துல்கர் சல்மான் நடிப்பில் நிஹாஸ் ஹித்யத் இயக்கி செப்டம்பர் 3ம் தேதி வெளியான படம் I'm Game. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார் துல்கர் சல்மான். அந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், I'm Game படத்தின் தோல்வி குறித்து பகுப்பாய்வு ஒன்றை பதிவிட்டிருந்தேன். அதனை நீங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன் துல்கர் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் சொல்லி பதிவிட்ட துல்கர் "நான் அதை முழுமையாகப் படித்தேன். உங்கள் பகுப்பாய்வு தவறு என்று நான் சொல்லவில்லை; நீங்கள் பெரும்பாலும் சரியாகவே சொல்லியிருந்தீர்கள். அதையெல்லாம் நாங்களும் நன்கு அறிவோம் என்பதை நம்புங்கள். ஆனால், எங்கள் தரப்பில் நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தாலும், வெளிப்புறக் காரணிகள் அல்லது சூழல்கள் அந்த முடிவுகளைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடிய தருணங்கள் உண்டு. ஒரு திரைப்படத்தின் இறுதி வடிவத்தையோ அல்லது அதன் வெற்றியையோ பகுப்பாய்வு செய்வது எளிது. ஆனால், ஒரு படத்தை உருவாக்க 200 முதல் 300 பேர் வரை தேவைப்படுகிறார்கள்; அது ஒருபோதும் எளிதானதோ அல்லது சாதாரணமானதோ அல்ல.
அதற்கென நிலையான சூத்திரங்களையோ அல்லது கல்விசார் கோட்பாடுகளையோ அப்படியே பொருத்திவிடவும் முடியாது. உலக சினிமாவில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமோ அல்லது நடிகரோ வேண்டுமென்றே தவறுகளையோ அல்லது மோசமான படத்தையோ உருவாக்க நினைப்பதில்லை. நிஜ வாழ்க்கையிலேயே எல்லாமே நீங்கள் நினைத்தபடியா நடந்திருக்கிறது? அப்படியிருக்க, ஒரு உள்வட்டக் குழு மற்றும் பல வெளிவட்டக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு அமைப்பின் சூழலைச் சற்று யோசித்துப் பாருங்கள். நான் எப்போதும் என் குழுவின் பக்கமே நிற்பேன்; யாரையாவது குறை சொல்ல வேண்டுமென்றால், என்னை வேண்டுமானாலும் குறை சொல்லிக்கொள்ளலாம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.