ராதிகா எக்ஸ் தளம்
குற்றம்

“எல்லா செஞ்சீங்க.. அந்த சந்தேகம் ஏம்ப்பா” டென்னிஸ் வீராங்கனை கொலையில் தந்தையின் கொடூர முகம்!

இதற்கிடையே ஹரியானா டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலை தொடர்பாக போலீசாரின் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Prakash J

ஹரியானா மாநிலம் குருகிராமின் சுஷாந்த் லோக்கில் வசித்து வந்தவர் ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான இவர் பல போட்டிகளில் கலந்துகொண்டு போட்டிகளில் வென்றுள்ளார். இந்த நிலையில், தனது மகள் என்றும் பாராமல் அவரது தந்தை ராதிகாவைச் சுட்டுக் கொன்றார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. விளையாட்டு உலகிலும் அதிர்ச்சியை உண்டாக்கியிருந்தது.

ராதிகா, நீரஜ் சோப்ரா

இந்தக் கொலைக்கு ஒலிம்பிக்கின் தங்க மகன் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா எதிர்வினையாற்றியுள்ளார். இதுகுறித்து அவர், “ஹரியானாவைச் சேர்ந்த பெண் விளையாட்டு வீராங்கனைகள் நாட்டிற்காக அற்புதங்களைச் செய்ததற்கான சில சிறந்த உதாரணங்கள் ஏற்கெனவே நம்மிடம் உள்ளன. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க குடும்பங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும். மேலும் சிறப்பாகச் செயல்படும் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சிலை நிறுவப்பட்டு போற்றப்பட வேண்டும்” என அவர் என்.டி.டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதற்கிடையே ராதிகா யாதவ் கொலை தொடர்பாக போலீசாரின் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் அளித்துள்ள விவரங்களில், தீபக் யாதவ் தனது மகளுக்கு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து ஆதரவளித்துள்ளார். தவிர, அவர் தோள் பட்டை காயம் காரணமாக அவர் விளையாடுவதைத் தவிர்த்துள்ளார். அப்போது ராதிகாவுக்காகச் ரூ.2 கோடி முதலீடு செய்து அகாடமி வைத்துள்ளார். அதேபோல், வீடியோ ஒன்றில் நடிப்பதற்காக அவரைக் கூட்டிச் சென்றுள்ளார். அதற்காக அவருடன் 11 மணி நேரம் செலவிட்டுள்ளார். மறுபுறம், அவருக்கு மாதந்தோறும் பல வீடுகளின் வாடகை மூலமாக 15-17 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. தவிர, சொந்த ஊரில் பண்ணை வீடும் ஒன்று இருக்கிறது. அதனால், அவர்களுக்கு பணம் ஒரு பெரிய விஷயமாக இல்லை. அதேநேரத்தில், தீபக் யாதவ், குடும்பத்தினர் மீது அதிகம் சந்தேகம் கொண்டுள்ளார். தவிர, அடிக்கடி கோபப்படக்கூடியவர். ஒருமுறை தன் மனைவி அவருடைய சகோதரனின் பேசிக் கொண்டிருந்ததையே அவர் சந்தேகப்பட்டுள்ளார்.

ராதிகா, தீபக்

அதற்காக, அவரது மனைவியை கண்டபடி திட்டியுள்ளார். அதேபோல், தனது மகள் மீதும் சந்தேகம் கொண்டிருந்தார். இதற்கிடையே அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, மகள் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் அவர் ஆதரவளிப்பதை அவரது உறவினர்கள் கேலியும் கிண்டலமாய் அவரை விமர்சித்துள்ளனர். குறிப்பாக, 'கிரா ஹுவா பாப்' (வீழ்ச்சியடைந்த தந்தை) எனக் கிண்டலடித்துள்ளனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இது, அவருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கோபத்துடன் வீட்டுக்குத் திரும்பிய அவர் மகளை எதிர்கொண்டுள்ளார். ராதிகாவிடம் அகாடமியை மூடச் சொல்லியிருக்கிறார். அவர், ‘ரூ. 2 கோடி முதல் போட்டு தற்போது அதை மூடச்செய்வது அர்த்தமற்றது’ என மறுத்துள்ளார். இது, மேலும் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆத்திரத்தில்தான் அவரை சுட்டுக் கொன்றுள்ளார்” என போலீசார் தெரிவிக்கின்றனர்.

விளையாட்டுக்குப் பிறகு, கலைத்துறையிலும் ஒரு பெயரைப் பெற ராதிகா யாதவ் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். ’கேரவன் யுன் ஹி சல்தா ரஹா மேரா’, ’தின் பி யுன் தல்தா ரஹா மேரா’, ’பிர் தும்ஹாரி யாத் ஆயி ஹம்கோ’ என்ற ஆல்பத்தின் ஒரு பாடலில் அவரது திறமை பெரிதும் பாராட்டப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்தப் பாடலை ஆயிரக்கணக்கான மக்கள் விரும்பிப் பார்த்துள்ளனர். ராதிகாவின் மரணத்திற்குப் பிறகு, இந்தப் பாடலின் பல சார்ட்ஸ்கள் மற்றும் ரீல்கள் வைரலாகி வருகின்றன.