பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘LIK’ படத்துக்கான பேட்டியில், நயன்தாராவுடன் தொடர்பான வைரல் வீடியோ விவகாரத்தை விக்னேஷ் சிவன் விளக்குகிறார். பசி காரணமாக விரைவில் சாப்பிட வேண்டிய சூழலில், இன்ஃப்ளூயன்சர்களுடன் புகைப்படம் எடுக்கும் தருணம் தவறாக எடிட் செய்யப்பட்டு, ‘நார்மல் பீப்பிள் கிடையாது’ என்ற சர்ச்சையாக மாறியதாக கூறுகிறார்.
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான படம் `LIK'. இப்படம் சம்பந்தமாக விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா சம்பந்தப்பட்ட ஒரு வைரல் வீடியோ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன விக்னேஷ் சிவன் "அந்த வீடியோவையே நீங்கள் எடுத்து இப்போது பாருங்கள், அது ஏற்கெனவே வந்த வீடியோ தான் அதை நான் எதுவும் மாற்ற முடியாது தானே. அன்று ஒரு நிகழ்வு நடந்தது. அதில் கலந்து கொள்ள நானும், நயனும் சென்றோம். சாப்பாடு நேரம் கடந்துவிட்டது, எங்களுக்கு பயங்கர பசி. எங்களை கேரவனுக்கு தான் அழைத்து செல்கிறார்கள் என நினைத்தோம். ஆனால் இன்ஃப்ளூயன்சர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து போய்விட்டார்கள். அவர்கள் அங்கிருப்பது எங்களுக்கு தெரியாது.
அப்போது ஒருவர் வந்து `எல்லோரிடமும் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்வதாக கூறி இருக்கிறோம். எனவே அவர்களுடன் போட்டோ எடுத்துவிட்டு நாம் சாப்பிட போகலாம்' என்றார். அப்போது அங்கிருந்த ஒரு பையனை அழைத்தேன். அவர் தான் வீடியோவில் பேசிய அந்த பையன். அவரிடம் `தம்பி ஒரு பத்து நிமிடம் மட்டும் கொடு நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்' எனக் கூறினேன். அண்ணா ஏற்கெனவே ரொம்ப நேரம் காத்திருக்கிறோம் அண்ணா என்று அவர் கூறினார். `சரி ஓக்கே எல்லோரையும் ஒரு ஒரு ஆளாக இல்லாமல் ரெண்டு மூன்று பேராக வந்தால், சீக்கிரம் எடுக்கலாம்' எனக் கூறினேன்.
உடனே அந்த பையன் `நம்ம எல்லாம் நார்மல் பீப்பிள் கிடையாது, இன்ஃப்ளூயன்சர்ஸ்' என கூறினான். இப்போது கூட அந்த வீடியோவை எடுத்து பாருங்கள், அவர் அவரையும், அங்கிருப்பவர்களையும் தான் `நம்ம எல்லாம் நார்மல் பீப்பிள் கிடையாது, இன்ஃப்ளூயன்சர்ஸ். நாம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது' என கூறி இருப்பார். அப்படி பேசிய விஷயத்தை மாற்றி எங்களை நார்மல் பீப்பிள் கிடையாது என சொல்வதாக மாற்றிவிட்டார்கள். பின்னர் அது பல மீம்ஸ் ஆக வந்தது, பாண்டிராஜ் சார் படத்தில் கூட வைத்தார். ஆனால் அதை எல்லாம் பார்த்து நாங்கள் என்ஜாய் தான் செய்தோம்" என்றார்.