தினேஷ், ஹரீஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா நடிப்பில் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் `லப்பர் பந்து'. இப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்து, வசூலிலும் பெரிய வெற்றி பெற்றது. இன்றோடு இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழரசன் பச்சமுத்து சமூக வலைத்தளங்களில் நன்றிக் குறிப்பை வெளியிட்டு, தனது அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் எனவும் அறிவித்திருக்கிறார்.
அவருடைய பதிவு பின்வருமாறு "நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
first show முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க. இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு… ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும். இப்டி என்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்!
ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்.. சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு… நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்" எனப் பதிவு செய்திருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து.
தொடர்ச்சியாக தனுஷ் அதிகம் கவனம் பெற்ற மற்றும் புதுமுக இயக்குநர்களுடன் கை கோர்த்து வருகிறார். தற்போது போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தாக அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இப்போது தமிழரசன் பச்சமுத்து படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.