selva and dhanush
selva and dhanush pt
சினிமா

"உங்களை வைத்து இயக்கும் நாள் வரும் என நினைக்கவில்லை" - தன்னை செதுக்கிய குருவுக்கே டீச்சர் ஆன தனுஷ்!

யுவபுருஷ்

தம்பியை உருவாக்கிவிட்ட அண்ணன் செல்வா..

தமிழ் சினிமாவில் தனெக்கென தனி பாணியில், ஒல்லியாக இருப்பவன் எல்லாம் ஹீரோ ஆக முடியாது என்ற க்ளீஷேவை உடைத்து நடிப்பில் அசுரனாக உயர்ந்துள்ளார் தனுஷ். இப்போது 50வது படத்தை தானே இயக்கும் தனுஷின் முதல் படத்தை இயக்கியவர் அவரது தந்தை கஸ்தூரி ராஜா. ஆனால், கதையோ அண்ணன் செல்வராகவனுடையது. கிட்டதட்ட அந்தப் படத்தை இயக்கியது செல்வராகவன் என்றே சொல்லப்படுகிறது. துள்ளுவதோ இளமை படத்தின் கதையில் தொடங்கி, காதல் கொண்டேன், 7 ஜி ரயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கன் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என்று தனித்துவமான கதைகளை இயக்கி தனி இடம் பிடித்தார் செல்வராகவன்.

குறிப்பாக காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களெல்லாம் தனுஷின் ஆரம்பகால சினிமாவில் ஆழமாக அடித்தளம் போட்டுத்தந்தவை. இந்த படங்களில் நடிக்கும்போது, ஒரு இயக்குநராக அண்ணன் செல்வராகவன் எத்தனை கெடுபிடியாக நடந்துகொண்டார் என்பதை விழா மேடை ஒன்றிலேயே பகிர்ந்துள்ளார் தனுஷ். கடைசியாக நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கிய நிலையில், நாயகனாக ஏற்று நடித்திருந்தார் தனுஷ். ஆனால் அந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது.

“ரொம்ப நன்றி டைரக்டர் சார்”

இந்நிலையில்தான், தனது 50வது படத்தை தானே எழுதி இயக்கி வருகிறார் தனுஷ். இதில் அண்ணன் செல்வாவை நடிகராக வைத்து அவர் இயக்குநராக இருப்பது கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அந்தப் போஸ்டரில் தனுஷ உடன் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இருந்தனர். அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் நேற்று வெளியானது.

முன்னதாக, இந்த படத்தின் கதை செல்வராகவனுடையது என்று தகவல் பரவிய நிலையில், ‘நண்பர்களே.. ராயன் படத்திற்கான கதையை நான் எழுதியதாக சில செய்திகளை கேள்விப்பட்டேன். இந்தப் படத்தின் கதை மற்றும் கதையாக்கம் தொடர்பான பணிகளில் என்னுடைய பங்களிப்பு எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க தனுஷின் கனவு படைப்பு. நான் இந்தப் படத்தில் ஒரு நடிகர் மட்டுமே” என்று விளக்கம் அளித்திருந்தார் செல்வா.

இப்படியாக போக ராயன் படத்தில் செல்வராகவன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டரை வெளியிட்ட தனுஷ், “உங்களை நடிகராக வைத்து படத்தை இயக்கும் நாள் வரும் என்று ஒருபொழுதும் நினைத்ததில்லை சார்” என்று அண்ணனுக்கு நன்றிப்பதிவை நெகிழ்ச்சிபட எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த செல்வராகவன், ”இந்த வாய்ப்புக்கு நன்றி டைரக்டர் சார். இது மிகச்சிறந்த படைப்பாக இருக்கும். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது” என்று நன்றி கலந்த வாழ்த்துப்பதிவை போட்டிருக்கிறார். அண்ணன், தம்பி இருவரது பதிவும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.