Rational Thinking File Image
சிறப்புக் களம்

இந்திய சிந்தனை மரபில் பகுத்தறிவு!

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறைத் தமிழ்த் தொண்டர் விருது அளிக்கப்பட்ட நிகழ்வில் த.வி.வெங்கடேஸ்வரன் ஆற்றிய உரையின் செழுமைப்படுத்தப்பட்ட எழுத்து வடிவமே இந்தக் கட்டுரை.

த.வி.வெங்கடேஸ்வரன்

நான் பள்ளியில் படிக்கும்போது தற்செயலாக ஜெயகாந்தனின், ‘ஊருக்கு நூறு பேர்’ நாவலைப் படிக்க நேர்ந்தது. நம்மைச் சுற்றி நடக்கும் அவலங்களைக் கண்டு புலம்புதல் கூடாது. நாமே ஏதாவது செய்யவேண்டும் என்கிற உந்துதலை அந்த நாவல் அளித்தது. பின்னர் இளங்கலை பட்டம் படிக்க சென்னையில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே எனக்கு வித்தியாசமான அனுபவம். 

அந்தக் கல்லூரியில் வானவியல் தொலைநோக்கி இருந்தது. நாங்கள் சிலர் ஒவ்வொரு வாரமும் இரவில் வானக்காட்சியைக் காண ஆர்வம் கொண்டிருந்தோம். இரவில் தானே விண்மீன்களைக் காண முடியும். எனவே, எங்கள் வானவியல் மன்றம் இரவில் செயல்பட வேண்டியதிருந்தது. மாணவர்கள் இரவில் கல்லூரியின் மொட்டை மாடியில் தங்குவது சிலருக்குக் கவலையை ஏற்படுத்தியது. 

இளம் மாணவர்கள் இரவில் தனியாக என்ன செய்வார்களோ... ஏது செய்வார்களோ... சிகரெட் கூட பிடிக்கலாம் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள்.  ஒழுங்கீனம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்கள்.  இதைக் கேட்ட எங்களுக்குக் கசப்பு உணர்வு. ராமகிருஷ்ணா மடத்தின் கீழ் இயங்கும் அந்த விவேகானந்தா கல்லூரியில் ஒரு சாமியார் தங்கி இருந்தார். அந்தச் சாமியார் நிர்வாகத்திடம் பேசினார். “நான் மாணவர்களுடன் இரவில் தங்குகிறேன். எனவே மாணவர்களுக்கு அனுமதி தாருங்கள்” என்று கூறி எங்கள் வானவியல் மன்றம் நடைபெற அனுமதி பெற்றுத் தந்தார்.  

அவரிடம் மொட்டைமாடி சாவியை அளித்தார்கள். வானக்காட்சி காணக் குழுமிய முதல் நாள் இரவில் அவர் எங்களுடன் இணைந்தார். எங்களோடு குறுகுறுப்பாக வானக்காட்சியைக் கண்டார். பின்னர், "நான் கிளம்புகிறேன்... நீங்கள் தொடருங்கள்" என்று கூறி சாவியை எங்களிடம் அளித்தார். "யாராவது கேட்டால் இரவு முழுவதும் நான் உங்களோடு இருந்தேன் எனக் கூறிவிடுங்கள்" என்று கூறினார். 

எங்களுக்கோ வியப்பு. புன்முறுவலுடன் அவர் தொடர்ந்தார். "வகுப்பறைக் கல்வியைத் தாண்டி இதுபோலப் பேரார்வம் உங்களுக்கு இருபது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதுதான் இளம் மாணவர்களிடம் நான் எதிர்பார்ப்பது. பகவத் கீதையை பாராயணம் செய்வதைவிடக் கால்பந்து விளையாடுவது சாலச் சிறந்தது என விவேகானந்தர் கூறியது உங்களுக்குத் தெரியுமா?" என்றார்.

சுவாமி விவேகானந்தர்

மேலும் தொடர்ந்தார். "ஒழுக்கம் என்பது உள்ளே இருந்து வர வேண்டும். யாரோ கண்காணிக்கிறார்கள் என்பதால் மட்டுமே ஒழுக்கமாக நடப்பது உள்ளபடியே ஒழுக்கமாக இருக்குமா? நீங்கள் நல்ல பிள்ளைகள். எதைச் செய்தாலும் யோசித்துச் செய்யுங்கள்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். 

நம்பிக்கையும் பகுத்தறிவும்

அப்போது நான் கடவுள் மறுப்பாளன். சாமியார் எங்கள்மீது நம்பிக்கை வைக்கிறார். ஆனால் நிர்வாகத்தைச் சார்ந்த சிலர் கட்டுப்பெட்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு வியப்பாக இருந்தது. எதையும் தட்டையாக முடிவு செய்யக் கூடாது என்ற அறிவு வந்தது. இதன் தொடர்ச்சியாக விவேகானந்தரைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. 

Be an atheist if you want, but do not believe in anything unquestioningly.
விவேகானந்தர்
"நீங்கள் விரும்பினால் நாத்திகராக இருங்கள், ஆனால் எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்"

என்ற விவேகானந்தரின் வரிகள் என்னை மிகவும் பாதித்தன.

இறை நம்பிக்கையில் கூட கண்மூடித்தனமான நம்பிக்கை தவறு
சுவாமி விவேகானந்தர்

பல்வேறு உபன்யாசங்கள் கேட்டு வளர்ந்த எனக்கு, அதுவரை பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை போன்றவை மேலைநாட்டுக் கருத்து; நம்பிக்கை அதுவும் மூத்தவர்களின் வாக்கில் நம்பிக்கை கொள்வதுதான் இந்திய மரபு என்ற கருத்தே மேலோங்கி இருந்தது.  

இங்கே விவேகானந்தர் கூறுவது,

“எதையும் கேள்வி கேள். கண்மூடித்தனமாக நம்பாதே!”

வியப்படைந்த நான் இதன் தொடர்ச்சியாக இந்திய அறிவுப் பாரம்பரியம் தொடர்பான மேலும் பல நூல்களைப் படிக்கத் துவங்கினேன். ஆயுர்வேதத்தின் அடிப்படை நூலான சரக சம்ஹிதைபிரமா நந்தர உபலாப்தி யோக்யார்தா’ என்கிறது. அதாவது உற்றுநோக்கலுக்கும் பகுத்தறிவுக்கும் உட்பட்டதுதான் ஆயுர்வேத அறிவு என்கிறது. மேலும் சரக ஸம்ஹிதா ஸூத்ரஸ்தானம், தீர்கம் ஜீவிதியம், 1.121 கூறுகிறது" ஓஸதீர் நாம ரூபாப்யாம் ஜானதே ஹ்ய்’அஜபா வனே. அவிபாஸ்சைவகோபாஸ்ச யே சான்யே வனவாஸினஹ் [1.1.121]. இதன் பொருள் ஆடு மாடு மேய்ப்பவர்கள், காட்டில் வாழும் பழங்குடியினர்களோடு உரையாடி அவர்களிடமிருந்துதான் மூலிகைகள் குறித்த தகவலைப் பெற்றேன் எனச் சரகர் நேரடியாக அந்த நூலில் பதிவு செய்கிறார்.

Ayurveda

இதன் தொடர்ச்சியாகத்தான் 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆயுர்வேத மருந்து வேதியியல் நூல் ‘இராசேந்திர சிந்தாமணி’யில் அதன் ஆசிரியர் துந்துகநாத் “பரிசோதனைமூலம் தாங்கள் கூறுவதை நிருபிபவர்களையே நாம் மெய்யான ஆசிரியர்களாகக் கொள்ள வேண்டும்" என்கிறது.

மேலும் "கற்றறிந்த மனிதர்களிடமிருந்து நான் கேள்விப்பட்டவற்றையே பதிவு செய்திருக்கிறேன். சாத்திரங்களில் படித்திருந்தாலும் அவற்றை நானே எனது கையால் செய்து பார்த்துப் பரிசோதனை மூலம் சரிபார்க்க முடியவில்லை என்றால் அவற்றை நான் இந்த நூலில் நிராகரித்துள்ளேன். நானே என் சொந்தக் கைகளால் செய்துபார்த்து நிறுவ முடிந்தவற்றை மட்டுமே இந்த நூலில் தொகுத்துள்ளேன்" என்கிறார். 

புத்தகம் எழுதுதல்

ஆனால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவை கடவுள் நேரடியாகத் தோன்றி அருளியது என்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஆயுர்வேதம் எதோ மூன்றாவது கண்ணால் கிடைத்த அருட்கொடை போலவும் நவீன மருத்துவம் ஏதோ வெறும் மனித முயற்சி போலவும் கூறப்படுகிறது. இரண்டும் மனித முயற்சிகள்தாம். இரண்டுமே பகுத்தறிவு விமர்சனத்துக்கு உட்படுபவைதான்.

அருள்வாக்கும் அறிவியலும் ...

ஆரியபட்டர் போன்றவர்களின் கணிப்புகளில் பிழை உள்ளதை இனம் கண்டு பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த வானவியலாளர் நீலகண்ட சோமயாஜி பற்பல கிரகணங்களை உற்றுநோக்கி ஆய்வுசெய்து மேலும் துல்லியமான திருக்கணிதம் என்ற புதுத்துறை வானவியலை உருவாக்கினார். (இந்தத் திருக்கணித சூத்திரங்கள் வழியே உருவான பஞ்சாங்க கணிதத்தைத்தான் வாக்கிய முறை என்கிறார்கள். தற்காலத்தில் புழங்கிவரும் 'திருக்கணிதம்' 1860களில் உருவானது. இதன் வரலாறு வேறு).

அதுவரை பூமி மையக் கொள்கைதான் மேலோங்கி இருந்தது. சூரியன் உட்பட எல்லா கோள்களும் பூமியை மையமாக வைத்துச் சுற்றிவருகின்றன என்றே கருதிவந்தனர். உற்றுநோக்கல் தரவுகளுக்கு இது பொருந்தி வரவில்லை. எனவே வெள்ளி புதன் ஆகிய இரண்டு கோள்கள் சூரியனை சுற்றிவர, சூரியனும் மற்ற கோள்களும் பூமியை சுற்றி வருகின்றன என்கிற ‘பகுதி சூரிய மைய கொள்கை’யை அவர் வகுத்தார்.

ஐரோப்பாவிலும் டைகோ பிராஹே எனும் வானவியலாளர் இதே கருத்தை வெளியிட்டார்; ஆனால், டைகோவுக்கு நூறு ஆண்டுகள் முன்னதாகவே நீலகண்டா இந்தக் கருத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  அப்போது சிலர் சூரிய சித்தாந்தம் ஆரியபாடியம் போன்றவை பிரம்மா சூரியன் போன்ற கடவுள் நேரடியாகத் தோன்றி ஆரியபட்டர் போன்ற ரிஷி முனிகளுக்கு அருளியது; மனிதனாகிய நீ எப்படி இவற்றை மாற்றலாம் எனச் சாடினார்கள்.  யாராவது எழுதிவைத்த ஆகமத்தைக் கண்மூடித்தனமாக ஏற்கக் கூடாது என்றும் பிரத்தியட்சம் (கண்டால்) பிரமாணமே (அளவையே) வானவியலுக்குச் சிறப்பானது என வாதம் செய்துதான் புதுமை செய்தார் நீலகண்ட சோமயாஜி.

இப்படி முன்னோர் பெருமை பேசிப் பகுத்தறிவின் வெளிச்சத்தில் பண்டைய பழக்கவழக்கங்கள் எதையும் மாற்றக் கூடாது என்று எதிர்ப்பு காட்டியவர்களுக்கு பதில் கூறும் விதமாகத்தான் நீலகண்ட சோமயாஜியின் ஜோதிர்மீமான்ஸா எனும் நூல் துவங்குகிறது. அன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பரஹித முறை வழியே கணித்த தருணத்தில் அந்த நூல் எழுதப்பட்ட காலத்தில் நிகழ்ந்த இரண்டு கிரகணங்கள் மெய்யாக நிகழவில்லை; கணிப்புக்கும் நிகழ்வுக்கும் வித்தியாசம் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி ஏன் மாற்றம் வேண்டும் என விளக்குகிறார். அதன் பின்னர் ஆரியபட்டியம் சூரிய சித்தாந்தம் போன்றவை கடவுள் நேரடியாகத் தோன்றி அளித்த அருள்வாக்கு எனக் கருதுவோரை மூடன் என்று சாடி; ஆரியபட்டரே அவரது நூலில் உற்றுநோக்கல் அடிப்படையில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார். 

மேலும், ":மந்த! மேவம். தேவதாப்ரஸாதோ மதிவைமல்யஹேதுரேவ ந-ச-புன꞉ ப்ரஹ்மா ஆதித்யோ வா ஸ்வயமேவாகத்ய உபதிேஸேத்" என்கிறார். அதாவது "மூடனே; கடவுள் அனுக்கிரகம் வழியே மனது தெளிவடைவது. பிரமனோ சூரியனோ நேரில் வந்து வானவியல் சித்தாந்தங்களை அருளுவது இல்லை" என்று நேரடியாக கூறுவது கவனிக்கத்தக்கது. 

ஆரியபட்டர்

ஈஸ்வரோபதேசத்தைவிட 'திஷ்டி-சம்ய'வை -அதாவது கடவுள் அருளியது எனும் கருத்தைவிட உற்றுநோக்களுக்கு பொருந்திவரும் கருத்தே முதன்மையானது என்கிறார் நீலகண்டா. மேலும் வானவியலைப் பொறுத்தவரை ஆப்த வசனம், ஆத்மபிரதிபாசா பயன்தராது; உற்றுநோக்கலும் அனுமானமும்தான் மெய் அறிவை அடையும் கருவி என்கிறார். 

கோளத்தின் கன அளவு πr2 Х √𝜋𝑟2 என்கிறார் ஆரியபட்டர்; இதுபிழை. இன்று பள்ளியில் படிக்கும் எல்லா மாணவ மாணவியருக்கும் கோளத்தின் மெய்யான கன அளவு 4/3 πr3. என்பது தெரியும். கடவுள் அருளியதுதான் ஆரியபடியம் என்றால் அதில் எப்படி இப்படிப்பட்ட பிழைகள் சாத்தியம்? 

ஆரியபட்டர் பெரும் சிந்தனையாளர்தான்; ஆனால் அவர் எழுதிவைத்த எல்லாம் மெய் அல்ல.  

நீலகண்டாவின் பகுதி சூரிய மைய கொள்கை போலவே அறிவியல் வரலாற்றில் இந்தியாவில் முதலாவதாகச் செய்யப்பட்ட வேறொரு கண்டுபிடிப்பைக் குறித்து நாம் காண்போம். “post hoc ergo propter hoc” fallacy என்பது அளவையியல் எனப்படும் தருக்க இயலில் முக்கியமான கருத்து. அறிவியல் வழிமுறையில் இந்தத் தத்துவம் மிகமிக முக்கியம். “Correlation does not imply causation”- அதாவது இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே தொடர்பு போலக் காட்சிப்படுவதை வைத்து இரண்டுக்கும் இடையே காரணகாரிய தொடர்பு உள்ளதாகக் கற்பனை செய்துக்கொள்ளக் கூடாது என இந்த இந்தத் தத்துவம் வலியுறுத்துகிறது.அப்படி நாமாகக் கற்பிதம் செய்துக்கொண்டால் அது பிழை- தருக்கபோலி (fallacy). 

இன்று முனைவர் பட்டம் கல்வி பயில்பவர்கள் ஆய்வுமுறை குறித்து படிக்கும்போது இந்தக் கருத்து வலியுறுத்தப்படும். இன்றைய அறிவியல் தருக்கவியலின் அனா, ஆவன்னா. பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐரோப்பிய தத்துவவியலாளர் டேவிட் ஹியூம்தான் இந்தத் தருக்க போலியை இனம் கண்டாரென இதுவரை தருக்கவியல் வரலாறு கருதியது.

David Hume

ஆனால்,

அன்னுவயம் சாதிக்கின் முன்னும்

கழுதையையும் கணிகையையும்

தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து கழுதையைக்கண்ட இடத்தே கணிகையை 

அனுமிக்க வேண்டும் அது கூடா"  

என்கிறது மணிமேகலை.

இதன் பொருள் என்ன?

கடந்த கால அனுபவத்தில் ஒவ்வொரு முறை குறிப்பிட்ட சந்துமுனையில் கழுதையை காணும்போது எல்லாம் நாம் அங்கே ஒரு கணிகையையும் -அதாவது இளம் பெண்ணை-அங்கே காண்கிறோம் எனக்கொள்வோம். இதைக் கொண்டு கழுதைக்கும் இளம் பெண்ணுக்கும் காரியகாரண தொடர்பு உள்ளது எனவும்; வேறொரு நாள் கழுதையை கண்டால் அங்கே இளம் பெண் காட்சி தருவார் எனக் கருதுவது பிழை - தருக்க போலி என்கிறது டேவிட் ஹியூமுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் எழுதப்பட்ட மணிமேகலை.  

மழை பெய்யும்போது எல்லாம் மேகத்தைக் காண்கிறோம், இதைக்கொண்டு மேகம்தான் மழைக்கு காரணம் என நாம் உயித்து (infer) அறிய முடியும் என்றால் இளம் பெண்ணைக் காணும்போது எல்லாம் நாம் கழுதையை கண்டோமே அதிலிருந்து இளம் பெண்ணுக்கும் கழுதைக்கும் காரணகாரிய தொடர்பு உள்ளது என ஏன் முடிவுக்கு வர முடியாது? எப்போது எந்த நிலையில் இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் தொடர்பு காரண காரிய தொடர்பாகக் காண முடியும்; எப்போது தருக்க பிழை - அனுமான போலி ஏற்படும் என்பது தருக்கவியலில் “Problem of Induction”- அனுமான சிக்கல் என வரையறை செய்யப்படுகிறது. 

அனுமான சிக்கல் குறித்து ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பண்டைய பௌத்த தத்துவ அறிஞர் திண்ணாகர் (Diṅnāga) ஆய்வு செய்தார்.
Diṅnāga

திண்ணாகர் எழுதிய நியாய-முக்தா எனும் நூலைத் தழுவி ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த சங்கராசுவாமி எழுதிய நியாயப் பிரவேசம் எனும் நூலை எழுதினார்.  நியாயப் பிரவேசம் தரும் அதே எடுத்துக்காட்டுகள்தாம் மணிமேகலையிலும் உள்ளது. எனவே திண்ணாகரின் கருத்துக்களே சீத்தலை சாத்தனாருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது எனலாம். அதாவது அறிவியல் வழிமுறையின் முக்கிய அம்சத்தை முதன்முதலில் இனம் கண்டவர் திண்ணாகர்; டேவிட் ஹியூம் அல்ல. (இது குறித்து மேலதிக தகவலைப்பெற, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆய்விதழ் தமிழ்க்கலை vol 18 iss1-4, 2021 பக்கம் 64இல் நான் எழுதியுள்ள கட்டுரையை வாசிக்கவும்).

இதன் தொடர்ச்சியாகப் பூர்வவத்சேஷாவத் சாமான்யதோத்ருஷ்டா என மூன்று வகை அனுமானங்கள் சாத்தியம் எனவும், இதில் எவை உறுதியானது; எது பிழை என்றும் திண்ணாகர் ஆய்வு செய்கிறார். கண்பார்வை அற்றவர்கள் யானையைத் தடவி பார்த்து வாலை தொட்டவர் யானை கயிறு போல இருக்கும் எனவும் காலைத் தொட்டவர்கள் யானை தூண் போல இருக்கும் எனவும் பிழையாக வாதம் செய்வதை போல கருதல் எனும் அனுமானம் சில சூழல்களில் பிழையாக போகலாம். எந்தெந்த சூழல் பிழை தரும்; எவை உறுதியான மெய் அறிவுக்கு வழிவகுக்கும் போன்ற அனுமான சிக்கல் குறித்து கூரான ஆய்வுகள் இந்திய தருக்கவியல் வரலாற்றில் விவாதங்கள் நடந்துள்ளன. இவை உலக தருக்கவியல் வரலாற்றில் மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளன என பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

போலி அறிவியல்

இப்படி பல்வேறு நூல்களைப் படிக்கப் படிக்க ஒரு விஷயம் தெளிவானது. அது,

இந்தியாவாக இருந்தாலும், வேறு பண்பாடுகளாக இருந்தாலும் பகுத்தறிவு பார்வைதான் பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்கள் சிந்தனையாளர்கள் வலியுறுத்தியது.

‘நம்பு; முன்னோர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்’ என்பவர்கள் ஒன்று எய்த்துப் பிழைப்பவர்கள் அல்லது சிந்திக்கச் சோம்பல் படுபவர்கள்.

மயில் உடலுறவு கொள்வதில்லை; ஆண் மயிலின் கண்ணீரைப் பருகித்தான் பெண் மயில் கருவுறும், மரம் செடி தாவரங்களைப் போல்  பசு மாடு கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து உயிர்க்காற்றை வெளியிடுகிறது போன்ற அபத்தங்கள் முதல்

'ஆர்யபட்டா சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்தைப் பதினைந்து கோடி கிலோ மீட்டர் என்று சரியாகக் கணித்தார்'

‘ஐசக் நியூட்டனுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஈர்ப்பு விசையைப் பாஸ்கரா கண்டுபிடித்தார்'

என்பது போன்ற தப்பும் தவறுமான கருத்துக்கள் உட்பட இன்று நமது பெருமை என்ற போர்வையில் போலியும் புரட்டும் பரப்பப்பட்டு வருகிறது. 

பலரும் கருதுவது போல மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதை வைத்து நியூட்டன் பூமிக்கு ஈர்ப்பு விசை இருப்பதை கண்டுபிடித்தார் எனும் கருத்து மிகத்தவறு. கனமான கல் போன்ற பொருள்கள் பூமியை நோக்கி விழுகிறது என்பது பட்டறிவு. பண்டைய காலத்திலேயே இருந்த அறிவு. இப்படி கீழே விழுவதற்கும் பூமியின் எதோ கவர்ச்சி விசைக்கும் தொடர்பு உண்டு என்பது பாஸ்கராவுக்கு முன்பே உலக நாகரிகங்கள் அனைத்திலும் தெரியும், இதில் புதுமை ஏதும் இல்லை.

மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதை போல ஏன் பூமிக்கு மேலே உள்ள நிலா கீழே விழவில்லை என்பதுதான் நியூட்டன் எழுப்பிய கேள்வி. இதற்கு விடை தேடும்போதுதான் நியூட்டனின் ஈர்ப்பு விசை விதிகள் உருவானது.

நியூட்டன்

எனவே பூமிக்கு ஈர்ப்புவிசை உள்ளது என முதன்முதலில் நியூட்டன் கூறவில்லை; பூமிக்கு மட்டுமல்ல நிறை கொண்ட எல்லா பொருள்களுக்கும் எவ்வளவு ஈர்ப்பு விசை இருக்கும் எனவும்; அந்த விசையின் அளவு என்ன என்றும் கூறினார். ஈர்ப்பு விசை, பாஸ்கராவின் பங்கு முதலியவை குறித்து அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள ‘ஆரியபட்டா முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை - ஈர்ப்பு விசையின் சுருக்கமான வரலாறு’ என்ற நூலில் கூறியுள்ளேன்.  அதில் மேலதிகத் தகவலைப் பெறலாம். 

சிலர், துளசிச் செடி காற்றைச் சுத்தம் செய்யும்... ஓசோனை வெளியிடும் என்றும், துளசிச்செடி நட்டால் போதும் உலக வெப்பமடைதல் ஆபத்தைச் சமாளித்து விடலாமென்றும் கூறுகிறார்கள். பத்துப் பதினைந்து கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் ஓசோன் படலம் நல்லது; பூமிக்கு அது பாதுகாப்பு கேடயம். ஆனால் தரைப்பரப்புக்கு அருகே நாம் சுவாசிக்கும் பகுதியில் ஓசோன் இருப்பது ஆபத்து; நுரையீரலில் அரித்து புள்ளிப்புள்ளியாக ஓட்டை விழுந்துவிடும். எனவே உள்ளபடியே துளசிச் செடி ஓசோன் வெளியிடுகிறது என்றால் வாகனப் புகைபோலத் துளசி செய்வதும் மாசுதான்.

துளசி

இதில் வேடிக்கை என்னவென்றால் குவாண்டம் தத்துவம் முதல் எல்லாம் பண்டைய ரிஷி முனிகள் கண்டுபிடித்தார்கள் எனப் போலி பெருமிதம் பேசுபவர்கள் அதுவரை வெறும் வானவேடிக்கை கருவியாக இருந்த ராக்கெட்டை திப்பு சுல்தான்தான் முதன் முதலில் தொழிநுட்ப செழுமை செய்து குறிப்பிட்ட திசை நோக்கி ஏவும் ஏவுகணையாக மாற்றினார் என்ற மெய் தொழில்நுட்ப வரலாற்றைப் பேசத் தயங்குகிறார்கள். 

பழம்பெருமை மேலும் முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பிணி இல்லாமல் ஞானம் பொருந்தியவர்களாய் நீடித்த ஆயுளுடன் வெகுநாள் வாழ்ந்தார்கள். காலப்போக்கில் மக்கள் பிணி மிகுந்தவர்களாய் சிற்றறிவு கொண்டவர்களாய் குறுகிய வாழ்நாளைக்கொண்டு குறைந்த ஆயுளில் மாண்டார்கள் எனக் கருத்து கூறப்படுகிறது.  உள்ளபடியே ஒரு மதிப்பீட்டின் படி ராஜராஜன் காலத்தில் இந்தியாவில் சராசரி ஆயுள் வெறும் 24 ஆண்டுகள்தான்; நவீன அறிவியல் வருகைக்கு முன்னர் 1800களில் சராசரி ஆயுள் வெறும் 25.4 ஆண்டுகள் தான். இன்று இது 70க்கும் சற்றே கூடுதல்.

இதன்பொருள் அந்தக் காலத்தில் முன்னோர்கள் அறிவிலிகளாக இருந்தார்கள் எனக் கொள்ளமுடியுமா? 

ஒரு எடுத்துக்காட்டைக் காண்போம். அந்தக் காலத்தில் கடிகாரம் இல்லை; கைபேசி இல்லை. நேரத்தை எப்படிக் கணித்தார்கள். "அடியளந்து பாண்டவரைக் கூட்டித் துரியோதன் முதலோரை வகுக்க வந்த ஈவு பகல் நாழிகை” என்கிறது ஒரு பழங்கணக்கு. அதாவது பகலில் நாழிகை அறிய இந்த முறையை கையாளலாம். நாம் வெயிலில் நின்று நமது காலடியால் நமது நிழலின் அளவை அளக்க வேண்டும்; அத்துடன் பாண்டவர் அதாவது ஐந்தை சேர்க்க வேண்டும்... இதை துரியோதன் முதலோருக்கு யீந்து அளிக்க வேண்டும். அதாவது நூறால் வகுக்க வேண்டும். குறிப்பிட்ட பகல் நேரத்தில் நமது நிழலின் அளவு 95 காலடியென வைத்துக்கொள்வோம். அத்துடன் ஐந்தை கூட்டினால் வருவது நூறு.  நூறால் வகுத்தால் வருவது விடை ஒன்று. அதாவது சூரியன் உதயமாகி ஒரு நாழிகை. ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்; இது தோராயமான விடை தரும் அல்காரிதம் - வழிமுறை. 

சூரியன் - நேர கணிப்பு

இதைவிட மேலும் துல்லியமாகக் கணிக்க  பகர்ந்த பகல்நாழிகையே பாதி செய்து பாதிதனை ஏழினால் பெருக்கிப் பாரில் நிகழ்ந்தவடி அளந்து அவச் சாய்கை பாதச் சாய்கை நீக்கி நின்றவடி மேல் ஏழுங் கூட்டி திகழ்ந்த முதல் தொகையதனை இதனுக் கீய்ந்து சிறந்த பலன்சென்ற நாழிகையின் பின்னே புகழ்ந்திரவி படுங்கடிகை இவைதான் என்று பொலக்குழலாய்! பகற்கடிகை பொருந்தச் சொல்லே என்ற அல்காரிதம் உள்ளது. இதுவும் நிழல் அளந்து கணிக்கும் முறை. அந்தக் காலத்தில் பல்வேறு தினசரி பணிகள் செய்ய இந்தமுறைகள் போதுமானது மட்டுமல்ல; எந்தக் கருவியுமின்றி கணிக்க உதவக்கூடியது.  அந்தக் காலத்தை கணக்கில் கொண்டால் சிறப்பான அல்காரிதம்.

இந்த முறையில் தமிழகம் போன்ற நிலநடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதியில் மட்டுமே கணிக்க முடியும். வடஇந்தியாவில் இந்த அல்காரிதம்கள் பொருந்திவராது. பழமையின் போதாமை இன்றைக்கு இந்த அல்காரிதம் போதுமா? இணைய வலைத்தளம், ஜிபிஎஸ் போன்ற பயண வழித்தட தொழில்நுட்பங்கள் செயல்பட இன்று மைக்ரோ வினாடி துல்லியம் தேவை. மைக்ரோ வினாடி என்பது ஒரு வினாடியின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு! 

பூமியில் மட்டுமல்ல நிலவிலும் மனித குடியிருப்பை நிறுவ உள்ளனர்.எனவே நிலவு நேரம் வரையறை செய்து வருகிறார்கள். நிலவில் நேரம் கணிக்க இந்த அல்காரிதம் உதவாது.  தற்காலத்துக்கு தேவையான துல்லியத்தில் அளவிட அணுக்கடிகாரம் வேண்டும்.  பழமை போதாது; புதுமை வேண்டும்.  இப்படி இருக்க பழங்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள், குறிப்பாக ரிஷி முனிகள், எல்லா உண்மைகளையும்,எந்த ஓர் ஆய்வுக் கருவியும் இல்லாமல், கண்டறிந்தவர்கள் என்ற நம்பிக்கை வலியுறுத்தப்படுகிறது. அவரவர் 'பழமை'தான் பெரிது என்று வாதம் புரியும் இந்த மனநோய் பல உருவங்களில் தொடர்கிறது. மேலும் காலனிய வெள்ளையின மேட்டிமை வாத்தை எதிர்த்து இந்தியாவின் பண்டைய ஆய்வுகளைக் குறித்து ஏதோ இப்போதுதான் விழிப்பு ஏற்பட்டு வருகிறது போன்ற போலி தோற்றத்தையும் சிலர் ஏற்படுத்துகிறார்கள். இது வரலாற்று புரட்டு.  

வரலாற்று புரட்டு.

காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக, பண்டைய இந்தியாவிலும் வெவ்வேறு காலகட்டங்களிலும் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்த சான்றுகளின் அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொளப்பட்டுவருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல பெரும்பாலான காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களும் இதில் முனைப்பு செய்தனர்.  சுதந்திரத்திற்குப் பிந்தைய நேருவின் தலைமையில் அமைந்த ஆட்சியின் கீழ், பண்டைய இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சான்றுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக எஷியாடிக் சொசைட்டி ஏற்படுத்திய அறிவியல் வரலாறு கமிட்டி விரிவுபடுத்தப்பட்டு "இந்தியாவின் அறிவியல் வரலாற்றின் தொகுப்பிற்கான தேசிய ஆணையம்" 1965இல் நிறுவப்பட்டது. பின்னர் 1989 இல் பேராசிரியர் அப்துர் ரஹ்மான் தலைமையில் அறிவியல் வரலாற்றிற்கான தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆரியபட்டரின் நூல் உட்பட பல்வேறு ஆவணங்களைத் திரட்டி ஆய்வுகள் இதில் மேற்கொளப்பட்டு வருகின்றன.

The Asiatic Society, Kolkata

குறிப்பாக டி.டி.கோசாம்பி, டி.பி.சட்டோபாத்யாயா, ஏகேபாக், கேவி சர்மா, கிருபாசங்கர் சுக்லா, சாவித்திரி அம்மா, அன்சாரி பாலச்சந்திர ராவ் போன்ற இந்தியர்கள், ஜே.பி.எஸ்.ஹல்டேன், ஜே.டி.பெர்னல், ஜோசப் நீதம், போன்ற மேலை நாட்டினர் எனப் பலரும் இதில் பங்கு செலுத்தினர். தற்காலத்தில் தீபக் குமார், இர்ஃபான் ஹபீப்,துருவ் ரெய்னா, செந்தில் பாபு, மாயாங் வாஹியா, அனிகேத் சூலே, ஷைலஜா, எம் டி ஸ்ரீநிவாசன்,எம் எஸ் ஸ்ரீராம், திவாகரன், ஹரி, எனப்பலரும் ஆய்வு செய்து வருகின்றனர். தற்செயலாக இதில் பலரும் மார்க்சிய அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக இவர்கள் துவக்கிய ஆய்வின் அடிப்படையில் தான் தற்போது மேலும் நுட்பமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற ஆழமான ஆய்வுகள் எதையும் போலி புரட்டு பேசுபவர்கள் சட்டை செய்வதில்லை.  சென்றதினி மீளாது புனைவுப்போலி பழங்கதைகள் எதற்கும் உதவாது. முற்காலத்தில் பொற்காலம் இருந்ததாகக் கருதும் புனைவுகள் வருங்காலத்தில் பொற்காலத்தைப் படைக்கும் முனைப்பு காணாமல் போய்விடுகிறது.

”சென்றதினி மீளாது, மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர் எண்ணத்தை திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடியின் புற றிருந்து வாழ்வீர்: தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா!” என்று கூறிய பாரதி அறிவுரைதான் நமக்கு வழிகாட்டி. 

மகாகவி பாரதியார்

நவீன அறிவியல் என்பது எதோ வானத்திலிருந்து திடீர் என்று குதித்துவிடவில்லை. முன்னோர்கள் தோளில் நின்று மேலும் தொலைவையும் கூடுதல் ஆழமாகவும் இயற்கையை அறிவதுதான் நவீன அறிவியல். இன்றைய நவீன அறிவியல் நம்முடைய முன்னோர்களான அரிஸ்டாட்டில், ஆரியபட்டர், இபின் ஆல் ஹைதம் போன்றோரின் தோளில் நின்றுதான் வளர்ந்துள்ளது. எனவே நேற்றை விட இன்று நமது அறிவு செறிவானது; இன்றைவிட நாளை மேலும் மெச்சப்படும். மேலும் நவீன அறிவியல் என்பது ஏதோ மேலை கருத்து அல்ல.

பல்வேறு கிளை நதிகள் இணைந்து ஆறு உருவாவதைபோலப் பண்டைய பண்பாடுகளின் சிந்தனைகளின் தொடர்ச்சியே நவீன அறிவியல். எல்லா பண்பாடுகளின் பங்களிப்பில்தான் நவீன அறிவியல் உருவானது. எனவே நவீன அறிவியல் மனித இனத்தின் பொதுச் சொத்து.   நம்மைச் சூழ்ந்துள்ள சூழல் சிக்கல், பொதுச் சுகாதாரம், வறுமை, ஏற்றத்தாழ்வு போன்ற சவால்களைச் சந்திக்க திண்ணாகர், ஆரியபட்டர் சரகர் போல உற்றுநோக்கல் தீவிரப் பரிசோதனை ஆகிய வழிமுறைகளைக் கைக்கொண்டு பகுத்தறிவு பாதையில் செல்வதுதான் அறிவுடைமை.

(உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறைத் தமிழ்த் தொண்டர் விருது அளிக்கப்பட்ட நிகழ்வில் த.வி.வெங்கடேஸ்வரன் ஆற்றிய உரையின் செழுமைப்படுத்தப்பட்ட எழுத்து வடிவமே இந்தக் கட்டுரை)