சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, தொடர்சியாக சினிமா விமர்சனங்கள் செய்து, சினிமா பேசி, சினிமா வகுப்புகள் எடுத்து என சினிமாவும் சினிமா சார்ந்தும் இயங்கிவந்த சத்யேந்திரா (65) நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். யார் இந்த சத்யேந்திரா? யூட்யூபில் FDFS ரிவ்யூ பார்க்கும் பலருக்கும் இவரது முகம் பரிட்சயமானதாகவே இருக்கும். பெங்களூரை சேர்ந்த தெலுங்கு குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரியில் பயின்றது கன்னட இலக்கியமும், தத்துவவியல். B.A. in Drama, Diploma in French, German, Italian மற்றும் Spanish ஆகியவையும் படித்து தேர்ந்தவர். கல்லூரி நாடகங்களில் பல வேடங்களில் நடித்தவர் என்பதால் நடிப்பின் மீதும், அதன் மூலம் சினிமா மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு சினிமா பயணத்தை துவங்கினார்.
1977ல் வெளியான Rishyasringa கன்னட படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், பின்னர் Grahana என்ற படத்திலும் நடித்தார். 1982ம் ஆண்டு வெளியான `ஏழாவது மனிதன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சத்யேந்திரா தொடர்ச்சியாக `மண்வாசனை', `கடமை கண்ணியம் கட்டுப்பாடு', `சத்யா', `பாட்டுக்கு ஒரு தலைவன்', ப்ரியமானவளே', `விசில்' என பல படங்களில் துணை பாத்திரங்களில் நடித்த இவர் நிக் ஆர்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் அவர் மகன் நடித்து பன்னீர் செல்வம் இயக்கிய `18 வயசு' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சினிமாவில் ஒரு பயணம் இருந்தாலும், இவரை அதிகம் பேருக்கு சினிமா விமர்சகராகவே தெரிந்திருக்கும். புதுப்படங்கள் வெளியானால் கண்டிப்பாக அங்கு அப்படம் பற்றி பேச சத்யேந்திரா இருப்பார். அப்படி அவர் விமர்சிக்கும் விதம், குறிப்பிடும் விஷயங்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். ஒருகட்டத்தில் இவரே தன்னுடைய பெயரில் ஒரு யூட்யூப் சேனல் துவங்கி சினிமா விமர்சனங்களை பதிவிட்டத் துவங்கினார். சமீபத்தில் வந்த சூர்யாவின் `கருப்பு' படம் வரை பல விமர்சனங்களை பதிவிட்டுள்ளார்.
துவக்க காலங்களில் பல இயக்குநர்களிடமும் சென்று நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்து திருந்திருக்கிறார் சத்யநாராணாயா. அதனை நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு அஞ்சலியை பதிவு செய்திருக்கிறார். அந்த நடிப்பு தாக்கம் குறையாததாலோ என்னவோ குறும்படத்தில் நடிக்க கேட்டு வரும் மாணவர்களின் படங்களில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்து கொடுப்பார். திரைப்படங்கள் மேல் ஆர்வம் கொண்டோரிடம் நிறைய உடையாடுவது, அவர்களை சென்னை பிலிம் சொசைட்டி, ரஷியன் கல்சுரல் சென்டர், அமெரிக்கன்/பிரெஞ்ச் சென்டர் எனப் பல இடங்களில் நடக்கும் திரைவிழாக்களுக்கு அழைத்து சென்று உலக சினிமாக்களை அறிமுகம் செய்வது போன்ற பல விஷயங்களை செய்திருக்கிறார். சினிமா இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளூர அவருக்கு இருந்தாலும், அதற்கான வாய்ப்பு குறும்படம் என்ற அளவிலேயே நின்று போனது.
சினிமா பற்றி கொடுக்கும் பேட்டிகளில், எடுக்கும் வகுப்புகளில் இருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தவர், இறுதி வரை தன்னுடைய பொருளாதார நிலைபற்றி கவலைப்பட்டது கிடையாது. நான் எங்கு போக வேண்டும் என்றாலும் நடந்தே கூட சென்று விடுவேன். என்னுடைய நடிப்பை பார்த்து ஒரே ஒருவர் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினால் அதுவே எனக்கு பெரிய விஷயம் என்பார். அப்படி சினிமா சினிமா என்று ஓடியவருக்கு இன்று மரணம் ஓய்வை கொடுத்திருக்கிறது. அவரது உடலை பெற ரத்த சொந்தங்கள் யார் இருக்கிறார் என்று கூட கண்டுபிடிக்க முடியாத நிலை. ஆனால் அவர் சினிமா மேல் கொண்டிருந்த பற்றின் காரணமாக, பலரும் அவரது இறுதி சடங்கை செய்ய முன் வருகிறோம் என முயற்சிகளை எடுத்து வந்தனர். இப்போது சத்யேந்திராவின் சகோதரிக்கு தகவல் கொடுப்பட்டு அவர் சென்னை வருகிறார். நாளை அவருக்கான இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. சினிமாவுக்காக ஓடிய அவரது உடலும், ஆன்மாவும் சாந்தி அடையட்டும்.