கிச்சா சுதீப் நடிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள `மார்க்' படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் சுதீப்.
படங்களில் சம்பளத்துக்கு மாற்றாக, Revenue Share முறையை பின்பற்றுவது குறித்து கேட்கப்பட்ட போது "நான் திரைத்துறைக்கு வந்து 29 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது Revenue Share பெற்றுக்கொள்ளும் நிலைமை இருக்கிறது. நாம் நல்ல நிறுவனங்களுடன் இணைந்து படம் செய்கிறோம். கோவிட்-க்கு பிறகான சினிமா வியாபார முறைகள் மாறியுள்ளன. படத்தின் மூலம் லாபம் இல்லை என சொல்லமுடியாது. லாபம் நிறைய உள்ளது. ஆனால் அதன் வியாபார கணக்குகளை கவனிக்க வேண்டும். ஒரு படம் நாங்கள் சேர்ந்து செய்யும் போது, படத்தின் பட்ஜெட், மற்ற நடிகர்களின் சம்பளம் போன்றவற்றில் சமரசம் செய்ய முடியாது. இப்படியான படங்களில் பெரிய தொகை பிரபலமான நடிகர்களுக்கு தான் போகிறது. அதை சமன் செய்ய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினால் தயாரிப்பாளருக்கு சுமை குறையும். Revenue Share என்பது அந்த தயாரிப்பு நிறுவனமும் உங்களோடு ஒரு சுமுகமான உறவு வைத்திருக்கும் போதுதான் செய்ய முடியும். அந்த வகையில் சத்யா ஜோதி நிறுவனத்துடன் என் உறவு மிக அற்புதமாக உள்ளது" என்றார்.
இப்படத்தில் யோகிபாபுவுடன் பணியாற்றியது பற்றி கூறியவர் "எங்கள் செட்டில் மிக பிஸியான நடிகர் என்றால் யோகிபாபு தான். அவருக்கு ஒரு கால் இந்த செட்டில், இன்னொரு கால் இன்னொரு செட்டிலும் இருக்கும். யோகிபாபு சார் இன்ஸ்டால்மென்ட்டில் தான் வந்து நடித்தார். ஒரு வண்டி வாங்கும் போது அதற்கான தொகையை தான் இன்ஸ்டால்மென்ட்டில் கொடுப்பீர்கள். ஆனால் அந்த வண்டியே இன்ஸ்டால்மென்ட்டில் வந்தால் எப்படி இருக்கும்? அப்படிதான் இவர் இன்ஸ்டால்மென்ட்டில் வந்தார். ஷூட் முடிந்து பேக்கப் என சொன்னதும் நாங்கள் கிளம்புவோம். திடீரென இயக்குநர் `சார் யோகி சார் வந்துட்டாரு, திரும்பி வாங்க. இப்போ விட்டுட்டா திரும்ப போயிடுவாரு' என சொல்வார். ஆனால் அப்படி காத்திருந்து பணியாற்றியதற்கு தகுதி உள்ள ஒரு கலைஞன் தான் யோகிபாபு" என்றார்.
ரசிகர்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் நடக்கும் மோதல்கள் குறித்து பேசியவர் "சினிமா என்பது பெரிய ஊடகம், அது ஒளிபரப்பாவது ஒரு பெரிய திரையில். என்றைக்காவது அந்த திரை உணர்ச்சிகளை வெளிக்காட்டி இருக்கிறதா? ரசிகர்களின் மோதலை ஒரு போதும் நம்மால் புரிந்து கொள்ளவோ, அதன் உண்மைத்தன்மையை கண்டடையவோ முடியாது. எனவே ஒவ்வொரு தனிநபருக்கும் பொறுப்பு வேண்டும். நாங்கள் போய் இதை செய்யுங்கள், இதை செய்யாதீர்கள் என ஒவ்வொரு முறையும் சொல்ல முடியாது. சினிமா என்பது ஒரு அழகான பொழுதுபோக்கு. அதை செய்வதுதான் எங்களது வேலை. இது போன்ற விஷயங்களுக்கு ரியாக்ட் செய்வது அல்ல" என்றார்.
இப்படத்தில் நடித்துள்ள ரோஷினி பிரகாஷிடம், படத்தில் உங்களுக்கு முக்கியமான பாத்திரமா அல்லது இங்கு அமர வைக்கப்பட்டதை போல, ஓரமாக அமர வைத்துவிட்டனரா? என ஒரு கேள்வி வந்தது. உடனடியாக ஓரமாக அமர்ந்திருந்த ரோஷினி மற்றும் தீபிஷிகாவை மேடையின் நடுவில் இருந்த இருக்கைகளில் அமர வைத்தார் சுதீப். பிறகு பேசியவர் "இந்த மாதிரி ஒரு கேள்வி கூட எங்கள் செட்டில் வரவில்லை. அதனால் தான் படம் நன்றாக வந்திருக்கிறது. இப்போது இப்படி அமர வைத்தது உள்நோக்கத்துடன் கூடியதல்ல. ஒரு கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் போது கொண்டாட்டம் தான் இருக்க வேண்டும். இப்படி அசௌகர்யமான கேள்விகள் கேட்டால் எப்படி? எங்கள் செட்டில் ஒருநாள் கூட ஒருவரை பற்றி இன்னொருவர் மரியாதைக் குறைவாகவோ, முதுகிற்கு பின்னால் பேசுவதோ நடந்ததில்லை" என்றார்.