வேலூர் | விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன குழந்தை - 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் தரணி - பிரியா தம்பதியினர். இவர்களது மூன்று வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா கடந்த 28-ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து SP மதிவாணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து கடந்த மூன்று நாட்களாக குழந்தையை தேடிவந்தனர். இந்நிலையில் காணாமல் போன குழந்தை ஜெயப்பிரியா வீட்டின் அருகே உள்ள மற்றோருவரின் பாழடைந்த கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு குழந்தையின் உடலை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.