செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை அரும்பாக்கத்தில் கடந்த வாரம் கணேசன், மதன், ரவி, ராஜா சத்தியசீலன் ஆகிய ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 39 கிலோ கெட்டமைன், 50 லட்சம் பணம், 105 கிராம் தங்க நகைகள், ஐந்து துப்பாக்கிகள் 79 தோட்டாக்கள், 5 செல்போன்கள் இரண்டு பாஸ்போர்ட்டுகள் இரண்டு எடை மெஷின்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள், 1.4 கிலோ மெத்தபெடைமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்:
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜா என்பவர் முக்கிய போதைப்பொருள் கும்பல் கடத்தலின் தலைவனாக செயல்பட்டதும் குறிப்பாக இந்த கும்பலுக்கும் இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் சந்தேகித்துள்ளனர். சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரானுடன், தற்போது கைதாகி உள்ள ராஜாவிற்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாக போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான்:
கஞ்சிபாணி இம்ரான், பல நாடுகளில் இவரின் கூட்டாளிகள் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டு வருவதை பல நாட்டு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் தலைவனாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருபவர் கஞ்சிபாணி இம்ரான். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என பல நாடுகளில் இருந்து போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்து அங்கிருந்து பல நாடுகளுக்கும் சப்ளை செய்து போலீசாருக்கு சிம்மசொப்பணமாக இருந்து வருகிறார்.
இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலோடு தொடர்பு:
கஞ்சிபாணி இம்ரானை தேடி கைது செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையில் தள்ளியது இலங்கை போலீஸ். ஆனால், ஜாமீன் பெற்று தலைமறைவாகினார். தற்போது, இவர் துபாயில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி சிறையில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலோடு தொடர்பு கொண்டதை வைத்து என்ஐஏ அதிகாரிகள் 7 நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிக்கியிருக்கும் 5 பேர் கும்பல் எப்படி இம்ரானுடன் தொடர்பு கிடைத்தது என்பது குறித்து விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ராஜாவுக்கு போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி?
இதனையடுத்து தனிப்படை போலீசார், கைது செய்யப்பட்ட ராஜாவிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ராஜா, பின்னர் மெக்கானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் போன்ற வேலையை கற்றுக்கொண்டு சம்பாதித்து வந்துள்ளார். பின்னர் சொந்தமாக ஜவுளிகளை வாங்கி எக்ஸ்போர்ட் செய்யும் பிசினஸை ஆரம்பித்த ராஜா, ஜவுளிகளை வாங்குவதற்காக மண்ணடி மற்றும் இலங்கை போன்ற நாட்டிற்குச் சென்று வரும்போது போதைப் பொருள் மற்றும் ஆயுதம் கடத்தும் மாபியாக்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ள ராஜா:
குறிப்பாக இலங்கை நாட்டில் மூன்று நபர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் போதைப் பொருள் ம்ற்றும் ஆயுதம் கடத்தினால் அதிகப்படியான பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியதால் அவர்கள் உத்தரவுக்கிணங்க ராஜா கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இலங்கை நபர் கூறும் நேபாளம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து மெத் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் வாங்கி கப்பல் மூலமாக ஜவுளி கொண்டு செல்வது போல் அதனை மறைத்து அனுப்புவதை ராஜா வாடிக்கையாக வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைமாறிய ஹவாலா பணம் குறித்து போலீசார் விசாரணை:
போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் அனுப்பினால் விலையை விட இருமடங்கு பணம் ஆன்லைன் வாயிலாக இலங்கை நபர் அனுப்புவதும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக ஹவாலா பணம் மூலமாக கைமாறி இருக்கலாம் என தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரவி என்பவர் இதற்கு பண உதவி அளித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜா பெறக்கூடிய கமிஷனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் குறிப்பாக கார் ஒன்றை வாங்கி அதற்கு டிரைவராக சத்தியசீலன் என்பவரும் செயல்பட்டு வந்ததும் சத்தியசீலனுக்கு அதிகப்படியான பணத்தை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேருடைய வங்கிக் கணக்குகளையும், சொத்துப் பட்டியலையும் ஆய்வு செய்யும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருவதாகவும், ஹவாலா பணம் எவ்வளவு கைமாறியுள்ளது எனவும் இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் துப்பாக்கி சப்ளை செய்த நேபாளம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த நபரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர்.