ஹரியானா | டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை! இதுக்கெல்லாமா உயிரை எடுப்பது?
ஹரியானா மாநிலம் குருகிராமின் சுஷாந்த் லோக்கில் வசித்து வந்தவர் ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான இவர் பல போட்டிகளில் கலந்துகொண்டு போட்டிகளில் வென்றுள்ளார். இந்த நிலையில், இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டுள்ளார். இது, அவருடைய தந்தைக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து ராதிகாவிடம் அவருடைய தந்தை கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அவர், தன் மகள் என்றும் பாராமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இன்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தின்போது அவர் 5 தோட்டாக்களைப் பயன்படுத்தியதாகவும், அதில் 3 தோட்டாக்கள் ராதிகா மீது பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ராதிகா சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். பின்னர் வந்த உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக அங்கு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறைக்கு புகார் அளித்ததன் பேரில், ராதிகாவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராதிகாவின் மறைவு மிகப்பெரிய இழப்பு என்று அவருக்குபயிற்சி அளித்த மனோஜ் பரத்வாஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "ராதிகா விளையாட்டில் முறையான கவனம் செலுத்தியவர், ஒழுக்கமானவர் மற்றும் அபரிமிதமான திறமை கொண்டவர். இது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு" என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக குருகிராம் காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் குமார் கூறுகையில், “சமூக ஊடகங்கள் தொடர்ச்சியாக பதிவுகள் இட்டு வந்ததன் காரணமாக வீட்டில் பதற்றம் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இருவருக்கு இடையிலான வாக்குவாதத்தில் தந்தை பதற்றமடைந்து அவளைச் சுட்டார். பயன்படுத்தப்பட்ட ஆயுதம் உரிமம் பெற்ற ரிவால்வர் தான். அது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது," என்றார்.