Kantara Chapter 1 Sampath Ram
கோலிவுட் செய்திகள்

மேக்கப்-க்கு ஒன்றரை மணிநேரம், கலைக்க ஒரு மணிநேரம் - காந்தாரா அனுபவம் சொன்ன சம்பத் ராம் | Sampath Ram

'வீரப்பன் அட்டஹாசா' படத்தில் நான் நடிக்கும் போது, அந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி கடைசி அசிஸ்டெண்டாக பணியாற்றினார். அப்பொழுது இருந்து அவருக்கும் எனக்குமான பழக்கம் தொடங்கியது.

Johnson

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியிருக்கும் படம் `காந்தாரா சாப்டர்-1'. காந்தாரா படத்தின் முன் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் ருக்மிணி, ஜெயராம், குல்ஷன் தேவய்யா எனப் பலர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் துணை பாத்திரங்களில் நடித்து வரும் சம்பத் ராம் இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Kantara: Chapter 1

இப்படத்தில் நடித்தது பற்றி சம்பத் ராம் கூறுகையில் " 'காந்தாரா சாப்ட்டர்-1' படத்தில் மலைவாழ் மக்கள் தலைவனாக, குறைந்த காட்சிகள் வந்தாலும், நிறைவான கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்பதில் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன். முகம் மற்றும் உடல் முழுவதும் கருப்பு கலர் மேக்கப்பில், குறிப்பாக முகத்தில் முதுமையான தோற்றத்துக்கான மேக்கப் போட்டு இருப்பேன். மேக்கப் போடுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். கலைப்பதற்கு ஒரு மணி நேரமாகும். மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் மேக்கப்பிற்காக ஒதுக்க வேண்டும். மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தில் நடித்துள்ளேன்.

கன்னடத்தில் 'சயனைடு' என்ற படத்தில் முதன்முதலில் நடித்திருந்தேன். அப்படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். அவர் அடுத்து இயக்கிய 'வீரப்பன் அட்டஹாசா' படத்தில் நான் நடிக்கும் போது, அந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி கடைசி அசிஸ்டெண்டாக பணியாற்றினார். அப்பொழுது இருந்து அவருக்கும் எனக்குமான பழக்கம் தொடங்கியது. `சயனைடு' படத்தில் என்னுடைய கதாபாத்திர பெயர் சுரேஷ் மாஸ்டர், எனவே எப்பவுமே என்னை மாஸ்டர் என்றுதான் அழைப்பார் ரிஷப். சென்னை வந்த போது எங்கள் வீட்டுக்கும் வந்தார். பிறகு அவர் இயக்கிய 'காந்தாரா' படம் வந்த போது, அவரை பாராட்டி போன் செய்தேன்.

'காந்தாரா சாப்டர் -1' பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்துவிட்டு, ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு போன் செய்து இந்த படத்தில் நான் நடித்தால் சந்தோஷப்படுவேன் என்று சொன்னேன். உடனே அழைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. என்னை அழைத்து இந்த படத்தின் கெட்டப்பை ஒன்றரை மணி நேரம் மேக்கப் செய்து பார்த்து ஒப்பந்தம் செய்தார். கிட்டத்தட்ட இந்த படத்திற்காக ஒரு வருடம் பயணித்துள்ளேன். 26 நாட்கள் நடித்துள்ளேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நடித்துள்ளேன்.

`காந்தாரா சாப்டர்-1' தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, நன்றாக ஓடிக் கொண்டிருப்பதை நினைத்து, அதில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். மீண்டும் ஒரு முறை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்கிறார் நடிகர் சம்பத்ராம்.