எஸ். எம். சுப்பையா நாயுடு fb
சிறப்புக் களம்

S M Subbaiah Naidu | எம்.எஸ்.வி-யே வியந்து போற்றிய இசைமேதை எஸ்.எம்.சுப்பையா நாயுடு |

எஸ்.எம்.சுப்பையா குறித்து தெரிந்து கொள்ள நாம் ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி செல்ல வேண்டும்.

திலகவதி

செய்தியாளர்: திலகவதி

மெல்லிசை மன்னர்கள் என்றால் நமது நினைவுக்கு வருவோர் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. ஆனால் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்கே மெல்லிசை சொல்லித் தந்த இசைவள்ளல் யார் தெரியுமா?

புரட்சித் தலைவர் எம்ஜிஆர்-க்கு அவரது திரைப்பயணத்தில் அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்தவரும் அவர்தான். தென்னிந்தியாவின் இசையரசி, தேன்குரல் தேவதை எஸ். ஜானகிக்கு அடையாளம் தந்தவரும் அவர்தான். இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் எண்ணிலடங்கா கலைஞர்களின் தொடக்கத்துக்குக் காரணமாக இருந்தவரும் அவர்தான். அவர்தான் மெல்லிசை மன்னர்களின் மன்னன் இசைமேதை எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு.நமக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் என்றால் அலைபேசியில் அனுப்பும் குறுஞ்செய்தி என்றுதானே தெரியும்?

ஆனால், 1940 களில் எஸ்.எம்.எஸ். என்றால் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைக் குறிக்கும் வார்த்தயாக இருந்தது. எம்.ஜி.ஆர், ஏ.வி.எம் போல. அண்ணாவின் ‘வேலைக்காரி’, கலைஞரின் ‘மலைக்கள்ளன்’ , எம்ஜிஆரின்’ ராஜகுமாரி’, ‘மர்மயோகி’, நம்பியார் பல வேடங்களில் நடித்த ‘திகம்பர சாமியார்’ , சிவாஜியின் ‘அன்னையின் ஆணை’ என ஏராளமான படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றவர் எஸ்.எம். சுப்பையா.

எம்ஜிஆரின் பிரமாண்டப் படைப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தையும் அதன் பாடல்களையும் மறந்து விட முடியுமா? கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்பக் காவியக் கலையே ஓவியமே என்று ஓர் இசை ஓவியமே தீட்டியிருப்பார் சுப்பையா நாயுடு. அதில், “ தூங்காதே தம்பி தூங்காதே” பாடலையும் உலகம் சுற்றும் வாலிபனின் ’நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்று எம்ஜிஆருக்கு, அவரின் திரை வாழ்வுக்கும் அரசியலுக்குமாக சேர்த்து அன்றைக்கே அடித்தளம் இசைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

எஸ்.எம்.சுப்பையா குறித்து தெரிந்து கொள்ள நாம் ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி செல்ல வேண்டும்.....

1914 ஆம் ஆண்டு தற்போதைய தென்காசி அப்போதைய நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் முத்துசாமி நாயுடு என்ற காவலருக்குப் பிறந்த சுப்பையா நாயுடு எந்த வகையிலும் இசைத் தொடர்பே இல்லாதவர். சிறுவயதில் அடங்காத பிள்ளையாக இருந்த சுப்பையாவை அடித்து வளர்த்தார் தகப்பனார்.

அதனால் 100 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் செல்லலாம் எனத் திட்டமிட்டு தஞ்சை வந்தவரை குரல்வளம் நன்றாக இருந்ததால் தஞ்சையில் முகாமிட்டிருந்த ஜகந்நாத ஐயரின் நாடகக் கம்பனி இணைத்துக்கொண்டது. அதன் காரணமாக மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஒருவர் தமிழகத்திரை உலகுக்கு கிடைத்தார் என்றால் அது மிகையல்ல. ஜாகந்நாதையரிடமிருந்த ராஜமாணிக்கப்பிள்ளையின் ஆசியுடன் தனது சங்கீத ஞானத்தை வளர்த்துக் கொண்டார் சுப்பையா நாயுடு.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் பக்த ராமதாஸ் என்ற நாடகம் 1935 ஆம் ஆண்டு திரைப்படமானது. அப்போதுதான் எஸ்.எம் சுப்பையா நாயுடுவின் ஹார்மோனிய இசை முதன்முதலாக திரையில் ஒலித்தது. அதன் பின்னர் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்துக்கு ஹார்மோனிய இசைக்கலைஞராக பணியாற்றினார். ரம்பையின் காதல், பிரகலாதா, ஆர்யமாலா, ஜதகல பிரதாபன், சாலிவாகனன், என்மகன் ஆகிய படங்களில் சுப்பையா நாயுடுவின் ஹார்மோனிய இசை இடம்பெற்றது.

எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த ராஜகுமாரி படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ். சுப்பையா நாயுடு தான். பின்னாளில் உலகம் போற்றும் திரைக் கலைஞனாகவும் அரசியல் ஆளுமையாகவும் உருவெடுக்கவிருக்கும் இளைஞன் தனது இசையில் தான் அறிமுகமாகிறார் என்று அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார். பின்னர், எம்.ஜி.ஆர்-க்கு மிகப் பிடித்த இசையமைப்பாளரும் நெருங்கிய நண்பராகவும் ஆகிப்போனார் சுப்பையா என்பது தனிக்கதை.

பட்டுக்கோட்டையார் பாப்பாக்களுக்குக் கூறிய அறிவுரை பாடல் ”திருடாதே பாப்பா திருடாதே”. எம்.ஜி. ஆரின் கொள்கை விளக்கப்பாடல்களில் ஒன்றான இப்பாடலை தமிழ்த் திரையுலகுக்குத் தந்தவர் சுப்பையா நாயுடு.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் மட்டுமல்ல கவியரசர் கண்ணதாசனின் முதல் பாடல் வாய்ப்பும் எஸ்.எம் சுப்பையாவின் இசையில் தான். ”கன்னியின் காதலி” படத்தில் தனது முதல் திரைப்படப் பாடலான ”கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் தினமே” என்ற பாடலை புதிய பாடலாசிரியர் தானே என்று அலட்சியப் படுத்தாமல் ஆதரித்து பாராட்டி அருமையான முறையில் இசை அமைத்துக் கொடுத்த காரணத்தால் தனது முதல் பாடல் அரங்கேறக் காரணமாக இருந்தவர் என்ற முறையில் கவியரசு கண்ணதாசன் என்றென்றும் அதனை நன்றியுடன் நினைவுகூறினார்.

எஸ். எம் சுப்பையாவின் இசையின் உச்சம் என்றால் அது 1962 இல் கொஞ்சும் சலங்கை படத்தில் அவரமைத்த ”சிங்கார வேலனே தேவா” என்ற காலத்தால் அழியாத பொக்கிஷம். ஆபேரி ராகத்தில் காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைக்கு போட்டியாக இசையரசி எஸ். ஜானகியின் குரல் தேன் பாய்ச்சியிருக்கும் இப்பாடல் திரையிசைக்கான தங்க இசைத்தட்டு விருதை முதன்முதலாக வென்றுத் தந்த பாடலாகும்.

மலைக்கள்ளன்’ படத்தில் “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… அன்னையின் ஆணை’ படத்தில் “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை…” ”சக்கரம்” படத்தில் வரும் ”காசேதான் கடவுளப்பா அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா” என்ற பாடல்களை எல்லாம் தந்தவர் எஸ். எம். சுப்பையாதான் என இன்றிருக்கும் எவ்வளவு பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

ஆனால், இந்த பாடல்களை அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. திருடாதே படத்தில் வரும் ”என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்” பாடலும், மன்னிப்பு திரைப்படத்தில் வரும் “நீ எங்கே என் நினைவுகள் அங்கே” என்ற பாடலும் மறக்க முடியாத காதல் கீதங்கள்.

இவ்வளவு ஏன்? நாம் மெல்லிசை மன்னன் என்று போற்றும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என இசை கற்றுத் தந்த ஆசான் எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான்.  ஸ்ரூடியோவில் உதவியாளராக இருந்த பையன் போட்ட மெட்டை தற்செயலாகக் கேட்ட சுப்பையாநாயுடு அந்த மெட்டை ”புது வசந்தமாமே வாழ்விலே” என்ற பாடலாக்கினார். அபிமன்யூ படத்தில் திருச்சி லோகநாதனும் ஜீவரத்தினமும் இணைந்து பாடிய இப்பாடல் மிகவும் பிரபலமானது. அந்த உதவியாளராக இருந்த சின்னப் பையன் தான் எம்.எஸ்.வி. இப்பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் தான் இசையமைத்தார் என்ற உண்மையை பின்னர் சுப்பையா நாயுடு வெளியிட்டார்.

தலை சிறந்த இசையமைப்பாளராக இருந்திருந்தாலும் தன் இறுதிக் காலத்தில் பக்கவாதத்தால் படுத்தபடுக்கையாகி வறுமையில் வாடினார் சுப்பையா நாயுடு .

பிள்ளைப் பேறு இல்லாத அவருக்கு அந்த சமயத்தில்தான், எம்.எஸ்.விஸ்வநாதன், அவருக்காகவே இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். உதவியாளராக பணிபுரிந்த போது சுப்பையா நாயுடு அளித்த ஊக்கத்தால் தானே அவர் இந்த அளவுக்கு மெல்லிசை மன்னராக முடிந்தது. தனக்கு சென்னை நிறுவனத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்து சி. ஆர். சுப்பராமனிடம் சேர வைத்தவர் அவர்தானே?  அந்த நன்றி உணர்ச்சி எம்.எஸ்.வி அவர்களுக்கு நிறையவே இருந்தது.

அவருக்கு மட்டுமல்ல தனது முதல் பாடல் அரங்கேறக் காரணமாக இருந்தவர் என்ற முறையில் கவியரசு கண்ணதாசனும் நன்றிக்கடன் பெற்றவராகவே உணர்ந்த்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து சுப்பையா நாயுடு என்ற அந்த ஈடிணையில்லா இசைக் கலைஞனுக்கு ’மணிவிழா’ எடுத்து சிறப்புச் செய்தனர்.  திரை உலகமே திரண்டு வந்த அந்த மாபெரும் விழாவுக்கு எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன் இருவரும் தலைமை தாங்கி பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கவுரவித்தனர். இவ்விழாவின் மூலம் அந்த காலத்திலேயே ஒரு லட்சம் ரூபாய் திரட்டியளித்தனர்.

இந்த மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த விஸ்வநாதனும், கண்ணதாசனும், ”எங்கள் இருவரின் முதற்பாடல் அரங்கேறி நாங்கள் இன்று நாலாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியும், இசை அமைத்தும் இந்த அளவுக்கு பெயரும் புகழும் பெறக் காரணமாக அமைந்தவர்" என்று அறிவித்து தங்கள் ஆசானுக்கு பெரும்புகழ் சேர்த்தனரென்றால் அது மிகையல்ல.

அதோடு நிற்கவில்லை எம்.எஸ். விஸ்வநாதன். வாரிசு இல்லாத சுப்பையா நாயுடு தம்பதிகளை தனது பெற்றோராகவே பாவித்து வயதான அவர்களை தனது இல்லத்திலேயே வைத்துக்கொண்டு மகனாகவே கவனித்து வந்தார்.

1979ஆம் ஆண்டு அவர் மரணம் அடைந்ததும் அவருக்கு வாரிசு இல்லாததால் மணிவிழாவை நடத்திய அவரது பெறாத மகனான எம்.எஸ். விஸ்வநாதனே அவரது இறுதிச் சடங்குகளையும் நிறைவேற்றினார். தனது ஆசானை அப்பாவாக மட்டுமன்று அதற்கும் மேலாகவே ஏற்றுக் கொண்டிருந்தாலன்றி இது சாத்தியமில்லை. எந்த பின்னணியுமில்லாமல் தானாக தனியொரு ஆளாக தன் முயற்சியினால் சுயம்புவாக இசையுலகில் கோலோச்சியவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. சாகா வரம் பெற்ற பாடல்களையும் திரை மெல்லிசை இலக்கணங்களையும் நமக்களித்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவரது பாடல்களாகவே நம்மோடு வாழ்ந்து வருகிறார். இன்று அந்த மாபெரும் இசை மேதையின் நினைவு நாள்.