`டோரதி’ வெற்றி விழா.. 25 திருநங்கைகளுக்கு நிதியுதவி செய்த படக்குழு!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ’டோரதி’. சிறுவயது நண்பர்களான சுப்பு, கார்த்தி ஆகியோரின் நட்பு பற்றியும், இறுதியில் சுப்பு தன்னை திருநங்கை என்பதை உணர்ந்து அதனால் நடக்கும் சமூக மாற்றத்தையும் கூறும் அழுத்தமான படைப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை உருவாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 25-ம் தேதி இப்படம், திரையரங்கில் வெளியானதிலிருந்தே சில தரப்பினரால் விமர்சிக்கப்பட்டும், மற்றொரு தரப்பினரால் பாராட்டப்பட்டும் வருகிறது.
இந்தச்சூழலில் தான், சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கத்தில் டோரதி திரைப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், டோரதி திரைப்பட குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். அப்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், டோரதி படத்தை பார்த்து நிறைய ஆண்கள் அழுதார்கள். திருநங்ககைள் மீது இதற்கு முன்பு இருந்த ஒரு பார்வை மாறி இருக்கிறது என ஆண்கள் கூறினார்கள், அது தான் இந்த படத்தின் உண்மையான வெற்றி. இந்தப் படத்தை பற்றி எதிரான கருத்து வரும் போது நான் அமைதியாக ரசிகர்கள் மற்றும் மக்களை நான் நம்பி இருந்தேன் அது தான் நடந்துள்ளது.
படத்தின் இறுதிக்காட்சியை மக்கள் ஏற்று கொள்வார்களா? என அனைவரும் கேட்டனர். ஆனால், நான் திரையரங்கம் சென்று பார்த்த போது மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் படத்தை கொண்டாடினர். முத்து மணி பாடலில் இருந்து படத்தை ஒரு music concert போல் திரையரங்கத்தில் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தை வெற்றி படமாக்கிய மக்களுக்கு நன்றிகள் என தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக படத்தின் வசூலில் இருந்து குறிப்பிட்ட தொகையை, படக்குழுவினர் 25 திருநங்கைகளுக்கு உதவி தொகையாக வழங்கினர்.

