செய்தியாளர்: V.M.சுப்பையா
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதையடுத்து அந்த குற்றப்பத்திரிகை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். இந்த வழக்கில், 29 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, கடந்த மே 28ம் தேதி, ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி, ஜூன் 2ம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என அற்வித்திருந்தார்.
அதன்படி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்களை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று அறிவித்தார். இதற்காக புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட அவருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் ஒன்பது பிரிவுகளில், ஒரு மாதம் முதல் 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையும், தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவித்த நீதிபதி, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் எந்த தண்டனையும் அறிவிக்கவில்லை.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அதிகபட்ச தண்டனையான 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையை ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும். அதேபோல பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ராஜலட்சுமி, உரிய விசாரணைக்கு பிறகு, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ், போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டு, அதற்காக இந்த தீர்ப்பு நகலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.