ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி:
வடசென்னையின் பிரபல தாதா நாகேந்திரன், வேலூர் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரவுடி நாகேந்திரனின் சகோதரர்களான ரவுடி ரமேஷ் மற்றும் முருகன் ஆகியோர் முன்பகை விவகாரத்தில் மற்றொரு ரவுடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வியாசர்பாடி போலீசார், நேற்றிரவு ரவுடி நாகேந்திரனின் சகோதரர்களான ரமேஷ் மற்றும் முருகன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
51 பட்டாகத்திகள், 2 இரும்பு ராடுகள் பறிமுதல்!
சோதனையில் இருவர் வீடுகளில் இருந்தும் 51 பட்டாகத்திகள் மற்றும் இரண்டு இரும்பு ராடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முன்பகை காரணமாக கொடுங்கையூரைச் சேர்ந்த பி-கேட்டகிரி ரவுடியான மோகன் தாஸ் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கொலை செய்ய திட்டம் தீட்டிய ரவுடி நாகேந்திரனின் சகோதரர்களான ரமேஷ், முருகன், அக்கா மகன்களான தம்பி துரை, தமிழழகன் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.
போலீசார் தனித்தனியாக விசாரணை!
கைது செய்யப்பட்ட ரவுடி முருகன் ரவுடி மீது 33 வழக்குகள் இருப்பதாகவும், ஏ கேட்டகிரி ரவுடி என்பதும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 நபர்களிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களால் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்ட கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ் குறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொடுங்கையூர் போலீசார் தலைமறைவாக இருந்த மோகன் தாஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
தம்பி கொலைக்கு பழிக்குப் பழி?
அப்போது, அவர் பி-கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. போலீசார் தொடர் விசாரணையில், ரவுடி நாகேந்திரனின் சகோதரர்களான ரமேஷ், முருகன் ஆகியோர் ரவுடி மோகன் தாஸை கொலை செய்ய திட்டமிட்டது போல, ரவுடி மோகன் தாஸ் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.
ரவுடி மோகன் தாஸ் வடசென்னை பெண் தாதாவான "இல்லா மல்லி" என்பவரது மகன் என்பதும், தன் தம்பி கொலைக்கு பழிவாங்க நாகேந்திரனின் சகோதரர்களை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
இருதரபினரும் மாறி மாறி செய்த கொலைகள்!
அதேபோல நாகேந்திரனின் மற்றொரு தம்பியான பிர்லா போஸ் என்பவரின் கொலைக்கு பழிவாங்க ரமேஷ் மற்றும் முருகன் ஆகியோர் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. "1999 ம் ஆண்டு ரவுடி நாகேந்திரன் தம்பியான பிர்லா போஸ் என்பவரை பெண் தாதா 'இல்லா மல்லி' தரப்பினர் கொலை செய்ததும், அதன் தொடர்ச்சியாக இல்லா மல்லி தரப்பினரான ஸ்டான்லி சண்முகன் என்பவரை ரவுடி நாகேந்திரன் கொலை செய்துள்ளார். இந்தப் பகை மாறி மாறி இருதரபினரும் கொலை செய்ததாகவும், கடைசியாக கடந்த 2020 ம் ஆண்டு பெண் தாதா இல்லா மல்லியின் மகனான விஜய் தாஸ் என்பவரை ரவுடி நாகேந்திரனின் தரப்பினர் கொலை செய்துள்ளனர்.
அனைவரையும் கைது செய்த போலீசார்!
இதற்கு பழி வாங்க பெண் தாதா 'இல்லா மல்லி' காத்திருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்தில் 'இல்லா மல்லி' குடும்பத்தில் மிச்சமிருக்கும் மோகன் தாஸை கொலை செய்ய ரவுடி நாகேந்திரனின் சகோதரர்கள் திட்டமிட்டதும், தனது சகோதரர் விஜய் தாஸ் கொலைக்கு பழிவாங்க அண்ணன் மோகன் தாஸ் திட்டமிட்டதும் இதனால், இருதரப்பும் மோதிக் கொள்வதற்காக காத்திருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அனைவரையும் கைது செய்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.