’ஐசிசி நரகத்திற்கு செல்லட்டும்’ |இந்தியா நிராகரிப்பு.. PCB எடுத்த முக்கிய முடிவு! வெளியான தகவல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இதில், பாகிஸ்தான் நிர்ணயித்த 127 ரன்களை, இந்திய அணி வெகு விரைவாகவே எட்டிப்பிடித்து வெற்றிவாகை சூடியது. எனினும், இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆட்டத்திற்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கலுக்காக பாகிஸ்தான் வீரர்கள் காத்திருந்தபோது, இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் காணப்படவில்லை. மேலும் இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடும் காட்சிகளும்கூட காணப்பட்டன. அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் கை கொடுக்க இந்திய அணியின் அறை நோக்கிச் சென்றபோதும், இந்திய வீரர்கள் வெளியே வராமல் கை குலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் அணியினர் அதிருப்தியடைந்தனர்.
முன்னதாக டாஸ் போடும்போது கூட இரண்டு அணி கேப்டன்களும் கைக்குலுக்கவும் இல்லை, ஆடும் 11 வீரர்கள் அடங்கிய ஷீட்டை பகிர்ந்துகொள்ளவும் இல்லை. போட்டியின் நடுவரான ஆண்டி பைக்ராஃப்ட் இரண்டு அணி கேப்டன்கள் கைக்குலுக்கிகொள்வதை தடுத்து நிறுத்தியதாகவும், அவரை புறக்கணிக்கவேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குற்றஞ்சாட்டியது.
தொடர்ந்து போட்டிக்குப் பிறகு பரிசளிப்பின்போதுகூட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா செல்லவில்லை. செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் கைக்குலுக்க மறுத்த இந்தியாவின் செயலை விமர்சித்தார்.
இந்தசூழலில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியை புறக்கணித்த பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசியக்கோப்பையை புறக்கணிக்க முடிவுசெய்ததாக முன்னாள் பாகிஸ்தான் வாரிய தலைவர் அதிர்ச்சிக்குரிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசியக்கோப்பையை புறக்கணிக்க முடிவுசெய்த பாகிஸ்தான்..
2025 ஆசியக் கோப்பையின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கைக்குலுக்க மறுத்த பின்னால் நடந்த நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி மனம் திறந்து பேசியுள்ளார்.
தற்போதைய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி இந்தியாவின் புறக்கணிப்புக்கு பிறகு விரக்தியில், ஆசியக்கோப்பை தொடரை புறக்கணிக்க முடிவுசெய்ததாகவும், சரிசெய்யமுடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அந்த முடிவை தடுக்க நெருக்கடியான நிலையில் தான் தலையிட்டு நிறுத்தியதாக நஜாம் சேத்தி கூறியுள்ளார்.
சமா டிவி உடன் பேசியிருக்கும் முன்னாள் பிசிபி தலைவர் சேத்தி, “இந்திய வீரர்கள் பாகிஸ்தானை புறக்கணித்த அந்த நேரத்தில், மொஹ்சின் நக்வி ஆசிய கோப்பையிலிருந்து விலக முடிவு செய்திருந்தார். அந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்திற்கு கீழ், நாம் புறக்கணிக்க வேண்டும். ஆசிய கோப்பை நரகத்திற்கு போகட்டும், ஐ.சி.சி நரகத்திற்கு போகட்டும் என்ற எண்ணமே பிசிபியில் இருந்தது. என் நண்பர்கள் என்னிடம், 'போகாதே, அவர்களுக்கு உதவாதே' என்று சொன்னார்கள். நான் நக்விக்கு உதவ செல்லவில்லை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உதவச் சென்றேன்.
அவர் முயற்சித்தது வெற்றியடைந்திருந்தால், பாகிஸ்தான் சரிசெய்ய முடியாத சேதத்தை சந்தித்திருக்கும். ஒருவேளை பாகிஸ்தான் விலக முடிவுசெய்திருந்தால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) எங்களுக்கு விலக அனுமதி அளித்திருக்கலாம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அபராதம் விதித்திருக்கலாம், வெளிநாட்டு வீரர்கள் PSL-ல் விளையாட மறுத்திருக்கலாம், மேலும் ACC ஒளிபரப்பு உரிமைகளில் $15 மில்லியன் இழப்பை சந்திக்க நேரிட்டிருக்கும்” என்று சேத்தி வெளிப்படுத்தினார்.
மேலும், "இது தனிநபர்களைப் பற்றியது அல்ல. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நேர்மையைப் பற்றியது. பாகிஸ்தான் விலகியிருந்தால், அது நீண்டகால நிதி வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கும்" என்று அவர் கூறினார்.