செய்தியாளர்: காளிராஜன் த
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையைச் சேர்ந்தவர் பெருமாள். சிறுமலையில் விவசாயம் செய்து வரும் இவர், பலாப்பழ வியாபாரமும் செய்து வந்துள்ளார். போலவே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பன்றிமலை சோலைக்காடு பகுதியில் தோட்டத்தையும் குத்தகைக்கு எடுத்து அங்கும் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு யானைகள் பெருமாளின் தோட்டத்தில் சண்டை போட்டுள்ளன. அப்பொழுது ஒரு யானையின் தந்தம் உடைந்து கீழே விழுந்துள்ளது.
இதனை பார்த்து எடுத்த பெருமாள், அதை விற்பனை செய்வதற்காக சிறுமலையைச் சேர்ந்த பலாப்பழ வியாபாரியும் தனது நண்பருமான ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பெருமாள் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் யானை தந்தத்தை விற்க முயன்றுள்ளனர். இதற்காக சிலுவத்தூரைச் சேர்ந்த பிரபு, கோபால்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் ஆகிய இடைத்தரர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் கேரளாவைச் சேர்ந்த ஜோஷி என்பவரும் இடைத்தராகராக செயல்பட்டு மதுரையில் யானை தந்தத்தை விற்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே யானை தந்தத்தை ஒரு கும்பல் விற்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாடு மதுரை மண்டல பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று 31.01.25 திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள நொச்சிஓடைப்பட்டி அருகே சிறுமலை வனசரக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு மதுரை மண்டல அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சிறுமலையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில், 600 கிராம் எடை கொண்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானைத் தந்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். இதனை அடுத்து 7 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறுமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.