ரயில் அல்லது ரயில் பயணங்கள் தொடர்பான பேச்சுகள் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம், சமூக ஊடகங்களில் வட இந்திய ரயில் பயணங்கள் தொடர்பாகவும், பயணத்தின்போது தான் பட்ட கஷ்டங்கள் குறித்த பதிவுகளும் வெகுவாகக் காணப்படும். முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய பெட்டிகளில் unreserved டிக்கெட்களை வைத்து பயணிப்பவர்களால் தாம் பட்ட கஷ்டங்களைக் கூறி அங்கலாய்த்துப்போவார்கள் சிலர். அந்தப் பேச்சுகளில் பெரும்பாலானவை அப்பெட்டிகளில் பயணிக்கும் மக்களைச் சுற்றியே இருக்கும். குறைவான பெட்டிகளை இயக்கும் ரயில்வே துறையை நோக்கியோ அல்லது அரசாங்கத்தை நோக்கியோ அந்தக் கேள்விகள் நீளாது. இதுதான் சமீபத்தில் பரிதாபங்கள் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ குறித்தான உரையாடலிலும் வெளிப்பட்டது.
நாடு முழுவதிலும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தெற்கு ரயில்வே 13 ஜோடி ரயில்களில் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாக வெளிவந்த செய்திகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்ககை குறைக்கப்படவில்லை என்று ரயில்வே விளக்கமளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு ரயிலில் இரு பொதுப்பெட்டிகள் இருக்கும்பட்சத்தில், அதில் அதிகபட்சமாக 350 பயணிகள் பயணிக்கலாம். ஆனால், 600 முதல் 700 பயணிகள் வரை டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இத்தகைய சூழலில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்படுவதால், unreserved டிக்கெட்டுகளைப் பெறும் பயணிகள், கூட்ட நெரிசல் காரணமாக ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் சூழல் ஏற்படும்; இதன் காரணமாக முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்ற அச்சமும் இருக்கிறது.
சமீபத்தில்கூட டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் ஒருவர் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி உபாத்யாய் தலைமையிலான அமர்வு, “ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாக பயணச்சீட்டுகளை ரயில்வே துறை தொடர்ந்து விற்பனை செய்வது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த பெரும்பாலான மக்கள், unreserved பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்களின் விற்பனையில் கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்தனர். மேலும், அப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.
ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாக பயணச்சீட்டுகளை ரயில்வே துறை தொடர்ந்து விற்பனை செய்வது ஏன்?நீதிமன்றம் கேள்வி
நாடு முழுவதிலும் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டிகளில் மூன்றில் இரண்டு மடங்குகள் ஏசி அல்லாத ரயில் பெட்டிகள். ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படியே பார்த்தாலும், இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கின்றனர் என்றால், அதில் சுமார் 20% பேர் மட்டுமே ஏசி பெட்டிகளில் பயணிக்கின்றனர். 80% மக்கள் ஏசி அல்லாத பெட்டிகளான ஸ்லீப்பர் மற்றும் பொதுப்பெட்டிகளில்தான் பயணிக்கின்றனர். எனவே, பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, அரசு தரப்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் பயணிகளின் கோபத்தால் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
சமீபத்தில்கூட, ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பொதுப்பெட்டிகளின் உற்பத்தியை அதிகரித்து வருவதாக தெரிவித்திருந்தார். எனவே, பிரச்னை மக்களிடம் இல்லை என்பது தெளிவு. அதே சமயம், வன்முறையில் ஈடுபடும் நபர்களையும், ரிசர்வ் பகுதியில் அமர்ந்து செல்லும் பயணிகளை துன்புறுத்தும் செயல்களையும் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக நீலம் பதிப்பகம் மற்றும் நீலம் கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார் (பிப்ரவரி 18ஆம் தேதி).
மக்கள் ஒழுக்கத்தை கடைபிடித்திருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று சொல்லி இருக்கிறார் துணை கமிஷனர் கே.பி.எஸ்.மல்ஹோத்ரா. ஆணவத்தோடு மல்ஹோத்ரா கோரும் இதே ஒழுக்கத்தை தான் 'பரிதாபங்கள்' குழு அந்த மக்களை நோக்கி கோருகிறதுவாசுகி பாஸ்கர்
அதில், ‘போதுமான ரயில்கள் இல்லாமல் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட ரயிலுக்காக ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகத்தான் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார். மேலும், “மக்கள் ஒழுக்கத்தை கடைபிடித்திருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று சொல்லி இருக்கிறார் துணை கமிஷனர் கே.பி.எஸ்.மல்ஹோத்ரா. ஆணவத்தோடு மல்ஹோத்ரா கோரும் இதே ஒழுக்கத்தை தான் 'பரிதாபங்கள்' குழு அந்த மக்களை நோக்கி கோருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
“பதிவேற்றிய ஒரு மணி நேரத்தில் சில மில்லியன் பார்வையாளர்களை சேரும் உங்கள் வீடியோ சமூகத்தில் சில விளைவுகளை உண்டு செய்யக் கூடியது, அது எதிர்மறையாகி விடக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களிலோ வட இந்திய மக்களின் செயல்பாடுகள் மட்டும்தான் விவாதத்திற்கு உள்ளாகின. இந்த விவாதங்களில் உள்ள ஆபத்துகள் குறித்துப் பேசுவதற்காக, வாசுகி பாஸ்கரையே தொடர்புகொண்டோம். கடும் ஆதங்கத்துடன் தனது கருத்தினைப் பதிவு செய்தார். “இந்த விவகாரம் முழுக்க முழுக்க சமூக அரசியல் சம்பந்தப்பட்டது. இதுபோன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டை வடமாநிலங்களுடன் உதாரணத்திற்குக் கூட ஒப்பிடக்கூடாது.
நேற்று unreserved பெட்டிகள் குறைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கிண்டலாக பதிவொன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், நான்கைந்து தினங்களுக்கு முன்பாகவே Scroll தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், அவர்கள் மிகவிரிவாக இப்பிரச்னை குறித்து எழுதியிருந்தார்கள். பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின் ரயில்வே மிகவும் ஆடம்பரமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில், அவர்கள் புதிதாக அறிமுகப்படுத்திய ரயில்கள் எதுவும் சாதாரண மக்களது பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்படவில்லை. அடுத்தது, Unreserved பெட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது.
உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். பாண்டிச்சேரியிலிருந்து காலை 5.35 மணிக்கு ஒரு ரயில் வருகிறது. அதில், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் போன்ற ஊர்களிலிருந்து தினசரி சென்னை வந்து வேலை பார்க்கும் மக்கள் வந்து செல்கிறார்கள். அதில், 2 பெட்டிகள் மட்டுமே முன்பதிவு செய்யக்கூடிய பெட்டிகள். மீதி எல்லாம் unreserved பெட்டிகள். இந்த மாதிரியான ரயில்கள் வடமாநிலங்களில் எத்தனை இருக்கிறது. எனவே, வடமாநில ரயில் பெட்டிகள் ஜனசந்தடி மிகுந்து காணப்படுவது நிர்வாக ரீதியாக ஆய்வுக்குறிய ஒன்று.
உட்காருவதற்கு இடமிருந்து, பயணம் செய்ய வசதி இருந்தால் யார் வன்முறையில் ஈடுபடப்போகிறார்கள்.
அம்மாநில மக்களுக்கு இயல்பாகவே ஒரு கோபம் எழும்தானே? ‘நாங்கள் நிற்கக்கூட இடமில்லாமல் வருகிறோம்.. உங்களுக்கு மட்டும் சவுகரியமான பயணமா?’ என்ற வெறுப்பு மக்களிடையே இருக்குமல்லவா. அது கும்பல் மனப்பான்மையாக மாறும்போது அதில் வன்முறை வெளிப்படுகிறது. மக்களுக்கு இயல்பாக இருக்கும் நீண்டகால கோபத்தை சரிசெய்ய அரசு என்ன செய்தது? அத்தனை மக்களுக்கும் கோபம் எழுகிறது என்றால் அவர்களது தேவை என்ன என்பதை அரசுதானே ஆலோசிக்க வேண்டும். உட்காருவதற்கு இடமிருந்து, பயணம் செய்ய வசதி இருந்தால் யார் வன்முறையில் ஈடுபடப்போகிறார்கள்.
அரசை எதிர்த்து கேட்க வேண்டிய கேள்விகளுக்கு பதிலாக, நீங்கள் அம்மாநில மக்களை நோக்கி கைகாட்டுகிறீகள். அம்மக்களையே கிண்டல் செய்வது எம்மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பதை ஆலோசிக்க வேண்டாமா?
‘அம்மாநில மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்’ எனச் சொல்லுவது மிகமிகமோசமான அணுகுமுறை. ‘பரிதாபங்கள்’ வீடியோவை ஆதரித்து பேசுபவர்கள், ‘இது கும்பமேளா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.. அம்மக்களின் அணுகுமுறையே இப்படித்தான்’ என்கிறார்கள். அவர்கள் வாதத்திற்கே வைத்துக்கொள்வோம்; கும்பமேளா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்றால் அது மிக முக்கியமான பிரச்னை அல்லவா? அதை ஆய்வு செய்ய வேண்டாமா?
எளிய மக்களால் உங்களை நோக்கி கேள்வி எழுப்ப முடியாது.. உங்களுக்கு அது ஏதுவாக இருக்கிறது
இந்த விவகாரத்தில் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. அதைவிடுத்து எளிய மக்களை குற்றம் சொல்வது மிகமிகத் தவறு. அதிலும், தமிழ்நாட்டில் ‘பரிதாபங்கள்’ காணொளியில் காட்டப்படும் மக்கள், வேலைக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் இளைஞர்களாகத்தான் புரிந்துகொள்ளப்படுவார்கள். சொந்த ஊரில் பிழைப்பதற்கு வழியின்றி வேறு இடத்திற்கு செல்லும் மக்கள் மீதுதான் ‘பரிதாபங்கள்’ சித்தரிக்கும் பிம்பம் விழுகிறது. இதில், உண்மையான பிரச்னை மறைந்துவிடுகிறது.
அம்மக்களின் பிரச்னைகளைப் பேசாமல் இப்படி மோசமாக சித்தரிப்பது, தமிழ்நாட்டு மக்கள் வடமாநில மக்களைக் கையாளுவதிலேயே சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில், வடமாநில இளைஞர்கள் குறித்து ‘பரிதாபங்கள்’ வெளியிட்டுள்ள இரு வீடியோக்களுக்கும் கணிசமான பார்வையாளர்கள் இருந்தனர்.
எனவே, இந்த விவகாரம் எது சரி? எது தவறு? என்பதைப் பற்றியது அல்ல. யாரை நோக்கி உங்களால் கேள்வி எழுப்ப முடிகிறது? யாரை நோக்கி உங்களால் கேள்வி எழுப்ப முடியவில்லை? என்பதைப் பற்றியது.
மதம் சம்பந்தப்பட்ட, அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் உங்களால் ட்ரால் செய்ய முடியுமா? மக்களின் எதிர்வினைகளையும், அவர்களது செயல்பாடுகளையும்தான் உங்களால் ட்ரால் செய்ய முடிகிறது. ஆனால், எளிய மக்களால் உங்களை நோக்கி கேள்வி எழுப்ப முடியாது.. உங்களுக்கு அது ஏதுவாக இருக்கிறது
அரசை நோக்கி உங்களால் கேள்வி எழுப்பக்கூடிய அளவுக்கு ஜனநாயகத் தன்மை நம் நாட்டில் உள்ளதா? உங்களுக்கு எதிராக போராடுவார்கள், மிரட்டல்கள் வரும், மன்னிப்பு கேட்கச் சொல்லுவார்கள், வீடியோவை நீக்கச் சொல்லுவார்கள், நீங்கள் நீதிமன்றம், வழக்கு என அழைய வேண்டி வரும்.. இப்படி எல்லாம் செய்தால் நாம் பாதிக்கப்படுவோம் எனத் தெரிந்து, யாரைப் பற்றி பேசினால் பாதிப்பு வராதோ அவர்களைப் பற்றி பேசுவது ஒருவகையில் அதிகாரத்திற்கு துணை போவதுதான்” எனத் தெரிவித்தார்.