பெங்களூரு|கோவிட் தொற்று; 84 வயது முதியவர் பலி!
கொரோனா தொற்று மீண்டும் பரவத் துவங்கி உள்ள நிலையில், ஒமைக்ரான் வகையை சேர்ந்த ஜே.என்.1 வகை கொரோனா தொற்று வேகமாக பரவுவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, என்.பி.1.8.1 என்ற வகை பாதிப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இருப்பினும், அனைத்தும் கட்டுக்குள் இருப்பதாகவும் மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை இதுவரை, 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 84 வயதான முதியவர் நேற்று (25.5.2025) மரணமடைந்தார். இவருக்கு நீரிழிவு நோய் உட்பட பல்வேறு இணை நோய்கள் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், கடந்த மே 13 ஆம் தேதியன்று பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மே 17 அன்று உயிரிழந்தார். இது குறித்து பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், இறந்த முதியவருக்கு பல்வேறு உடல் பிரச்சினைகள் இருந்ததாகவும் எனவே அவர் இறப்புக்கு கொரோனா மட்டுமே காரணம் எனக்கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
கர்நாடக சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இதனால், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மாநிலத்தில் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.