‘ஜெயிலர் 2’ சென்சார் முடிந்தது! ரஜினி ரசிகர்களுக்கு வந்த செம குட் நியூஸ்!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் சென்சார் பணிகளை முடித்து U/A 16+ சான்றிதழ் பெற்றுள்ளது. 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் படத்தை பார்க்கலாம், குறைவானவர்கள் பெற்றோர் வழிகாட்டுதலுடன் அனுமதிக்கப்படுவர். படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியீடாக உள்ளது.
செய்தியாளர் - M.மீரா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் சென்சார் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதையடுத்து படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை வைத்து, ‘ஜெயிலர் 2’ படத்திற்கு A சான்றிதழ் கிடைக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. ஆனால், அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தணிக்கை வாரியம் படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதனால், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம். 16 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிகாட்டுதலுடன் படத்தை பார்க்கும் வகையில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் விவரங்களின்படி, ‘ஜெயிலர் 2’ படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் 18 விநாடிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இரண்டாம் பாகம் என்பதால், படத்தின் மீது ரசிகர்களிடம் ஏற்கெனவே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அக்டோபர் 15-ம் தேதி ‘ஜெயிலர் 2’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

