நடிகர் மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது... பிரதமர் மோடி வாழ்த்து!
2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது, இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட உள்ளது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், தாதா சாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மோகன்லாலின் அசாதாரணமான கலைப்பயணம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது எனவும், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட மோகன்லால், இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பிற்காக கௌரவிக்கப்படுகிறார். அவரது நிகரற்ற நடிப்புத் திறமை, பன்முகத்தன்மை மற்றும் அயராத உழைப்பு ஆகியவை இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு பொற்கால தரத்தை நிலைநிறுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மோகன்லாலுக்கு பிரதமர் மோடி எக்ஸ தளத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இந்திய அரசால் 2001ம் ஆண்டு பத்ம ஸ்ரீ, 2019ம் ஆண்டு பத்ம பூஷன் ஆகிய விருதுகள் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது வழங்கும் விழா, செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு வழங்கப்படும். இந்த அறிவிப்பு, மலையாளத் திரையுலகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.