கில்லி முதல் பில்லா வரை.. மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ஹிட் படங்கள்.. எப்போது தெரியுமா? லிஸ்ட் இதோ!!

எதிர்வரும் மாதங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் புது படங்களுக்கு மத்தியில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் ரீ ரிலீஸ் ஆக இருப்பத் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. கில்லி முதல் பில்லா வரை படங்களின் ரிலீஸ் தேதி என்ன?
upcoming rerelease movies
upcoming rerelease moviespt

வேட்டையன், தங்கலான், கங்குவா என்று அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்களைக் காட்டிலும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி தற்போது ரீ ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள் தொடர்பான தகவல்கள்தான் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருக்கிறது. ஆண்டுகள் பல உருண்டோடினாலும், தொலைக்காட்சியில் தீபாவளி, பொங்கல் பண்டிகை தொடர்ந்து விடுமுறை நாட்களில் போட்டுத்தீர்த்துவிட்டாலும், தியேட்டர் அனுபவம் என்பது வேறுதான் என்கின்றனர் ரீசண்ட்டாக ரீ ரிலீஸ் ஆகி வரும் படங்களை பார்க்கும் ரசிகர்கள்.

குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பரில் ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற இரு படங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வெளியான நேரத்தில், ‘என் பங்கிற்கு நானும் வசூல் செய்கிறேன்’ என்று போட்டிபோட்டுக்கொண்டு வசூலை வாரி இறைத்தார்கள் ஆளவந்தானும், முத்துவும். ‘இப்போ, ஆளவந்தான் படத்துக்கு போவோமா அல்லது முத்து படத்துக்கு போவோமா’ என்று பெரும்பாலானோர் பேசியதை அந்த மாதத்தில் பார்க்க முடிந்தது.

அதே போல காதலர்களுக்கான மாதமாகவே பார்க்கப்படும் பிப்ரவரியில், சிவா மனசுல சக்தி, 96, பிரேமம், சீதா ராமம் போன்ற படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. காதலர்கள் கொண்டாடும் படங்கள் அனைத்தும் இந்த மாதம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு அதிரி புதிரி ஹிட் அடித்த படங்கள் ரீ ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதில் விஜய்யின் கில்லி படம் தொடங்கி அஜித்தின் பில்லா படம் வரை ரீ ரிலீஸ் ஆக இருக்கும் படங்களின் தொகுப்பை கீழே பார்க்கலாம்.

மின்சார கனவு

ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, கஜோல் மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் 1997ம் ஆண்டு வெளியான மின்சார கனவு படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தன. இன்றளவும் காதலர்களால் கொண்டாடப்படும் இத்திரைப்படம், வரும் மார்ச் 1ம் தேதி தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல் மன்னன்

அஜித் குமார், மானு உள்ளிட்ட பலரது நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் படம், நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, காதலர்களுக்கு பிடித்தமான படமாக அமைந்தது. சரண் இயக்கத்தில் உருவான படத்தில் பரத்ராஜ் மற்றும் எம்.எஸ்.வி இசையமைத்த பாடல்கள் பலரையும் சுண்டி இழுத்தன. இத்திரைப்படம் வரும் மார்ச் 1ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிகிறது.

பருத்திவீரன்

நடிகர் கார்த்திக்கு அறிமுக படமாக அமைந்த பருத்திவீரன் படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி படம் வெளியானபோது சுமார் 300 நாட்களுக்கு மேல் தியேட்டர்களுக்கு ஓடியது. அமீர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் பிரியா மணி நடிப்பில் ஆக்‌ஷன் - ரிவேஞ்ச் ஜானரில் உருவான படம், வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பில்லா

நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா காமினேஷனில் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் உருவான பில்லா திரைப்படம் கடந்த 2007ம் ஆண்டு வெளியானது. என்னதான் நடிகர் ரஜினியின் பில்லா பட ரீமேக் என்றாலும், ஏகே ஸ்டைலில் உருவான படம் நல்ல வரவேற்பையே பெற்றது. அஜித்துக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்த இது, யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் பிஜிஎம் கிங் என்ற பெயரை வாங்கி கொடுத்தது.

கில்லி

இந்த படம் எப்போது ரீ ரிலீஸ் ஆகும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் கில்லி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. நடிகர் விஜய்யின் கெரியரை கில்லி படத்திற்கு முன்பு, அதற்கு பின்பு என்று பிரிக்கும் அளவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது கில்லி. இன்றளவும் மோட்டிவேஷன் பாடல் பட்டியலில் தனி இடம் பிடித்துள்ளது படத்தில் இடம்பெற்ற‘அர்ஜுனரு வில்லு’ பாடல். இத்திரைப்படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

எழுத்து: யுவபுருஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com