"நானும் தவறு செய்திருக்கிறேன்" - அஞ்சான் ட்ரோல் பற்றி மனம் திறந்த லிங்குசாமி | Anjaan | Lingusamy
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால் நடித்து கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் அஞ்சான்.. இந்த படம் தற்போது ரீ எடிட் செய்யப்பட்டு இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகிறது.. இதனை ஒட்டி அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பேசியதாவது,
இந்தப் படத்தில் என்ன மாறுதல்கள் எனக் கேட்கப்பட்ட போது "2 மணி 36 நிமிடங்கள் இருந்த படம் 36 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் நீளத்தை குறைத்துவிட்டால் அது நன்றாக மாறிவிடாது. நம்முடைய நோக்கம் நீளத்தை குறைப்பது மட்டுமல்ல. படம் பார்க்கும் போது உங்களுக்கே ஒரு வேறுபாடு தெரியும். இந்த பதிப்பில் சூரி இல்லை சூர்யா மட்டும்தான் இருக்கிறார்" என்றார் லிங்குசாமி.
மேலும் சூர்யா இந்தப் படத்தை பார்த்துவிட்டாரா என்றதும் "படத்தை சிவக்குமார் சார் பார்த்தார். சூர்யா ஊட்டியில் இருக்கிறார், சந்தர்ப்பம் கிடைத்தால் அவர் படம் பார்ப்பார்" எனத் தெரிவித்தார்.
நீங்களே அடுத்து ஒரு புதிய படம் செய்யலாமே, ஏன் இந்த ரீரிலீஸ்? எனக் கேட்டதும் "சமீபத்தில் வாரியார் என்ற படத்தை தெலுங்கில் செய்து வெளியிட்டேன், தமிழிலும் டப் செய்து வந்தது. அடுத்தாக `மகாபாரதம்' படம் இயக்கும் வேலைகளை செய்தோம். அதற்கான நடிகர்கள், பட்ஜெட் பெரியது என்பதால் அது தாமதமானது. அதற்கே இரண்டு வருடம் சென்றுவிட்டதால், இப்போது வேறு ஒரு படம் துவங்க இருக்கிறேன். எனது அடுத்த படத்தில் வித்யாசாகர் மகன் நாயகனாக நடிக்கிறார். பிப்ரவரியில் இருந்து படப்பிடிப்பு துவங்க இருக்கிறது" என்றார்.
படத்தை ரீ-எடிட் செய்வதற்கான காரணம் கேட்கப்பட "11 வருடத்திற்கு முன்பு இந்தப் படம் வந்த போது முதன் முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம். முதன்முதலில் சிக்கியது நான்தான். ஆனால் இன்னமும் உண்மையாக இந்தப் படத்தை ரசித்த பலர் என்னை சந்திக்கையில் ஏன் இந்தப் படத்தை இப்படி திட்டினார்கள் எனக் கேட்பார்கள். இது உலகை திருப்பி போட்ட படம் என்று நினைத்து எல்லாம் செய்யவில்லை. இது ஒரு படம் அவ்வளவு தான். இந்தப் படம் பல சூர்யா ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அவர்களுக்காக தான் இந்த ரீ ரிலீஸ், எங்களது திருப்திக்கும். அந்த காலகட்டத்தில் போஸ் மாதிரி ஒரு தயாரிப்பாளர் இல்லை என்றால் இந்த பட்ஜெட்டில் படம் செய்திருக்க முடியாது.
அந்த காலகட்டத்தில் பெரிய பட்ஜெட்டில் செய்யப்பட சூர்யா சார் படம். அப்போது தொடர்ச்சியாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்த கம்பெனி. தொடர் வெற்றி கூட வெறுப்பு, கோபம், பொறாமையை ஏற்படுத்தும். அதையும் தாண்டி நம் மேல் அன்பாவர்கள் இருக்கிறார்கள். முதலில் நம்மை அடித்தவர்கள் இப்போது எல்லோரையும் அடிக்கிறார்கள். 11 வருடத்திற்கு முன்பு திட்டியதை விடவா என்னை இப்போது திட்டி விடுவார்கள் என்ற தைரியம் இருக்கிறது. மறுபடி தோற்பதற்கு ரீ ரிலீஸ் செய்கிறாயா எனக் கேட்கிறார்கள். இது வெற்றி தோல்விக்கானது அல்ல. பிடித்து படத்தை எடுத்தோம். சில படம் `ரன்', `ஆனந்தம்' போல் ஆகலாம். வெற்றி தோல்வி நம் கையில் இல்லை.
எல்லோருடைய கருத்துக்களை வைத்து ஒரு எடிட் செய்துள்ளோம். படம் வெளியீட்டு சமயத்தில் எங்களுக்கு நேரம் இல்லை. ஆகஸ்ட் 15 ரிலீஸ் என முடிவு செய்துவிட்டோம். படத்தின் இரண்டு பாதியை சேர்த்து பார்க்க கூட எனக்கு நேரம் இல்லாமல் இருந்தது. தொடர் வெற்றியில் இருப்பதன் பிரச்னை என்ன என்றால், இவருக்கு தெரியாததா என அனைவரும் அமைதியாகி விடுவார்கள். தொடர் தோல்வியில் இருந்தால் அனைவரும் வந்து அறிவுரை சொல்வார்கள். இது ஒரு மாதிரியான உலகம். வெற்றி தோல்வி என சவால் விடுவதற்காக இந்த படத்தை வெளியிடவில்லை. இப்போது எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது 2 வருடங்களாக, அவ்வப்போது எடிட் செய்து காட்டிக் கொண்டே இருந்தார்கள். இதன் பிறகு உங்களிடம் படத்தை கொடுக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.
அஞ்சானுக்கு பிறகு சூர்யாவின் கங்குவா படமும் அதிகம் கேலிக்கு ஆளானது. சூர்யா மீது வன்மத்துடன் சிலர் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு "அப்படி எனக்கு தெரியவில்லை என்றார். `ரன்', `சண்டைக்கோழி' மாதிரி ஒரு படம் வந்திருந்தால் யாராவது தடுத்திருக்க முடியுமா? மக்கள் பார்த்திருப்பார்கள். நானும் தவறு செய்திருக்கிறேன். சரியான படம் கொடுத்தான் நம் மீது பழி போட்டார்கள் என சொல்ல விரும்பவில்லை. நம் தவறை சுட்டிக்காட்டி பலரும் அதனை பலமடங்கு ஆக்கிவிட்டனர். அன்று எனக்கு ஆதரவாக பேசிய வெங்கட்பிரபுவுக்கும் திட்டு விழுந்தது. இப்போது நமக்கு பிடித்த யாரையாவது திட்டினால், ஆதரவாக நாம் போக முடியவில்லை. முகம் தெரியாதவர்களோடு எப்படி சண்டை செய்வது. இப்போது மணிரத்னம், ஷங்கர் என யாரும் இதில் சிக்காதவர்களே இல்லை. எல்லா படமும் நல்ல படம் என எடுத்த இயக்குநர்கள் உலகத்தில் யாருமே இல்லை. நல்ல படங்கள் எடுக்கக் கூடாது என்று யாரும் இல்லை. நாங்களே ஏமாந்துவிடுகிறோம். உங்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அது ஒரு மேஜிக் தானாக அமைந்து வர வேண்டும்" என்றார்
நீங்க ஒரு பேட்டியில் மொத்த வித்தையும் இறக்கியிருக்கேன் என சொன்ன வார்த்தை இந்தப் படத்திற்கு நெகடிவாக அமைந்ததாக நினைக்கிறீர்களா எனக் கேட்கப்பட "ஒரு வார்த்தையில் படத்தை காலிபண்ண முடியுமா என்ன? அது இந்தப் படத்திற்காக கொடுத்த பேட்டி இல்லை. படம் துவங்குவதற்கு முன் எந்தக் கதை என்றே முடிவு செய்யாத நிலையில் கொடுத்த பேட்டி. அதனை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். விட்டேத்தியாக கிராமத்தில் இருந்து வந்த ஒருவன் தைரியமாக ஒரு வார்த்தை சொல்வதில் என்ன தவறு. இதில் என்ன ஓவர் கான்பிடென்ட் இருக்கிறது. அதற்கு முன்பு `ரன்', `சண்டக்கோழி' எல்லாம் பண்ணவில்லையா? அந்த வார்த்தை, அந்த நேரத்தில் பயன்படுத்தப்பட்டது. அதை பண்ணியது யார் என்றும், பண்ண சொன்னது யார் என்றும் தெரியும்" என்றார்.
ரஜினி - கமல் படத்திற்கு நீங்கள் கதை சொல்வதாக ஒரு தகவல் வந்ததே என்றதும் "அப்படி ஒரு கதை இருந்தால் நானே போய் சொல்லுவேன். ஆனால் அதற்கான ஸ்க்ரிப்ட் இல்லை" என்றார்.

