பா. இரஞ்சித், 'காளிதாஸ் 2' படத்தின் ட்ரெய்லர் விழாவில் பேசினார். அவர், படம் சுவாரஸ்யமாகவும், பெண் கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்ததாகவும் பாராட்டினார். சின்ன படங்கள் தியேட்டரில் வெற்றி பெறும் நிலை உருவாகி வருவதை அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தியேட்டர் தான் நம்பிக்கை எனவும், தயாரிப்பாளர்களின் முதலீடு திரும்ப வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
பரத், அஜய் கார்த்தி நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ள படம் `காளிதாஸ் 2'. இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பா இரஞ்சித் "நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையிலேயே மிக சுவாரஸ்யமான படம். எல்லோரும் நன்றாக நடித்திருந்தனர். குறிப்பாக பெண் கதாபாத்திரங்கள் சங்கீதா மேம், பவானி, அபர்ணதி ஆகியோர் நன்றாக நடித்திருந்தார்கள். இந்தக் கதை சொல்லப்பட்ட விதம் மிக நன்றாக இருந்தது. சமீபத்தில் வந்து வெற்றியடைந்த சிறை படத்தை எடுத்துக் கொண்டால் அது சின்ன கன்டென்ட் தான். ஆனால் அந்தப் படத்தை மிக தெளிவாக சொன்னது மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படமும் அப்படி ரீச் ஆகும் என நினைக்கிறேன்.
பரத் நன்றாக செய்திருந்தார். அஜய் கார்த்திக் உங்கள் நடிப்பு மிக அழுத்தமாக இருந்தது. முதல் படம் போலவே இல்லை. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சாம் சி எஸ் உங்களுடைய பின்னணி இசை இந்தப் படத்துக்கு தூணாக இருந்தது. க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும். இன்று தமிழ்சினிமா சின்ன படங்களை மக்கள் விரும்பி பார்க்கும் இடத்திற்கு வந்திருக்கிறது. அதற்கு நிறைய திரையரங்குகள் ஆதரவும் தருகிறார்கள்.
சில படங்ககளுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்ற சிக்கலும் இருக்கிறது. அதேவேளையில் சின்ன படங்களுக்கு மக்கள் ஆதரவு தருவதையும் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் வந்த யூத் படத்தை சொல்லலாம். அது பெரிய வெற்றியடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இதெல்லாம் கேட்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்களும் தொடந்து நிறைய சின்ன படங்கள் எடுத்து வருகிறோம். என் தயாரிப்பில் இரண்டு படங்கள் இந்தாண்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். மக்களை நம்பித்தான் படம் எடுக்கிறோம். ஓடிடி நிறுவனங்கள் நமக்கு ஆதரவு தருகிறது, இல்லை என்பதை தாண்டி, தியேட்டர் தான் எங்களது நம்பிக்கை.
தயாரிப்பாளர்கள் செய்யும் முதலீடு எவ்வளவு முக்கியமோ, அது திரும்பி வர வேண்டும் என்பதும் முக்கியம். இந்த சூழலில் சின்ன சின்ன படங்களின் வெற்றி நம்பிக்கை தருகிறது. குறிப்பாக சிறை படத்தின் வசூல் பெரிய விஷயம். தெலுங்கு சினிமாவில் மட்டும் தான் சின்ன படம் பெரிய படம் என்று பார்க்காமல் படம் நன்றாக இருந்தால் ஓடும் என்ற நிலை இருந்தது. ஆனால் தமிழ் சினிமாவிலும் அது நடக்க துவங்கி இருப்பது மகிழ்ச்சி. அது காளிதாஸ் 2விலும் தொடர வேண்டும்." என்றார்.