உங்கள் காதலனையோ காதலியையோ அழைத்துக்கொண்டு மால்களில் ஒரு படம் பார்த்துவிட்டு பாப்கார்ன் உடன் புகைப்படம் போடவில்லை என்றால், உங்கள் இருவருக்கும் காதல் இல்லை என்றாகிவிடுமா?

டிஜிட்டல் என்பது மனிதர்களுடன் சேர்ந்து இருப்பதற்கான ஒரு வழி. ஆனால், அதே டிஜிட்டல் மனிதர்களை தனித்தனியாக பிரிக்கிறது. குறிப்பாக காதலில் நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகிறதே?

இன்று பொதுவாக காதல் மற்றும் கல்யாண உறவுகள் மிக எளிதாக பாதிக்கப்படக்கூடிய உறவுகள். அந்த உறவுகளை சந்தேகித்து அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளை எடுத்தோம் என்றால் பயங்கரமான முரண்பாடுகள் ஏற்பட்டு, வாக்குவாதமாக மாறி பிளவினை நோக்கித்தான் செல்லும். பரஸ்பர நம்பிக்கையுடன் இருப்பதுதான் முக்கியமானது. இணையிடம் சென்று நீ என்னுடன் இருப்பியா? இருப்பியா? என கேட்டால் அங்குதான் முதல் சண்டையே வரும்.

இன்றைக்கு காதலில் இருக்கும் நம்பிக்கை எந்த அளவிற்கு என்றால், உங்கள் மனைவி அல்லது கணவரது பாஸ்வேர்டுகள் உங்களுக்கு தெரியாத வரையில்தான். தெரிந்துவிட்டது என்றால் எல்லாம் சிதிலமாகிவிடும்.

ஒரு பெண்ணுக்கு, அவருக்கு பிடித்தமாதிரி இருக்கும் ஆணைக் கண்டால் ஒரு ஈர்ப்பு வரும். இதேதான் ஆணுக்கும் அவருக்குப் பிடித்த மாதிரியான பெண்ணைப் பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு வரும். இந்த சமூக ஊடக உலகில், அதிகமான ஆண்களும், அதிகமான பெண்களும் ஒரே சமூக ஊடகத்தில் புழங்குவதற்கான வாய்ப்பு இருக்கும்போது, பலபேர் இன்பாக்ஸ்களில் மெசேஜ் செய்வார்கள். உங்களது இணை அவருடன் பேசி இருக்கலாம்,. பேசாமலும் இருக்கலாம். ஆனால், அந்த இன்பாக்ஸை நீங்கள் போய் திறக்காமல் இருக்கும் வரைதான் உங்களுக்கு நிம்மதி. அப்படி நீங்கள் திறந்து பார்த்தால், அங்கு அவர்களுக்கிடையே உரையாடலே நடக்கவில்லை என்றாலும் எப்படியாவது சண்டை வரும். இணையவழி நட்புகள் அதிகமாகும்போது இம்மாதிரியான பரிசோதனைகளை நிறுத்திவிடுவது நல்லது.

இணையிடம் சென்று நீ என்னுடன் இருப்பியா? இருப்பியா? என கேட்டால் அங்குதான் முதல் சண்டையே வரும்.

ஒரு மனிதரை விட மற்ற மனிதர் சிறந்தவராகதான் இருப்பார். சிறந்தவர்தான் இணையாக வேண்டும் என்ற கருத்தில் தவறில்லை. ஆனால், இணையை தேர்ந்தெடுத்த பின்னும், சிறந்தவராக நினைக்கும் நபருடன் தங்களது இணையை ஒப்பிட்டுப் பார்ப்பது சரியா?

இதற்குக் காரணம் நான் ஏற்கனவே சொன்னதுதான். இணையதளத்தில் ஒருநபர் தங்களது சிறந்த முகத்தைத்தான் காட்டுவார். அந்த ஆணும் பெண்ணும் செயற்கையான அல்காரிதம்களால் கட்டப்பட்டவர்கள் என்கிற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அல்காரிதம் காட்டும் ஆணையும் பெண்ணையும் உங்கள் நட்பு வட்டத்தில் தேடி அலைந்தால் கண்டிப்பாக அதுபோல் கிடைக்காது. உங்களுக்குள் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்கிறீகள் என்றால் நீங்கள் ஏமாற்றமடைவதற்கான வேலையைச் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

இணையதளத்தில் ஒருநபர் தங்களது சிறந்த முகத்தைத்தான் காட்டுவார். அந்த ஆணும் பெண்ணும் செயற்கையான அல்காரிதம்களால் கட்டப்பட்டவர்கள் என்கிற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

எதார்த்த வாழ்க்கைக்குள் சமூக வலைதளங்களை எந்த அளவிற்கு அனுமதிக்கலாம்?

சமூக ஊடகங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த சமூக ரீதியிலான கல்வியோ அல்லது பயிற்சியோ கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் சமூக வலைதளங்களில் பார்ப்பது எல்லாம் உண்மையல்ல; அது உருவாக்கப்பட்ட உண்மைகள். கருத்தை உருவாக்குதல் என்பது சமூக ஊடக காலத்தில் அதிகமாக இருக்கிறது. எனவே, சமூக ஊடக உலகை கையாளுவதற்கான பயிற்சி வேண்டும். அப்போதுதான், வெளி உலகை கையாளுவதற்கான பயிற்சி உங்களுக்குக் கிடைக்கும்.

சமூக வலைதளமே உலகின் மிக முக்கியமான மூன்று பெரு நிறுவனங்களிடம்தான் இருக்கிறது. சமூக ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதற்கு சமூக சேவை எல்லாம் காரணம் இல்லை. அவர்கள் லாபத்தில் கொழிக்க வேண்டும் அவ்வளவுதான். அதற்கு என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் செய்வார்கள். உங்களை இன்னும் அதிகமாக சமூக வலைதளங்களில் கட்டுண்டு கிடக்கச் செய்வார்கள். இதில் நாம் என்ன செய்கிறோம் என்றால், இந்த சமூகத்தில் இல்லாத, சாத்தியமில்லாத விஷயங்களை எதிர்பார்த்து வாழ்க்கையில் ஏமாந்து மனரீதியாக தனிமையில் இருக்கும் இடத்தினை அடைகிறோம். எனவே, சமூக ஊடகங்கள் குறித்த பயிற்சியும், அந்த நிறுவனங்கள் குறித்த புரிதலும் தேவை.

சமூக ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதற்கு சமூக சேவை எல்லாம் காரணம் இல்லை. உங்களை இன்னும் அதிகமாக சமூக வலைதளங்களில் கட்டுண்டு கிடக்கச் செய்வார்கள்.

நீங்கள் ஒரு மனிதருடன் வாழ்கிறீர்கள் அல்லது காதலிக்கிறீர்கள். அவருக்கு சில விஷயங்கள் பிடிக்கும், சில விருப்புகள் இருக்கும். அதற்குள் நாம் மூக்கை நுழைக்கக் கூடாது என்பதுதான் அந்த உறவுக்கு நாம் கொடுக்கும் அடிப்படை மரியாதை.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. அவர்களது வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதமானவர்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் உங்களை கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். இவை எல்லாம் வீட்டில் நமக்கு நடக்காது. ஏனெனில் திருமணம் என்பதும், குடும்பம் என்பதும் மொத்தமாக வேறு. காதல் என்பது வேறு.

குடும்பத்திற்குள் கொண்டாட்டங்கள் அதிகமிருக்காது என்கிறீர்கள். ஆனால், அப்படி கொண்டாட வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லையே?

காதலில் எப்போதாவது சந்திப்பது, வெளியில் சந்திக்கும்போது பேசுவது என்பது வேறு. குடும்பம் என்பது காதல் கிடையாது. அது பொறுப்புகள் சார்ந்தது. குழந்தை வளர்ப்பு என்ற பொறுப்பு உள்ளது, வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது,. இன்னும் பல பொறுப்புகள் உள்ளன.

காதல் என்பதில் இருந்து கல்யாணத்திற்கு நகர்ந்துவிட்டீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கு ஒவ்வொரு நாளும் காதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு காதல் கிடைக்காது. வீட்டில் பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டும், குடும்ப பொறுப்புகளும் இருக்கிறது. இம்மாதிரி விஷயங்கள் இருக்கும்போது நீங்கள் ஒவ்வொரு நாளும் ரோஜா கொடுத்துக்கொண்டே இருக்க முடியாது. உடல்நலம் சரியில்லாத பெற்றோர் வீட்டில் இருக்கும்போது அவர்களைக் கவனிக்கும் நேரத்தில் ஒவ்வொரு நாளும் உங்களுடன் டூயட் பாடிக்கொண்டே இருக்கமுடியாதுதானே? அப்படியென்றால் காதலே இருக்காது என்பது இல்லை. காதல் இருக்கும். ஆனால், காதல் மட்டுமே இருக்காது.

நீங்கள் காதலிக்கும்போது அப்படி இருக்காது, அங்கு காதல் மட்டும்தான் எல்லாமும். அதனால் அங்கு நீங்கள் கொண்டாடப்படலாம்.

காதலில் இருந்து திருமணத்திற்கு செல்கிறீர்கள் என்றால், முரண்பாடுகள் ஏற்படும் என்பதை ஏற்றுக்கொண்டுதான் செல்ல வேண்டும். முரண்பாடுகளே வரக்கூடாது., நாங்கள் உதாரண தம்பதிகளாக வாழப்போகிறோம் என்று நினைத்து வாழ்ந்தீர்கள் என்றால் தினமும் இந்த சமூகத்திற்கு நீங்கள் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது பெரிய அழுத்தம்...

ஒவ்வொரு நாளும் உங்களுடன் டூயட் பாடிக்கொண்டே இருக்கமுடியாதுதானே? அப்படியென்றால் காதலே இருக்காது என்பது இல்லை. காதல் இருக்கும். ஆனால், காதல் மட்டுமே இருக்காது.

தங்களது இணை இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற ஆசைகளை கட்டமைப்பதில் சமூக ஊடகங்கள் எந்த அளவிற்கு பங்கு வகிக்கின்றன?

திருமணத்திற்கு உங்களுக்கு பெண்ணோ அல்லது பையனோ பார்க்கிறார்கள். உடனடியாக நீங்கள் என்ன செய்வீர்கள். சமூக ஊடகங்களில் அவரைத் தேடுவீர்கள். ஆன்லைனில் வேறு ஒரு முகம் இருக்கலாம்., அல்லது உண்மையான முகமாகக் கூட இருக்கலாம். அதைப்பார்த்து நீங்கள் ஆச்சரியமடையலாம் அல்லது அதிர்ச்சியுமடையலாம். அதை வைத்துக்கொண்டு நீங்கள் இந்த உறவு வேண்டாம் என முடிவெடுத்தீர்கள் என்றால் அது சரியாக இருக்குமா?

இன்றைய உலகில் ஆண், பெண் உறவை கட்டமைப்பதில் சமூக ஊடகம் முக்கியமான இடத்தில் இருக்கிறது. உங்களது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதுவரை சமூக ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, சமூக ஊடகத்தினைப் பற்றி உரையாட வேண்டிய தேவை இருக்கிறது.

தற்கால காதல் உறவுகளில் எல்லாம் காதல் அனுபவங்களைத்தான் எதிர்பார்க்கிறார்களா? பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் போக்கு குறைந்து வருகிறதா?

சமூக ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தவில்லை. அதனால் ஏற்படும் விளைவுகள் சமூக ஊடகங்களில் ஏற்படத்தானே செய்யும். கடந்த 20 வருடங்களுக்குள் இந்த சமூகம் அதிகளவில் மாறி இருக்கிறது. வாழ்க்கை சூழலில் பணிச்சூழலும் மாறி இருக்கிறது. அதேபோல் ஆண் பெண் வாழ்க்கையும் மாறி இருக்கிறது. வீடுகளிலேயே நாம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தால் அடுத்த தலைமுறை செல்போனை பார்த்துக்கொண்டு இருக்கும். இப்படி இயந்திரங்களுடனே இருக்கும் சமூகம் மனிதர்களை நம்பாமல் இருக்கும்போது, இன்னும் அதிகமான தனிமைக்கும், மனநல பாதிப்புகளுக்கும் ஆட்படும். இனிவரும் சமூகம் இப்படித்தான் இருக்கும்.

வீடுகளிலேயே நாம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தால் அடுத்த தலைமுறை செல்போனை பார்த்துக்கொண்டு இருக்கும்.

இன்றைய சமூக ஊடக உலகில் மேல் தட்டு இளைஞர்களைப்போல் நாம் இல்லையே என்று நினைக்கும் போக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டதா?

புலியைப் பார்த்து சூடுபோட்டுக்கொள்ளும் போக்கு எப்போதும் பலனளிக்காது. சமூகத்தில் அடுத்தக் கட்டத்தில் இருக்கும் மக்களைப் பார்த்து அதுபோல் வாழ வேண்டும் என்ற ஆசையை எல்லோரும் கடந்துதான் வரவேண்டும், அப்போது சில கோமாளித்தனங்களை செய்வோம். அது நீடிக்காது. ஒருவேளை நீங்கள் முயற்சித்து அது பொய்க்கும் பட்சத்திலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நடந்தாலும் சந்தோஷம்.