ஒடிசா நபருடன் போலீசார்
ஒடிசா நபருடன் போலீசார் ட்விட்டர்
குற்றம்

சென்னையில் மாமியாரை கொன்றுவிட்டு தலைமறைவான மருமகன்; 28 ஆண்டுகளுக்குபின் ஒடிசாவில் கைதுசெய்த போலீசார்

Prakash J

1995ஆம் ஆண்டு மாமியாரைக் கொலை செய்துவிட்டு, 28 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்துவந்த நபரை, சென்னை தனிப்படை போலீசார் ஒடிசாவில் கைதுசெய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார், “ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பகுதியைச் சேர்ந்தவர், ஹரிஹர பட்டா ஜோஷி (23). கடந்த 1993ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர், தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி உள்ளார். அப்போது நங்கநல்லூரைச் சேர்ந்த இந்திரா (21) என்ற பெண்ணைக் காதலித்துள்ளர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் இருவருக்கும் 1994ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டதால், இந்திரா விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர பட்டா ஜோஷி, 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமியார் ரமாவின் வீட்டுக்குச் சென்று மனைவி இந்திரா மற்றும் அவருடைய சகோதரர் கார்த்திக் ஆகியோரை கத்தியால் தாக்கி உள்ளார். இதில், இருவரும் ரத்தக் காயங்களுடன் தப்பியோடிவிட்டனர். பின்னர் ஹரிஹர பட்டா ஜோஷி, வீட்டிலிருந்த மாமியார் ரமாவை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

இதையும் படிக்க: ஐஎஸ்பிஎல் டி10: சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா! மற்ற அணிகளை வாங்கியவர்கள் யார், யார்?

இதுகுறித்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு தப்பியோடிய ஹரிஹர பட்டா ஜோஷியை போலீசார் தேடி வந்தனர். ஆதம்பாக்கம் காவல் துறையினர், ஹரிஹர பட்டா ஜோஷியின் சொந்த மாநிலமான, ஒடிசாவுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே அவருடைய நண்பர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்தபோது 2001ஆம் ஆண்டு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமும் நடைபெற்றுள்ளது. அத்துடன், தொடர்ந்து தனது இருப்பிடத்தையும் மாற்றியபடி தலைமறைவுடனேயே இருந்துள்ளார். இந்த நிலையில்தான் ஹரிஹர பட்டா ஜோஷியைப் பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அந்த தனிப்படையினர், ஹரிஹர பட்டா ஜோஷி 22 வயதில் எடுத்த கருப்பு வெள்ளை நிற புகைப்படத்துடன், ஒடிசா மாநிலம் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக ஒடிசா காவல் துறையினரின் உதவியையும் நாடியுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்துகொண்ட பட்டா ஜோஷி, அருகாமையில் இருந்த ரயில்வே நிலையம் சென்று அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அந்த நேரத்தில், போலீசார் அவரைக் கைதுசெய்தனர். சுமார் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை கைதுசெய்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இதையும் படிக்க: காருக்குள் இறந்த நிலையில் கிடந்த ஆஸ்கர் விருதுபெற்ற ‘பாரசைட்’ பட நடிகர்..அதிர்ச்சியில் திரையுலகினர்!