`கத்தி' படத்தின் மாற்று க்ளைமாக்ஸ்! - ஏ ஆர் முருகதாஸ் உடைத்த ரகசியம் | A R Murugadoss | Kaththi
ஏஆர் முருகதாஸ் சமீபத்திய விருது விழாவில், தனது படங்களில் நகைச்சுவை மற்றும் மாற்று க்ளைமாக்ஸ் பற்றிய ரகசியங்களை பகிர்ந்தார். 'ரமணா' மற்றும் 'கத்தி' படங்களுக்கு மாற்று முடிவுகள் இருந்ததாகவும், அவற்றை எடுக்கவில்லை எனவும் கூறினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். அவரின் பல படங்கள் இன்று வரை கொண்டாடப்படும் கமர்ஷியல் பட வரிசையில் இருக்கிறது. சமீபத்திய ஒரு விருது விழாவின் போது, அவர் படங்களில் இடம்பெறும் நகைச்சுவை பற்றியும், ரமணா, கத்தி படங்களுக்கு வைத்திருந்த மாற்று க்ளைமாக்ஸ் பற்றியும் கூறி இருந்தார்.
ஒவ்வொரு படங்களிலும் இடம்பெறும் நகைச்சுவை பற்றி கேட்கப்பட்ட போது "எவ்வளவு சீரியஸான படமாக இருந்தாலும், நடுவில் ஏதாவது ஒரு பாத்திரத்தின் மூலமாக சின்னதாக நகைச்சுவை இருக்க வேண்டும் என நினைப்பேன். சின்ன வயதில் இருந்தே ஒரு காமெடி படம் செய்ய வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் அதை மட்டும் செய்தால் ஒரு சின்ன படம் என்ற எண்ணம் வந்துவிடும் என்பதால், அதை கட்டுப்படுத்தி ஆக்ஷன் மோடுக்கு மாறினேன். ஆனாலும் கிடைத்த இடங்களில் காமெடி செய்ய வேண்டும் என நினைப்பேன். அது இருந்தால் சின்ன ரிலாக்ஸ் எடுத்துவிட்டு மறுபடி சீரியஸ் மோடுக்கு பார்வையாளர்கள் தயாராவார்கள்" என்றார்.
பிறகு `ரமணா', `துப்பாக்கி', `கத்தி' படங்களுக்கு மாற்று க்ளைமாக்ஸ் இருந்ததா? எனக் கேட்கப்பட " `ரமணா' பொறுத்தவரை அதற்கு இன்னொரு க்ளைமாக்ஸ் யோசிக்க கூறினார்கள். எனவே நான் தான் தப்பே செய்யவில்லையே. தப்பு செய்தால் தானே மன்னிப்பு கிடையாது. நான் தப்பே செய்யவில்லை என்பது போல ஒரு மாற்று க்ளைமாக்ஸை தயாரிப்பாளரிடம் கூறினேன். ஆனால் அதை எடுக்கவே இல்லை. ஒருவேளை எடுத்திருந்தால் வைத்திருப்பார்கள். தப்பு செய்தால் தண்டனை என்பதை படம் முழுக்க கட்டமைத்துவிட்டு, அது எங்கும் உடைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
`கத்தி' படத்திலும் ஒரு மாற்று க்ளைமாக்ஸ் இருந்தது. அதில் சதீஷ் ராசிபலன் பார்க்கும் போது `உங்கள் ராசிக்கு இன்று வம்பு தேடி வரும்' என சொல்வார்கள் அப்போது தான் விஜய் அவரின் வீட்டுக்கு வருவார். இப்படித்தான் அந்தக் கதை ஆரம்பிக்கும். க்ளைமாக்சில் விஜய் சாரை கைது செய்து கல்கத்தா கொண்டு செல்வார்கள். இப்போது ரோலிங் டைட்டில் ஓடும். அப்போது சமந்தா டிவி பார்த்துக் கொண்டிருப்பார். அவரும் ராசி பலன் தான் பார்ப்பார் `நீண்ட நாள் விட்டுப்போன பகை வீடு தேடி வரும்' என சொல்லும் போது விஜய் வருவதாக இருக்கும். ஆனால் `யார் பெற்ற மகனோ நீ' பாடல் மிகப்பெரிய ஹிட்டாகிவிட்டது. எனவே அந்த உணர்வை கெடுப்பது போல் வைக்க வேண்டாம் என இந்த க்ளைமாக்ஸை எடுக்கவே இல்லை" என்றார்.

