Rajini, Vijay Sethupathi Jailer 2
கோலிவுட் செய்திகள்

`ஜெயிலர் 2'வில் விஜய் சேதுபதி, மீண்டும் இணைகிறதா `பேட்ட' கூட்டணி? | Jailer 2 | Rajini | VJS

`ஜெயிலர் 2'வில் ஏகப்பட்ட நடிகர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளது. அவை எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. இப்போது விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

Johnson

ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவே உருவாகிவரும் படம் `ஜெயிலர் 2'. இதன் படப்பிடிப்பு சென்னை, கேரளா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் ஏற்கனவே முடிந்துவிட்டது. தற்போது கோவாவில் படப்பிடிப்பு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

Jailer 2

இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவராஜ்குமார் தவிர மற்ற எந்த நடிகரின் பெயரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், முக்கிய பாத்திரங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, பாலகிருஷ்ணா, மிதுன் சக்ரபர்தி, வித்யா பாலன், மேக்னா ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷெராஃப் இரண்டாம் பாகத்திற்கு மீண்டும் வருவார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இப்போது இந்த நடிகர் பட்டியலில் விஜய் சேதுபதி பெயரும் இணைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு வெளியான வெற்றிப் படமான ஜெயிலரின் தொடர்ச்சியாக, `ஜெயிலர் 2'  படத்தில் ரஜினிகாந்த் 'டைகர்' முத்துவேல் பாண்டியன் வேடத்தில் மீண்டும் நடிக்கிறார். முதல் பாகத்தில் ரஜினிகாந்த் மாஸ் பேசப்பட்ட அதே வேளையில், அந்தப் படத்தில் சிறப்பு வேடங்களில் நடித்த சிவராஜ்குமார் உட்பட பல நடிகர்களின் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. இந்த பாகத்திலும் அது போல ஏகப்பட்ட நடிகர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளது. அவை எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. இப்போது விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. தான் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ள படங்களின் இடைவேளையின் போது `ஜெயிலர் 2'வுக்கு வருவார் என்றும், படத்தில் வில்லன் குழுவில் ஒருவராகவும் விஜய் சேதுபதி நடிக்கிறார் என தகவல்.

சமீபத்தில் தான் சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் `அரசன்' படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இப்போது `ஜெயிலர் 2'வில் நடிக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. இந்தத்தகவல் உண்மையாகும் பட்சத்தில், கார்த்திக் சுப்பராஜின் பேட்ட படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி, ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாக `ஜெயிலர் 2' இருக்கும். `ஜெயிலர் 2' ஜூன் 12, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.