LILO & STITCH REVIEW | அன்பு தானே எல்லாம்... எப்படியிருக்கிறது இந்த டிஸ்னி சினிமா..?
LILO & STITCH REVIEW(3 / 5)
வேற்றுகிரகவாசியான ஸ்டிச்சும், ஹவாய் சுட்டிப் பெண் லீலோவும் செய்யும் அட்டகாசங்களே live action சினிமாவான LILO & STITCH படத்தின் ஒன்லைன்.
டூரோ என்கிற கிரகத்தில் இருக்கும் ஜம்போ ஜூகிபோ என்னும் வினோத விஞ்ஞானி எல்லாவற்றையும் அழித்துத் தீர்க்கும் 626 என்னும் வினோத உயிரினத்தை உருவாக்குகிறார். இதை அறிந்த அந்த கிரகத்து ராணி, ஜம்போ ஜூகிபோவை சிறையில் அடைத்து, 626ஐ நாடு கடத்துகிறார்கள். அங்கிருந்து தப்பிக்கும் 626, நேராக ஹவாய் தீவில் வந்து விழுகிறது. பெற்றோர்களின் இழப்பில் வாடும் லீலோவை , லீலோவின் மூத்த சகோதரி நானே பார்த்துக்கொள்கிறார். தன்னுடன் விளையாட யாருமே இல்லை என்கிற சோக முகத்துடன் திரியும் லீலோவுக்கு உற்ற தோழனாய் வந்து விழுகிறது 626. ஆனால், எல்லாவற்றையும் அழித்துத் தீர்க்கும் 626 நல்ல பிள்ளையாய் மாற தன்னுடைய குணநலன்களை மாற்றிக்கொள்கிறது. ஆனாலும், உண்மை அவ்வப்போது வெளிப்படுகிறது. லீலோவுக்கும் இருக்கும் சிக்கல் என்ன; 626ஐ டூரோ கிரகத்து நபர்கள் மீட்டார்களா; லீலோவுக்காக 626 செய்யும் தியாகம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த லைவ் ஆக்சன் சினிமா.
ohana அதாவது குடும்பம். குடும்பத்துல ஆயிரம் பிரச்னை இருக்கலாம். ஆனா, நமக்கு இருக்குறது ஒரு குடும்பம் தானே அப்படிங்கற வாரிசு பட ஒன்லைனைத்தான் LILO & STITCHம் நமக்கு நினைவுபடுத்துகின்றது. 2002ம் ஆண்டு வெளியான அனிமேசன் படத்தின் லைவ் ஆக்சன் வெர்சன் தான் என்றாலும், அதில் இருந்து சில விஷயங்களை மாற்றியிருக்கிறார்கள். வேற்றுக்கிரகவாசிகள் அனிமேசன் படத்தில் ஏலியன்களாகவே வருவார்கள். இதிலோ அவர்கள் மனிதர்களாக க்ளோனாகி வருகிறார்கள். ஜம்போ ஜூகிபோ கதாபாத்திரத்துக்கு Zach Galifianakisஐ தேர்வு செய்திருக்கிறார்கள். அனிமேசன் படங்களில் ஸ்டிச்சுக்கு குரலுதவி செய்த கிறிஸ் சாண்டர்ஸே இதிலும் குரலுதவி செய்திருக்கிறார்.
இந்தப் படத்தின் சூப்பர் க்யூட் ஸ்டார் சந்தேகமே இல்லாமல் லீலோவாக வரும் ஹவாய் சிறுமி Maia Kealoh தான். அப்படியே லீலோவாக பொருந்திப்போகிறார். ஸ்டிச்சுடன் செய்யும் லூட்டிகளாகட்டும்; அக்காவுடன் கோபச்சண்டை போடும் போதும் அப்படியே லீலோவாக மாறிவிடுகிறார். லீலோவின் சகோதரியான நானி கதாபாத்திரத்தில் வரும் சிட்னி எலிசபெத் அகுடாங்கும் நல்லதொரு தேர்வு. இருவரும் கதையின் தன்மை புரிந்து சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள். நிறைய கடைகளில் நாம் இந்த ஸ்டிச் பொம்மையை பார்த்திருக்க முடியும். ஆத்தீ நீ தானா இது என்கிற உணர்வை பார்த்ததும் தந்துவிடுகிறது ஸ்டிச். எதுவா இருந்தாலும் அழிச்சுட்டு பேசலாமே டைப்பில் இருக்கும் ஸ்டிச் , சூழல்நிலை உணர்ந்து அன்பை பகிர செய்யும் தியாகங்களே லீலோ & ஸ்டிச் என்பதால் படம் இன்னும் எமோசனலாக இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த அனிமேசன் படங்களை ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியும்.
குடும்பத்துடன் சென்று பார்க்க நல்லதொரு சினிமா இந்த LILO & STITCH.