விருதுநகர் | முன்னாள் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
செய்தியாளர்: A. மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலைஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவரது வீட்டில் நள்ளிரவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அலறியடித்தக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் வீட்டில் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்;போது தீப்பற்றி எரிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலே அருகில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் உறவினரான சௌந்தர் என்பவர் வீட்டிலும் இருமுறை பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், வீட்டு வாசலில் பாட்டில்கள் உடைந்து கிடந்ததையடுத்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில், முன்பகை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.