தமிழ்
தமிழ் கோப்புப்படம்
சிறப்புக் களம்

இளையோர் மொழிக்களம் 33 | மொழியை நோக்கித் திரும்புவோம்!

மகுடேசுவரன்

யாவற்றிலும் தமிழாக்கங்கள் நிகழவேண்டும் என்பது நம் நோக்கம். அத்தமிழாக்கங்கள் தாள்மட்டத்திலேயே நின்றுவிடுவதில் எந்தப் பயனுமில்லை. அவற்றை முழுமையாய் அன்றாடப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும். அதனை ஈடேற்றுவதில் அரசினர் முதற்கொண்டு தனியொருவர் வரைக்கும் நம் அனைவர்க்கும் மிகுந்த கடப்பாடு உண்டு. இல்லையேல் அறிஞர் குழாத்திடை மட்டுமே தமிழ்ச்சொற்கள் தேங்கிப்போய்விடலாம். தமிழ்ச்சொல்லாக்கங்களை மிகுந்த கவனத்தோடு பார்வையிட்டு வரவேண்டும். இயல்பாகவே அச்சொற்கள் புதுமையானவையாக இருக்கும். கண்டதும் ஈர்க்கும் தன்மையும் அவற்றுக்குள்ளன. பாராமுகமாய்த் திரும்பிச் செல்வதால் இழப்பு யார்க்கு என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

தாய்மொழி

ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் இடையாடையாக வேட்டி கட்டுவதிலிருந்து கால்குழாய் உடை உடுத்தும் பழக்கம் வந்தது. ‘பேண்ட்’ என்பதனைத் தமிழாக்க நம் மக்களுக்கே தெரிந்திருந்தது. ‘போயி குழாய் மாட்டிட்டு வா, போ’ என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்குப் ‘பேண்டு’ என்பது உகந்த சொல்லாய்த் தெரியவில்லை. ‘பேண்டுபோட்டு வர்றான்’ என்று சொல்ல முடியவில்லை. அச்சொல் வேறு இகழ்பொருளை உணர்த்தும் வகையில் உள்ளது. அதனால் கால்குழாய்ச் சட்டை என்றனர். நம்முடைய உடைகள் யாவும் உடல் உட்செல்லுமாறு குழாய் வடிவில் அமைக்கப்பட்டவைதாம்.

பொத்தான் வைக்காமல் தலைவழியாக அணியப்படவேண்டிய மேலாடைகள் யாவும் குழாய்வடிவினதாம். குழாய் அணிந்திருக்கிறேன் என்று நாம் ஏன் சொல்வதில்லை ? நமக்கு உடையும் மேல்நாட்டு இறக்குமதியாய்த்தான் வேண்டும். அந்தச் சொல்லும் மேல்நாட்டு வடிவில்தான் வேண்டும். அதனைத்தான் பெருமையாகக் கருதுகிறோம். வேட்டியில் இல்லாத பெருமை குழாய் அணிவதில் இருக்கிறதாம். முந்நூற்றாண்டு அடிமைத்தனத்தின் ஏக்கம்தான் அவர்களைப்போல் நடந்துகொள்வதையும் மொழியாள்வதையும் தீராவேட்கையோடு செய்ய வைக்கின்றது.

“மொழியில் புதிது புதிதாகச் சொற்களைச் சேர்த்துக்கொண்டே போகவேண்டும், அப்போதுதான் மொழி வளரும். ஆங்கிலத்தைப் பாருங்கள் – எங்கிருந்து வேண்டுமானாலும் சொற்களைத் தருவித்துக்கொள்கிறது, அதனால்தான் ஆங்கிலம் உலகளாவிய மொழியாகப் பரவியிருக்கிறது, தமிழிலும் அவ்வாறு பிறமொழிச் சொற்களை ஏற்றுப் பயன்படுத்தவேண்டும், அப்போதுதான் தமிழும் வளரும்” என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ‘அதுதானே… இந்தக் கூற்றும் சரியாகத்தானே இருக்கிறது!’ என்று தோன்றலாம்.

tamil letters

முதலில் ஆங்கிலத்திற்கும் தமிழுக்குமான வேறுபாட்டினைத் தெரிந்துகொள்ளவேண்டும். ஆங்கிலம் என்பது பிறமொழிச்சொற்கள் திரண்டு உருவான மொழி. ஆங்கிலம் பிற்காலத்து மொழி. செவ்வையான ஐரோப்பிய மொழிகளின் சொற்களைத் தனக்குள் ஈர்த்து ஈர்த்து உருவானதுதான் ஆங்கிலம். அதற்கென்று தனித்த தோற்றுவாய் கற்பிக்க இயலாது. அதன் இயக்கமே தொடர்ச்சியான கலப்பினை ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. அத்தன்மைக்கு முற்றிலும் எதிரான இயல்புடையது தமிழ். தமிழ்மொழியானது தானாக உயிர்த்து உயிர்த்து, ஒலிகூட்டி, சொல்கூட்டி, வளர்ந்தெழுந்த மொழி. தமிழின் பழைமையே அதன் உயிர். தனித்தியங்கும் வல்லமையே தமிழாய் வளர்ந்திருக்கிறது. பிற்கால மொழியும் காலத்தால் மூத்த செம்மொழியும் இயல்பால் ஒன்றல்ல. செம்மொழியின் பண்பென்று அதன் தனித்தியங்கும் ஆற்றலையே குறிப்பிடுவர்.

தமிழ் தனிமொழியாய்த் தனித்தியங்க வேண்டும். அதற்குள்ளேயும் கலப்படம் நிகழும்தான். ஆனால், காலப்போக்கில் அவற்றைச் சிறுநுரையாய்ப் புறந்தள்ளி நகரவல்லது. இங்கே கலப்படத்தால் பயனில்லை. அது மொழியியற்கைக்கு எதிரானது. ஒரு சொல் வேண்டுமென்றால் அதனை ஆக்கிக்கொள்ளும் ஆற்றலுடையது தமிழ். தனக்குள்ளிருந்தே இன்றைக்கு வேண்டிய ஒரு சொல்லை ஆக்கிக்கொள்ளும் உயிர்ப்புடையது தமிழ். தமிழின் இலக்கிய வளத்தில் பல்லாயிரக்கணக்கான சொற்கள் தீண்டப்படாமல் உறங்கிக்கொண்டுள்ளன. க்ளீனர் என்று ஒரு சொல்லை உட்புகுத்த நினைத்தால் அது ‘கிளினர்’தான். ‘ட்ரைவர்’ என்று ஒரு சொல்லைக் கொண்டுவர நினைத்தால் அது ‘டைவர்’தான். அவற்றை எழுதவும் இயலாது. தமிழ்மக்களால் அவற்றைச் சொல்லவும் இயலாது. இவற்றுக்கு எதிராக ஒன்றைப் புகுத்தினால் அது எவ்வாறு நிற்கும்?

’ட்ரான்ஸ்போர்ட்’ என்ற சொல்லுக்குத் தமிழில் ‘போக்குவரத்து’ என்று அழகாக இருக்கிறது. ஆங்கிலத்தில் பாருங்கள், Trans – Port ஆகிய இரண்டு சொற்களை வைத்து அச்சொல்லை ஆக்கியிருக்கிறார்கள். அதன் பொருள் என்ன ? துறைமுகத்திற்கிடையே நடைபெறும் இடப்பெயர்ச்சி. ஒரு ‘போர்ட்டிலிருந்து’ இன்னொரு ‘போர்ட்டிற்கு’ மாறுவது. இந்தச் சொல்லைத்தான் அனைத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். சாலைவழியே நிகழ்ந்தாலும் அதே சொல்தான் அவர்கட்கு. ஆனால், தமிழில் அவ்வளவு பொருட்கூர்மையான ஒரு சொல் - ‘போக்குவரத்து’ என்று வழங்கப்படுகிறது. போவதும் வருவதுமான செயல்கள். போக்கும் வரத்தும் என்னும் உம்மைத் தொகை. இதுதான் செம்மொழியின் வலிமை. செம்மொழியின் அழகு. இதனை உணராமல் எப்படி நாம் பிறமொழிக்கு அடிமைப்பட இயலும் ?

தமிழ்

நம்மிடமுள்ள குறை இயல்சார் நூல்களையும் துறைசார் கட்டுரைகளையும் மிகச்சிறந்த தமிழறிஞர்களைக்கொண்டு தமிழாக்கம் செய்யாததுதான். ஒரு கட்டத்திற்குமேல் மொழிக்கல்வி வாழ்வின் பொருள்நிலை மேம்பாட்டிற்கு உதவவில்லை என்றானபோது, அதனைக் கற்பது குறைந்ததுதான். ஆனால், நிலைமை இப்படியே எதிர்த்திக்கில் செல்லாது. அங்கும் சென்று முட்டித் திரும்பும்போது பயிர்த்தொழிலே பயனுடைத்து என்ற நிலைமை வரும். நம் மொழியே நனிசிறப்பு என்ற உணர்வு பெருகும். அவ்வாறு மொழியை, பண்பாட்டை நோக்கித் திரும்பும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது என் கணிப்பு.