pt web
சிறப்புக் களம்

சுடும் வார்த்தைகள்.. கற்றோர் நிறைந்த தமிழ் சமூகத்தில் இவ்வளவு பிற்போக்கா?

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ஒரு பெண், தான் பாதிக்கப்பட்டேன் என சொல்லும்போது அதை பகடி செய்யாமல், நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் அறம்..

Rajakannan K

கோவையில் கல்லூரி மாணவியொருவர் மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்காக கொந்தளிக்க வேண்டிய நேரத்தில் அப்பெண்ணுக்கு இணையத்தில் ‘ஒழுக்க வகுப்புகள்’ எடுக்கப்படுகின்றன.

‘அதெப்படி அந்த நேரத்துக்கு அந்தப் பொண்ணு அங்க போகலாம்’

‘நைட்டு 11 மணிக்கு ஆண் நண்பரோட அங்க என்ன வேலை’

‘புறச்சூழல் அறிவின்றி கண்ட நேரத்தில், கண்ட இடத்தில் கவலையின்றி காதல் மயக்கத்தில் இருப்பதும், பின்பு காவல்துறை சரியில்லை என வசைபாடுவதும் சரியில்லை’

இதெல்லாம் குற்றவாளிகளுக்கு ஆதரவான கருத்தன்றி வேறென்ன? இவைகள் எல்லாம் பெண்களுக்கு இன்னும் சில கேள்விகளைத்தான் எழுப்புகின்றன.

பாலியல் வன்கொடுமை

"தமிழ்நாட்டில் இரவில் 8 மணிக்குப் பிறகு பெண்கள் வெளியே வரக்கூடாதா? மீறினால் இப்படித்தான் நடக்குமா? நம்மை காக்கும் அரசாங்கம் பொதுவெளியில் இம்மாதிரியான கருத்துகளை சொல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் கொடுப்பது என்பதே அரிதாக இருக்கக்கூடிய நிலையில், இணையங்களில் முன்வைக்கப்படும் இம்மாதிரியான கருத்துகள் குற்றங்கள் மூடி மறைவதற்குத்தானே காரணமாகும். இம்மாதிரியான கருத்துகளை முன்வைப்பவர்கள் எங்கிருந்து இதற்கான சிந்தனையைப் பெருகின்றனர். அதை எப்படி தடுப்பது அல்லது மாற்றுவது?"

இரவில் வெளியே வந்தால் வன்கொடுமை நடக்கும் என எச்சரிப்பது அக்கறையா என்பதே கேள்விக்குறி. பாலியல் வன்கொடுமை அல்லது துன்புறுத்தல் தொடர்பான ஒவ்வொரு சம்பவமும் சமூகத்தின் கட்டமைப்பை, கொடுக்கப்படும் கல்வியை, குழந்தைகள் வளர்க்கப்படுவதற்கும் சமூகத்தின் அங்கமாக அவர்கள் மாறுவதற்கும் இடைப்பட்ட நடைமுறையை கேள்விக்கு உட்படுத்தும் சம்பவமாகக் கருதாமல், பாதிக்கப்பட்டவர்கள் மேல்தான் தவறு என சொல்வது எவ்வகையில் நியாயம். ஆனால், சமூகத்தில், அரசியல் களத்தில், கலைத்துறையில் நாம் மதிக்கும் பெரும்பாலானோர் இத்தகைய கருத்துகளை முன்வைக்கும் ஆபத்தான போக்கு அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

இந்த பொதுமனநிலை குறித்து எழுத்தாளரும், ஆய்வாளரும், சமூக செயற்பாட்டாளருமான நிவேதிதா லூயிஸை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியவை எழுத்துகளாக..

பாதிக்கப்பட்ட ஒரு பெண் சம்பவத்தின்போது என்ன உடை அணிந்திருந்தாள், யாருடன் இருந்தாள், எந்த நேரத்தில் இருந்தாள் என்பதையெல்லாம் பார்த்துதான் அவள் நல்லவளா, கெட்டவளா என்று சொல்வார்கள் என்றால், உண்மையில் அது மன சிக்கல்.
நிவேதிதா லூயிஸ்

வன்கொடுமை குற்றங்களின்போது குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு வேதனையளிக்கிறது. இதை பெரும்பாலும் ஆண்களும், ஆணாதிக்கத்தில் ஊறிப்போன பெண்களுமே செய்கின்றனர். பாலியல் வன்புணர்வு என்பது இங்கு கலாசாரமாகவே மாறிவிட்டது. இதன் அடிப்படை, ஆணாதிக்க சிந்தனைதான். ‘பெண்ணின் உடல் மீதான என் ஆதிக்கத்தை காட்டுவதன் மூலம், எனது வலிமையை நிலைநிறுத்திக் கொள்கிறேன்’ என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான், ‘பொம்பள பிள்ளைக்கு அத்தனை மணிக்கு அங்கே என்ன வேலை’ என்ற கருத்துகள்.

இவையாவும் குற்றவாளிகளுக்கு மேலும் பலம் கொடுக்கும் செயல்கள். பொறுப்புள்ள பதவியில் / அந்தஸ்தில் இருப்பவர்கள் இதை செய்யக்கூடாது.

சமூக நீதி பேசும் மண்ணில் இத்தனை பிற்போக்கா?

அதிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலமே போய்விட்டது என சொல்வதெல்லாம் மோசமான விஷயம். பழமைவாதத்தின் வெளிப்பாடுதான் இத்தகைய கூற்றுகள். பாதிக்கப்பட்ட ஒரு பெண் சம்பவத்தின்போது என்ன உடை அணிந்திருந்தாள், யாருடன் இருந்தாள், எந்த நேரத்தில் இருந்தாள் என்பதையெல்லாம் பார்த்துதான் அவள் நல்லவளா, கெட்டவளா என்று சொல்வார்கள் என்றால், உண்மையில் அது மன சிக்கல். மன நோய்க்கு இவர்கள் சிகிச்சை பெற வேண்டும். எந்தவொரு குற்றத்தின் போதும் குற்றம் என்ன, குற்றத்தை செய்தவர்கள் யார் - இவை மட்டுமே முக்கியம். எந்தப் பெண்ணும் என்னை வன்கொடுமை செய் என்று யாரையும் வரவேற்பதில்லை என்பதை இத்தகையவர்கள் என்று உணர்வார்கள் என தெரியவில்லை. ஒவ்வொரு பாலியல் வன்கொடுமையின்போதும், பெண்ணுக்கு கற்பிதங்கள் கூறுவதன் மூலம், ‘இப்பெண்தான் அந்த ஆண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்’ என்பதுபோல கொச்சையான பிற்போக்குத்தனமான கருத்துகளை தெரிவிப்பது மிக மிக ஆபத்து. சமூக நீதி பேசும் மண் என சொல்லிக்கொண்டு, இதைவிட பிற்போக்காக பேச முடியுமா என்ன?

பாலியல் வன்கொடுமை

என்னை கேட்டால், இக்கேள்விகளை கேட்போர் மீது எனக்கு உண்மையில் பரிதாபம்தான் வருகிறது. ஏனெனில் அவர்கள் இன்னும் வளரவேயில்லை. 2,000 வருடங்களாக இங்குள்ள சமூக அமைப்பிலேயே தேங்கி நிற்கிறார்கள். சொல்லப்போனால் பெண்களை புரிந்துக் கொள்ளும் விஷயத்தில் அவர்கள் பூஜ்ஜியமாக இருக்கிறார்கள். சமூக நீதி மண், பெரியார் மண் என சொல்லிக்கொள்ளும் இடத்திலுள்ள நாம், இதுபோன்ற குற்றங்களை கடுமையாக எதிர்க்கவேண்டும். அதைவிடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை கேள்விக்குள்ளாக்குவது தவறான போக்கு.

‘காதலோ, நட்போ… ஒரு பெண்ணை அவள் விருப்பமின்றி தொடுவது தவறு’ என்பதை ஆண்களுக்கு சிறு வயதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என என்றைக்கு இவர்கள் புரிந்துகொள்வார்கள்?
நிவேதிதா லூயிஸ்

‘கண்ட இடத்தில் கவலையின்றி காதல் மயக்கத்தில் இருப்பது’ என்கிறார்கள். இப்படி சொல்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் அங்கிருந்தவர்கள் நண்பர்களா, காதலர்களா என்றே நமக்கு தெரியாது. நண்பர்கள் என்றால், ஏன் அங்கு சென்று அந்த நேரத்தில் பேச வேண்டும் என்கிறார்கள். நம் சமூகத்தில் பதின்பருவ ஆணும் பெண்ணும் தனிமையில் பாதுகாப்பான சூழலில் பேசுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. மீறி பேசினாலே ‘ஒழுக்க’ வகுப்பெடுக்கின்றனர் இந்த ‘கலாசார’ காவலர்கள். சொல்லப்போனால் இரு பாலினத்தவருக்கு இடையேயான தனிமையான உரையாடல் என்பதையே இங்கு பேசமுடியாது.

பாலியல் வன்கொடுமை

இங்கு நாம் யாராவது பதின்பருவ ஈர்ப்பை, ‘17, 18 வயதில் என்ன காதல் வேண்டியிருக்கு’ எனக் கேட்டு முடித்துக்கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, காதல் என்றால் என்ன, காமம் என்றால் என்ன என்ற வேறுபாட்டை சொல்லிக் கொடுப்பதில் காட்டியிருக்கிறோமா? இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் - ‘காதலோ, நட்போ… ஒரு பெண்ணை அவள் விருப்பமின்றி தொடுவது தவறு’ என்பதை ஆண்களுக்கு சிறு வயதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என என்றைக்கு இவர்கள் புரிந்துகொள்வார்கள்? இன்று எத்தனை பள்ளி, கல்லூரி பாடங்களில் பாலியல் கல்வி குறித்து இருக்கின்றன? சரி, வீட்டிலாவது இதுபற்றி சொல்லிக் கொடுக்கிறார்களா? இன்றளவும் எத்தனையோ வீடுகளுக்குள் பாலியல் வன்கொடுமைகள் நெருங்கிய உறவினர்களால் நிகழ்ந்துள்ளன. அதற்கெல்லாம் இவர்கள் என்ன காரணம் சொல்வார்கள்? உண்மையில் இத்தகையவர்கள், பெண்ணை எப்படி குற்றம் சொல்ல முடியுமென்றே சிந்திக்கிறார்கள். அதனால்தான் வீட்டு வன்கொடுமை பற்றி வாய் திறப்பதில்லை. எங்கேனும் ஏதேனும் பெண்ணொருவர் இரவில் வெளியே சென்று, அங்கு பாதிகப்பட்டும்விட்டால் ‘ஒழுக்கம்’ என்ற பெயரில் வகுப்பெடுக்கிறார்கள். இவர்களின் பாரபட்சமான மௌனம்தான், குற்றம் செய்யும் ஆணுக்கு துணிச்சலை தருகிறது.

ஆண் குழந்தை என்றால், அவர்கள் எப்படி பெண்களிடம் நடக்க வேண்டும் - விருப்பமில்லாத பெண்ணை தொடக்கூடாது - தன் இணையை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுப்பது.
நிவேதிதா லூயிஸ்

கோவை சம்பவத்தை பொறுத்தவரை, குற்றம் செய்த மூவருமே குற்றப்பின்னணியை கொண்டவர்கள். அந்த இடத்தில் அப்பெண் அன்றி வேறு யார் இருந்திருந்தாலும் குற்றம் நடந்திருக்கும். அப்படிப்பட்ட இடத்தில், ‘குற்றவாளிக்கு குற்றம் இழைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்கள்’ என்ற தொணியில் கருத்து தெரிவிப்பதெல்லாம் எவ்வளவு குரூரமானது?

ஒவ்வொருமுறை இதுபோன்ற சம்பவத்தின் போதும் பெண்ணியவாதிகள் பேசுகிறோம். ஆனால் தொடர்ந்து இதுபற்றி பேச இன்னும் வலிமையான பெண்ணிய இயக்கங்கள் தேவை. அவர்கள்தான் பெற்றோர் மத்தியிலும், சமூகத்திலும் இதுபற்றிய புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் அரசியல் கட்சிகள் அனைத்தும், வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்கின்றன. அப்படியில்லாமல், தங்கள் கட்சியினருக்கு பெண்களை எப்படி மரியாதையோடு நடத்த வேண்டும் என்ற வழிமுறையை கட்சிகள் வகுக்க வேண்டும். தலைமை பேச்சாளர்களே பொதுவெளியில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியாக்கி ‘ஒழுக்க’ வகுப்பெடுப்பதை, கட்சியினர் கண்டிக்க வேண்டும்

சரி, இச்சம்பவத்தில் இருந்த ஆணும் பெண்ணும் காதலர்கள் என்றே வைத்துக் கொள்வோம். 17, 18 வயதில் வரும் காதலில் பாலியல் தூண்டுதல் ஏற்படுவது இயல்புதான். அந்த வயதை கண்ட யாருக்கும் இது தெரியாதா என்ன? உண்மையில் அவர்களை எப்படி நாம் நல்வழிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம். இதற்கு பாலியல் கல்வியை அவர்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ‘நாங்களெல்லாம் அந்த காலத்துல கட்டுப்பாட்டோட இருந்தோம்’ என சொல்கிறார்கள் சிலர். ‘உணர்ச்சிகளை கட்டுப்படுத்து’ என சொன்னவுடன் புரிந்துகொள்ளும் விவேகானந்தர் தலைமுறை இதுவல்ல. இந்த தலைமுறை, எல்லாவற்றிலும் அவசர அவசரமாக இருக்கிறது. அவர்களுக்கு ஏற்றபடி நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இனியாவது தமிழ்ச்சமூகம் பாலியல் கல்வியின் அவசியத்தை உணர வேண்டும்.

பாலியல் கல்வி என்றவுடன், பாதுகாப்பான உடலுறவு என்றால் என்னவென்று சொல்லிக் கொடுப்பது மட்டும் என சில நினைக்கிறார்கள். அப்படியல்ல. ஆண் குழந்தை என்றால், அவர்கள் எப்படி பெண்களிடம் நடக்க வேண்டும் - விருப்பமில்லாத பெண்ணை தொடக்கூடாது - தன் இணையை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுப்பது. போலவே பெண் குழந்தைகளுக்கு கண்ணியமாக நடத்தும் இணையரை கண்டறிய வேண்டும் - உடலுறவால் உடலளவில் அடுத்து என்ன மாற்றங்கள் நிகழும் - கருத்தரித்தலுக்கான சரியான வயது என்ன என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பின்னரே ‘பாதுகாப்பான கண்ணியமான உடலுறவு’ என்றால் என்ன என சொல்லிக் கொடுப்பது.

இப்போதெல்லாம் முற்போக்கு பேசும் பெண்கள் பகடிக்குள்ளாக்கப்படுகின்றனர். அதிலும் ஒரு பெண் பாதிக்கப்படும்போது முற்போக்கு சொன்னால், இன்னும் மோசம். உதாரணத்துக்கு மீ டூ-வில் சின்மயி போன்றோர் பேசினால் ‘இவ்வளவு நாள் எங்கிருந்தாய்’ என பகடி செய்கிறர்கள், அதுவே கோவை சம்பவம் / அண்ணா பல்கலை. சம்பவம் என்றால் ‘நீ ஏன் அங்கே அந்த நேரத்தில் அங்கே அவனுடன் போனாய்’ என்கிறார்கள்… இதுவே நெருங்கிய உறவினர்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் என்றால் மட்டும் பகடி செய்வோர் வாயை மூடிக்கொண்டு அமைதி காக்கிறார்கள். இப்படி செய்வதெல்லாம், தனக்கான உரிமையை கோரக்கூடிய ஒருவரை இழிவுபடுத்துவது. உண்மையில் இப்படி செய்பவர்கள், எப்படி பண்பட்ட சமூகமாக இருக்க முடியும்? எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ஒரு பெண், தான் பாதிக்கப்பட்டேன் என சொல்லும்போது அதை பகடி செய்யாமல், நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் அறம்.