திமுக நிர்வாகி கைது pt desk
குற்றம்

ஈரோடு | அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் பணம் கேட்டு மிரட்டல் - திமுக நிர்வாகி கைது

ஈரோடு அருகே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக ரவிக்குமார் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனைக்குள் நுழைந்த சந்தோஷ் என்பவர் தான் சமூக ஆர்வலராக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, கேட்கும்போது ரூ.5 ஆயிரம், பத்தாயிரம் என கொடுக்க வேண்டும்.

இல்லையெனில் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணத்தை வாங்கிக் கொண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் நிர்வாகம், மருத்துவர்களின் சேவை மற்றும் அவசிய சிகிச்சை கருவிகள் இல்லை என்று வீடியோ எடுத்து அதனை ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களின் வாயிலாக பரப்பி தங்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பணம் கொடுக்க முதல்வர் மறுத்ததால் சந்தோஷ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 'சாலை விபத்தில் வருபவர்கள் இறந்து விடுவார்கள், போதுமான மருத்துவர்கள் இல்லை. மேலும் அத்தியாவசிய மருத்துவக் கருவிகள் இல்லை என்று அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசி அதனை அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ச் ஆப் குரூப்பில் பதிவிட்டுள்ளார்.

எனவே அரசுக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களையும் மிரட்டும் தொனியில் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் செயல்படும் சந்தோஷ் என்ற நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த பெருந்துறை காவல்துறையினர், 3 பிரிவுகளின் கீழ் சந்தோஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ் பெருந்துறை நகர திமுக மாணவரணி அமைப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.