பாரதிராஜா - வைரமுத்து vairamuthu
சினிமா

"இனி.. யாரோடு பாட?.. யார் குறித்துப் பாட?" - பாரதிராஜா உடனான வீடியோவை பகிர்ந்த வைரமுத்து!

’தென்மேற்கு சீமையில, தேனிநகர் ஓரத்துல, பால்பாண்டியாக வந்தான் பாரதிராஜா’ என்ற பாடலை பாரதிராஜாவுக்கு பாடிய காணொளியை வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

Rishan Vengai

தமிழ் சினிமாவை மாற்றியமைத்த இயக்குநர் பாரதிராஜா 84 வயதில் காலமானது திரையுலகை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி அல்லிநகரத்திலிருந்து வந்த சின்னசாமியாக தொடங்கி, இமயமாய் உயர்ந்த அவரது பயணத்தை நினைவுகூர்ந்து, நெருங்கிய நண்பர் மற்றும் பாடலாசிரியரான வைரமுத்து, சிகிச்சை காலத்தில் அவருக்காக பாடிய பாடல் மற்றும் உரையாடல் வீடியோவை பகிர்ந்து “இனி யாரோடு பாட, யார் குறித்துப் பாட” என வேதனையுடன் எழுதியுள்ளார்.

தேனி மாவட்டம் அல்லிநகரத்திலிருந்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு புறப்பட்டுவந்த சின்னசாமி, பின்னர் தமிழ் சினிமாவையே மாற்றியமைத்தார். இயக்குநர் இமயமாக தமிழ் திரையுலகை கண்டியாண்ட பாரதிராஜா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 84 வயதில் நேற்று காலமானார்.

பாரதிராஜா

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்ட பாரதிராஜாவின் உடல், வத்தலகுண்டு அருகே காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு அங்குள்ள தோட்டத்தில், அரசுமரியாதையுடன் அவரது உடல்நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் பாரதிராஜாவுன் நண்பரும் பாடலாசிரியருமான வைரமுத்து, பாரதிராஜாவுக்காக பாடிய பாடலையும், அவருடைய உரையாடலையும் வீடியோவாக வெளியிட்டு வேதனையை பகிர்ந்துள்ளார்.

எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வைரமுத்து, பாரதிராஜா சிகிச்சையில் இருந்தபோது அவருடைய உடல் தேறிவிட்டதாக கூறி, அவரை உற்சாகப்படுத்த பாடலொன்றையும் பாடியுள்ளார். ’தென்மேற்கு சீமையில, தேனிநகர் ஓரத்துல, பால்பாண்டியாக வந்தான் பாரதிராஜா’ என்ற பாடலை பாரதிராஜாவுக்கு பாடிய காணொளியை பகிர்ந்திருக்கும் வைரமுத்து, ”இனி.. யாரோடு பாட?.. யார் குறித்துப் பாட?” என வேதனையையும் பகிர்ந்துள்ளார்.