சிவகங்கை | மாணவிக்கு 400 முறை தோப்புக்கரணம்.. 8 வருடங்களுக்கு பின் ஆசிரியைக்கு கிடைத்த தண்டனை!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசுப் பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் செய்து வராததால், ஆசிரியை சித்ரா, மாணவியை 400 முறை தோப்புக்கரணம் போட வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாணவியின் தாயார், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
2017ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், ஆசிரியை தரப்பு விளக்கமளிக்க வாய்ப்பளித்தும் பதில் கூறவில்லை என்று குறிப்பிட்டார். மனித உரிமை மீறலில் ஆசிரியை ஈடுபட்டது தெளிவாவதாகக் கூறி, மனுதாரருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்கும்படியும், இந்த தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலித்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.