கைதான இளங்கோ
கைதான இளங்கோ புதியதலைமுறை
குற்றம்

பெண்களின் வாகனங்களை குறிவைத்து திருடிய முதியவர்.. காத்திருந்து கைது செய்த போலீஸ்..!

யுவபுருஷ்

சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள், தொடர்ந்து திருடுபோவதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. கடந்த 10ம் தேதி உள்ளகரம் பகுதியை சேர்ந்த கவிதா(39) என்பவர், மயிலாப்பூர் செல்வதற்காக வேளச்சேரி பறக்கும் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் இரவு 9.30 மணியளவில் வந்து பார்க்கும் போது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.

இது தொடர்பாக கவிதா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கண்காணித்த போது, முதியவர் ஒருவர் நடந்து வந்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் ரயில் நிலையம் அருகே காத்திருந்து திருடர் திருட வந்த போது கையும் களவுமாக பிடித்தனர்.

அவரது பெயர் இளங்கோ(63) என்பதும், வேளச்சேரி விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. காலை நேரத்தில் வீட்டில் இருந்து புறப்படும் இளங்கோ, கையில் ஏராளமான சாவிக்கொத்தினை எடுத்துக் கொண்டு சென்று ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் பெண்களின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியுள்ளார். கையில் இருக்கும் சாவிகளை பயன்படுத்தும்போது எந்த வண்டியின் லாக் திறக்கிறதோ அதனை எடுத்துச் சென்று மவுண்ட் ரோட்டில் மெக்கானிக் கடையில் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார் இளங்கோ. சில வண்டிகளை சிந்தாரிபேட்டை, புதுப்பேட்டையிலும் நெம்பர் பிளேட்டுகளை மாற்றி விற்றுள்ளார்.

தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை, செகண்ட் ஹாண்ட் ஆக வாங்கும்போது, வாகன எண் மற்றும் பதிவு சான்றிதழை மட்டும் பார்த்துவிட்டு வாங்க வேண்டாம். எஞ்சின் எண், சேஸ் எண் சரியாக உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.