விஜய் சேதுபதி - சாய் பல்லவி படத்தில் ரஹ்மான் இல்லையா..? வதந்திக்கு மணிரத்னம் முற்றுப்புள்ளி!
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளர் அல்ல என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. லைகா உடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் நிறுவனங்களின் 23வது படமாகும்.
இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் மணிரத்னம். இவர் அடுத்ததாக விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் உலவி வந்தன. இந்நிலையில் இன்று அதன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான `தக் லைஃப்' படம் பெரிய தோல்வி அடைந்தது. அதன் பின் முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தான் இயக்க உள்ளார் என செய்திகள் வெளியானது. விஜய் சேதுபதியும் சமீபத்திய பேட்டிகளில் அதனை உறுதி செய்தார். இந்நிலையில் இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை லைகா உடன் இணைந்து தயாரிக்கிறார் மணிரத்னம்.
இதில் விஷயம் என்ன என்றால், கடந்த சில நாட்களாக இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார், மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி பிரிகிறது என தகவல்கள் பரவி வந்தது. அதை பொய் என நிரூபித்துள்ளது இன்று வந்துள்ள அறிவிப்பு. இன்னும் சொல்லப்போனால் அந்த வதந்திக்கு பதில் சொல்லத்தான் இந்த அறிவிப்பு உடனடியாக வந்துள்ளதாகவும் எடுத்துக் கொள்ளலாம். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 23வது படமாக உருவாகும் இப்படத்தில் மணிரத்னத்தின் புதிய தயாரிப்பு நிறுவனமான இந்தியா டாக்கீஸ் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
