4 நாளில் திருமணம்; போலீஸ் கண்முன்னே மகளை சுட்டுக் கொன்ற தந்தை! ம.பியில் பகீர் சம்பவம் - நடந்ததுஎன்ன?
52 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தது. அதனை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி.. ஆம், தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று ஒரு இளம்பெண் பேசிய வீடியோ தான் அது. அந்த வீடியோவில், “நான் விக்கி என்பரை திருமணம் செய்ய விரும்புகிறேன். முதலில் எங்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட எனது குடும்பத்தினர் தற்போது மறுக்கிறார்கள். நாள்தோறும் அவர்கள் என்னை அடிக்கிறார்கள். கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார்கள். எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு எனது குடும்பத்தினரே பொறுப்பு” என்று பதட்டத்துடன் அந்த பெண் பேசியது பலரையும் குலை நடுங்க வைத்திருக்கும்.
எப்படியாவது அந்தப் பெண் காப்பாற்றப்பட வேண்டும் என்று பலரும் நினைத்தார்கள். ஏதும் விபரீதமாக நடந்துவிடக் கூடாது என்று பலரும் அச்சப்பட்டார்கள். ஆனால், அவர்கள் அச்சப்பட்டபடி அது நடந்தே விட்டது. யார் அந்தப் பெண்? என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்.
வீடியோவை பார்த்து விரைந்த போலீஸ்..
காவல்துறையினரின் பார்வைக்கும் அந்த வீடியோ சென்றுள்ளது. வீடியோ கண்டதும் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் தர்ம்வீர் சிங் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கோலா கா மந்திர் பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீடியோவில் பேசிய தனு (20) என்ற அந்த பெண்ணும் அவரது தந்தை மகேஷ் குஜ்ஜாரும் வந்திருந்தனர். உறவினர்களும் திரண்டிருந்தனர். தான் 6 வருடங்களாக விக்கி என்பவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் விக்கி.
நான்கு நாட்களில் திருமணம்..
இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் தனுவுக்கு வெறொருவருடன் அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்திருந்தனர். திருமணத்திற்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கிறது. அதாவது, ஜனவரி 18 ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில்தான் தனக்கு பிடிக்காத திருமணம் குறித்து வீடியோ பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார் தனு. அந்த வீடியோவை குடும்பத்தினரும் பார்த்து பயங்கர கோபத்தில் இருந்துள்ளனர் என்று தெரிகிறது.
சமாதானக் கூட்டத்தில் தன்னுடைய மகளிடம் தனியாக பேச வேண்டும் என தந்தை மகேஷ் கேட்டிருக்கிறார். ஆனால், தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக தனு உறுதியாக தெரிவித்து இருக்கிறார். அத்துடன் தான் வீட்டிற்கு செல்ல பயமாக இருப்பதாகவும், அரசு காப்பகத்திற்கு செல்லவே விரும்புவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
பாய்ந்த தோட்டாக்கள்.. போலீஸ் முன்னே பறிபோன உயிர்!
சட்டென மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அத்துனை பேரின் முன்னிலையிலேயே தன்னுடைய மகள் தனு மீது சுட்டார் மகேஷ். மீண்டும் ஒருமுறை துப்பாக்கியில் சுட்டு உயிர் பிரிந்துவிட்டதா என்பதை சரிபார்த்தார் உறவினர் ராகுல். இந்த சம்பவத்தை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக மகேஷ் மற்றும் ராகுல் இருவரும் போலீஸ் மீது துப்பாக்கியை திருப்பியுள்ளனர். ஆனால், மகேஷை மட்டும் எப்படியோ போலீஸ் மடக்கி பிடிக்க, ராகுல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காட்டுமிராண்டி நிலை எப்போது ஒழியும்!
ஒரு பெண் தான் விரும்பும் ஒருவரை திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது. அது பிடிக்கவில்லை என்றால் பெற்றோர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். சொல்லி புரிய வைக்கவும் முயற்சிக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் சுதந்திரத்தில் தலையிடுவதோடு உயிரையும் பறிப்பது எந்தவிதத்தில் நியாயம்.
நம்முடைய நாடு இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருப்பதற்கு காரணம், இதுபோன்ற பிற்போக்கான விஷயங்கள்தான். காதல் என்பது இயல்பானது. மனிதர் நாகரீகமடைந்த பின்னர் மனிதனாக மாறியப்பின்னர் காதல் என்ற ஒன்று நாகரீகத்தில் உருவாகிவிட்டது. இத்தனை காலம் ஆகியும் காதலுக்காக கொலைகள் நடப்பது காட்டுமிராண்டி காலத்தையே பிரதிபலிக்கிறது.