ஜெயிலர் 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூலிக்க முடியாததற்கு தயாரிப்பு நிறுவனத்தின் ஓடிடி ஒப்பந்தம் காரணமாக வட மாநிலங்களில் திரையரங்குகள் வரம்பு விதித்தது முக்கிய காரணமாக உள்ளது. ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தாலும், திரைப்படம் மைல்கல்லை எட்டும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளி தெலுங்கு மற்றும் கன்னட சினிமாத்துறை ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கொடுத்த தென்னிந்திய சினிமாத்துறையாக முன்னணியில் இருக்கின்றன. பாக்ஸ் ஆபிஃஸ்க்கு முன்னோடியாக இருந்த தமிழ் சினிமா, முதல் ஆயிரம் கோடி படத்தை கொடுக்க போராடிவருகிறது. பாலிவுட்டில் 5, ஆயிரம் கோடி படங்களும், தெலுங்கு டோலிவுட்டில் 4, ஆயிரம் கோடி படங்களும், கன்னட சாண்டல்வுட்டில் ஒரு ஆயிரம் கோடி படமும் இருக்கின்றன. ஆனால் இன்னும் தமிழ்சினிமா தங்களுடைய முதல் ஆயிரம் கோடி திரைப்படத்திற்காக காத்திருக்கிறது.
இந்தசூழலில் தான் காமெடி-ஆக்ஷன் த்ரில்லராக வெளிவந்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம், ஆயிரம் கோடி வசூலிப்பதற்கான ஆற்றலை கொண்டிருந்தாலும், தயாரிப்பு நிறுவனம் செய்த தவறால் அதை எட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதாவது தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எந்தப் பிரச்சினையும் இன்றி PVR, INOX, சிங்கிள் ஸ்க்ரீன் திரையரங்கம் உள்ளிட்ட அனைத்திலும் 'ஜெயிலர் 2' வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு ஓடிவருகிறது. ஆனால் வட மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை சில குறிப்பிட்ட சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மற்றும் பிற சிறிய மல்டிபிளக்ஸ்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.
அதாவது ரஜினிகாந்தின் எதிர்ப்பார்க்கப்பட்ட இரண்டாம் பாகத்தை தயாரித்திருக்கும் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம், நான்கு வார இடைவெளிக்குள் அனைத்து மொழிகளிலும் ஓடிடியில் வெளியிடுவதாக ஒரு ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் வட மாநிலங்களில் உள்ள PVR, INOX மற்றும் Cinepolis திரையரங்குகள் ஜெயிலர் திரைப்படத்தை 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிடவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தன. ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஜெயிலர் 2 திரைப்படம் எண்ணிக்கை குறைந்த சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டரில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது. இதனால் தான் ஜெயிலர் 2 ஆயிரம் கோடி வசூலை ஈட்டுவது கடினம் என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் வட மாநிலங்களில் அதிக நாட்கள் ஓடி மிகப்பெரிய வசூலை ஈட்டியது. ஆனால் ஜெயிலர் 2-ன் வசூலை தயாரிப்பு நிறுவனமே தடுத்து நிறுத்திட்டதாக ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்திவருகின்றன. இருப்பினும் அனைத்தையும் கடந்து ஜெயிலர் 2 திரைப்படம் ஆயிரம் கோடி மைல்கல்லை எட்டும் என்ற நம்பிக்கையில் பெருவாரியான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.