“மேற்குத்தொடர்ச்சி மலை அழுதுகொண்டே கேட்குமே..” - கண்ணீர்விட்ட வைரமுத்து
தமிழ் சினிமாவின் கிராமத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்த பாரதிராஜா 84வது வயதில் காலமானது திரையுலகை உலுக்கியுள்ளது. அவரை நினைத்து கவிஞர் வைரமுத்து வீடியோவில் உருக்கமாக இரங்கியுள்ளார். பிதாமகனே, கிராமத்து ராஜாவே என்று அழைத்து, புழுதியை பொன்னாக மாற்றிய மாயக்காரன், சினிமாவின் நிறத்தை மாற்றிய கலையாளன் என புகழ்ந்து, தனிமை, துயரத்தை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநரான பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று தன்னுடைய 84வது வயதில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில், நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் உடலுக்கு அஞ்சலியும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருக்கும் கவிஞர் வைரமுத்து, பிதாமகனே போய் விட்டாயா, கிராமத்து ராஜாவே இறந்து விட்டாயா, எங்கள் மண்வாசனையில் இன்று சாவு மணக்கிறதா.. அடைத்துக்கிடந்த திரையுலக கதவுகளை திறந்த வெளிக்கு திறந்து விட்டவனே, ஆகாயத்துக்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே.. என்னையும் சுயமரியாதையோடு சுடரொளி வீச செய்தவனே..
‘உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே என்ற தலைவர்களின் மொழிக்கு இணையாக என் இனிய தமிழ் மக்களே’என்ற ரத்தின சொற்களுக்கு முத்திரை செய்தவனே. நீ மாயக்காரன். புழுதியை பொன் செய்தாய் சினிமாவின் நிறம் வெள்ளை என்று இருந்ததை கருப்பு என்று மாற்றிய கலையாளன் நீ. இடிந்த சுவர்களும், உடைந்த மனிதர்களும், கிழிந்த வாழ்க்கையும் உன் கதையின் கச்சா பொருள்கள் . இந்த கரட்டுப்பட்டியை தில்லி நகரத்துக்கு கொண்டு சேர்த்த அல்லிநகரத்து அரசன் நீ.
இனி நான் எப்படி தனியாக தேனி போவேன். மேற்கு தொடர்ச்சி மலை அருவிகளால் அழுது கொண்டே கேட்குமே எங்கே பாரதிராஜா?. கத்தாழங்காட்டு கரிச்சான் கேட்குமே எங்கே பாரதிராஜா?. கருவேலம் மரம் கேட்குமே எங்கே பாரதி ராஜா?. என்ன பதில் சொல்வேன், எப்படி நான் தனித்திருப்பேன்.
நீ தூரிகை, நான் வண்ணம், நான் தூரிகை நீ வண்ணம்.. தூரிகை இல்லாமல் வண்ணமும், வண்ணம் இல்லாமல் தூரிகையும் என்னத்துக்கு ஆகும். நீ அரிவாள், நான் கைப்பிடி.. நான் அரிவாள் நீ கைப்பிடி, அரிவாள் இல்லாத கைப்பிடியும், கைப்பிடி இல்லாத அரிவாளும் என்னத்துக்கு ஆகும்.
என்னை அழவிடு, என்னை அழவிடு, உடம்பின் உப்பெல்லாம் கண்ணீராய் கரையட்டும். இனி என்ன எழுத நடிகர் திலகம் போல் நானும் புலம்புகிறேன். “பூங்காத்து திரும்புமா.. என் பாட்ட விரும்புமா.. பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட.. எனக்கொரு தாய்மடி கிடைக்குமா”
முதல் மரியாதை செய்தவனே உனக்கென் இறுதி மரியாதை!” என பேசியுள்ளார்.

