டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி முகநூல்
சினிமா

இறந்த பிறகும் தன் கண்களின் மூலம் உலகை காணும் டேனியல் பாலாஜி!

ஜெனிட்டா ரோஸ்லின்

ராதிகா நடிப்பில் வெளியான சித்தி தொடரின் மூலமாக நடிப்பில் தன் முதல் தடத்தை பதிக்க தொடங்கியவர் டேனியல் பாலாஜி. தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல ஹிட் திரைப்படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் கலக்கினார். மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட உள்ளிட்ட பிற மொழிகளிலும் திறம்பட நடித்துள்ளார்.

பெரும்பாலும் வில்லன் கதாப்பாத்திரத்திலேயே நடித்து மிரட்டியுள்ள இவர், 2003 ஆம் ஆண்டும் வெளியான காதல் கொண்டேன் திரைப்படம், அதன்பிறகு காக்க காக்க, பொல்லாதவன் போன்ற திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களை குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மிரள வைத்துள்ளார்.

இப்படி, நல்ல கலைஞனாக வளர்ந்து வந்த இவருக்கு திடீரென நேற்று இரவு (மார்ச் 29) மாரடைப்பு ஏற்பட்டது என்ற செய்தி வெளியானது. இதனையடுத்து அவசர அவசரமாக கொட்டிவாக்கம் பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் குடும்பத்தினர். ஆனால் அங்கு சிகிச்சை மேற்கொண்ட போதும் இவர் இறந்துவிட்டார் என்ற துக்க செய்திதான் கிடைத்தது.

தற்போது இவரின் இறப்பால் வாடும் குடும்பத்திற்கு அவரது நண்பர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரால் அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது.

கண் தானம்

டேனியல் பாலாஜி

இந்நிலையில், தான் இறந்தபிறகும்கூட தனது கண்களை ஒருவருக்கும் தானமாக வழங்கி சென்றுள்ளார் டேனியல் பாலாஜி

தற்போது புரசைவாக்கத்தில் அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில் அங்கே சென்ற மருத்துவர்கள் குழு அவரின் கண்களை தானமாக பெற்று சென்றுள்ளனர்.

சினிமாவில் என்னதான் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்வில் ஒருவருக்கு வாழ்வழித்து ஹீரோவாகி சென்றிருக்கிறார் டேனியல் பாலாஜி.