’கலையை தணிக்கை செய்ய உரிமை இல்லை..’ - ஊடகங்களுக்கு கமல் முன்வைத்த முக்கிய கோரிக்கை!
கமல்ஹாசன், இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமை, CBFC அமைப்பின் பெயரை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றியதை நினைவூட்டியுள்ளார். 'தணிக்கை' என்ற சொல்லை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சினிமாவில் முக்கியமான ஆளுமை கமல்ஹாசன். சினிமா மீது தீவிரமான முன்னெடுப்புகள் எடுப்பதில் முதன்மையானவர் என்பதால், அது குறித்த பல கருத்துக்களையும் கூறுவது வழக்கம். திரைப்படங்களின் தன்மையை பொறுத்து அதற்கான சான்றிதழ் தரும் CBFC அமைப்பை, சென்சார் அல்லது தணிக்கை வாரியம் எனக் குறிப்பிடும் வழக்கம் தான் இன்று வரை தொடர்கிறது. ஆனால் The Central Board of Film Censors என்று இருந்த பெயர் 1983லேயே Central Board of Film Certification என மாற்றப்பட்டுவிட்டது என்பதை முன்வைத்து தணிக்கை என்ற சொல்லை தவிர்க்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார் கமல்.
இது குறித்து அவர் எழுதி இருக்கும் பதிவில் "ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் censor என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். Central board of film certification.
சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக்கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

